802.
|
நாணனொடு
காடனும்போய் நாகனுக்குச்
சொல்லியபின்
ஊணுமுறக் கமுமின்றி யணங்குறைவா
ளையுங்கொண்டு
பேணுமக னார்தம்பால் வந்தெல்லாம் பேதித்துக்
காணுநெறி தங்கள்குறி வாராமற் கைவிட்டார். |
153 |
(இ-ள்.)
வெளிப்படை. நாணனோடு காடனும் போய்,
நிகழ்ந்த செய்திகளை நாகனுக்குச் சொல்லிய பின்னே, உணவும்
உறக்கமும் இன்றித் தேவராட்டியையுங் கூட அழைத்துக்கொண்டு
வந்து, தம்மை மறந்து இறைவனையே பேணுகின்ற திருமகனாரிடம்
தாம் அறிந்தவாறெல்லாம் அவரது மனதைப்பேதித்துக் காணு
நெறியிலே தாங்கள் எண்ணிய குறியின் வசத்தில் அவர்
வாராதபடியால் அவரைக் கைவிட்டு அகன்று போயினர்.
(வி-ரை.)
நாணனொடு காடனும் - இவ்விருவரும் ஒன்று
போலவே திண்ணனாரின் அடிபிரியாவிடலைகளான
மெய்காவலாளராயினும் அவர்க்குள் நாணனே மூத்தவனும்
பலவகையாலும் ஏற்றமுடையவனுமாக உள்ளான்; ஆதலின்
நாணனொடு என்று ஒடு வுருபு நாணன்பாற் சார்த்திச் சிறப்பிற்
கூறினார். ஆசிரியனொடு மாணாக்கன் வந்தான் என்பதுபோலக்
காண்க. 743ல் உரைத்தவை பார்க்க. காடனும் - உம்மை
இசைநிறை.
போய்-
முகலியாற்றுக் கரையின் புதுமலர்க்காவி (763)லிருந்து
பல காதங்களில் உள்ள வேட்டைக்காடு சென்று ஏவலாட்களையும்
கொண்டு தம் ஊராகிய உடுப்பூருக்குப்போய். 769 பார்க்க.
ஊணும்
உறக்கமும் இன்றி - தன் மகனார் தேவமயக்கங்
கொண்டு உலகை மறந்த நிலையிலிருந்தமை கேட்டுத் தந்தையாகிய
நாகன் மிகக் கவலைப்பட்டானாதலால் அவனுக்கு உணவு வேட்கை
இல்லை, தூக்கமுமில்லையாயின என்க. வேறு கவலையி
லாழ்ந்தாருக்கு உணவும் உறக்கமும் வேண்டப்படா தொழிதல்
உலகியல்பாம். இங்குப் பிள்ளைப் பேறே கிடைக்கக்கூடாத மிக்க
முதுமையில் அருமையிற் பெற்ற ஒரே மகனாராயும், தன்குடி
தாங்கவல்லாராயும், முன்னை நாளிற்றானே தன் மரபிற்கு உரிய
வரையாட்சியைக் கைக்கொண்டவராயும் நின்ற மகனாரை இவ்வாறு
இழக்கநேர்ந்த நாகனுக்குக் கவலை மிகப் பெரிதாயிற்றென்க.
அணங்குறைவாள் - தேவராட்டி. 696 பார்க்க.
பேணும்
- தன்னால் விரும்பிப் போற்றப்படும் என்றும்,
தன்னைப் பேணுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த என்றும்
உரைப்பாருமுண்டு.
எல்லாம்
பேதித்து - தாமறிந்த எல்லாவகையாலும் அவரது
மனத்தை அந்நிலையினின்றும் திரிவுபடுத்தி. காணும் நெறி
- தாம்
கண்டபடிகாணும் உலகநெறி. தாங்கள் பெறவேண்டிய நன்மை.
இதற்கு உலகியலுக்கு வேறுபட்டுத் தோன்றும் அருளியல் நெறியில்
நிற்றலால் என்றலுமாம்.
தங்கள்குறி
வாராமை - தமது நினைவுக் குறியின் முகமாகத்
திரும்பி மனது செல்லாமையால். வாராமை -
வாராமையால். தங்கள்
எண்ணம் நிறைவேறாத படியால் என்பர் மகாலிங்கையர். இவர்களது
குறி உலக நிலைக்குறி. திண்ணனாரது குறியோ வேறாயிருந்தது. அது
"உண்மை நின்ற பெருகுநிலைக் குறியாளர் அறிவு தன்னை"
(திருச்செங்காட்டங்குடி - திருத்தாண்டகம் - 3) என்றபடி
தேவர்நிலைக் குறியாய் நின்றமையால் இவர்களது குறியில் வாராது
நின்றதாம். இதற்கு இவ்வாறன்றித் தங்கள் தெய்வத்தை முன்னிட்டுப்
பார்க்கும் குறி கைவராமல் என்றும், குறியாவது தெய்வம்
ஆவேசிக்கச் செய்து தேவராட்டி வாயாற் கேட்கும் குறிகளும்,
மலைநென் முதலியவற்றை எடுத்து ஒற்றை இரட்டைபார்த்தல்
முதலியனவுமாம் என்றும் உரைப்பாருமுண்டு. அப்பொருட்கு,
அறிந்தவாறெல்லாம் பேதித்தும் இப்போது அவரது
நிலைதிரியாமைகண்ட நாகன் முதலியோர் இனிமேல்
எக்காலத்திலாவது அவர் தம் வயமாய்த் திரிதல்கூடுமோ என்று
குறிபார்த்தனர் என்பர்.
கைவிடுதல்
- தொடர்பு அறவே விட்டொழித்தல். கைகூடு
மென்புழிப்போலக் கை என்பது உபசர்க்கம் போல்வதோர்
இடைச்சொல். "கொல்லாது சூலை நோய் குடர்முடக்கித் தீராமை,
எல்லாருங் கைவிட்டார்" (திருநா - புரா - 57), "கடலி னஞ்சமு
துண்டவர் கைவிட்டால், உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே"
(தனித் திருக்குறுந் தொகை - 4) முதலிய திருவாக்குக்கள் காண்க.
153
|