803.
|
முன்புதிருக்
காளத்தி முதல்வனா ரருணோக்கால்
இன்புறுவே தகத்திரும்பு பொன்னானாற்
போல்யாக்கை
தன்பரிசும் வினையிரண்டுஞ் சாருமல மூன்றுமற
அன்புபிழம் பாய்த்திரிவா ரவர்கருத்தி
னளவினரோ? |
154 |
(இ-ள்.)
முன்பு - முன்னர்; திருக்காளத்தி........நோக்கால் -
திருக்காளத்தியப்பரது அருட்டிரு நோக்கம் எய்தியதனாலே;
இன்புறு............ போல் - இன்பம் உறுகின்ற பரிசன வேதியினால்
இரும்பானது பொன்னாயினாற் போல; யாக்கை.......அற -
யாக்கையின் தன்மையுங், வினைகளிரண்டும், சாரும் மலம் மூன்றும்
அறுதலால்; அன்பு பிழம்பாய்த் திரிவார் - முன்னைப் பசுபோத
உருவம்மாறிச் சிவபோத வடிவமாகத் திரிவாராகிய திண்ணனார்;
அவர் கருத்தின் அளவினரோ? நாகனும் தேவராட்டியும் முதலிய
வனவேடர்கள் கருத்தின் அளவில் அமைவரோ? அமையார்.
(வி-ரை.)
இது கவிக் கூற்று.
முன்பு-
திண்ணனார் திங்கள்சேர் சடையார் தம்மைச்
சென்று காணுதற்கு முன்னே (753). முன்னை நாளில் என்றுரைப்பாரு
முண்டு.
முதல்வனார்
- பதி - பசுபதி - எல்லார்க்கும் முதல்வர்.
அருள்நோக்கால்
- அருட்பார்வை எய்திய காரணத்தாலே.
"அருட்டிரு நோக்கம்" (753). முதல்வனார் திண்ணனாரை
ஆட்கொண்டதிறத்தையும் அதன் விளைவுகளையும் அநுவதித்துத்
தாம் கூறுமுகத்தால் இங்கு எடுத்துக் கூறினார். 753-ம் திருப்பாட்டிற்
திண்ணனார் சிவவொளி நீழலில் அன்புருவமாயின இயல்பைக்
காரண காரிய விளைவுமுறையில் விளக்கின ஆசிரியர், இங்கு
இப்பாட்டால் அந்நிலையின் உள்ளுறையாகிய உண்மையைத் தாம்
கண்டவாறு நாமும் கண்டு உய்யும் பொருட்டுத் தெளிய விரித்து
உணர்த்துகின்றார். 806-ம் திருப்பாட்டில் அதனையே இறைவன்
சிவகோசரியார் அறியக் காட்டுகின்ற நிலையைக் கூறுவார்.
இன்பு
உறு வேதகம் - இன்புஉறு- இம்மையின்பம்
பொருந்தச் செய்யும். உறு - உறுவிக்கும் எனப் பிறவினைப்
பொருளில் வந்தது. உறு - உறுதற்கேதுவாகிய என்றுரைப்
பினுமமையும். வேதகம் - வேதிப்பது - வேறுதன்மைப் படுத்துவது.
இரதகுளிகை என்பர். "வெந்தழலி னிரதம்வைத் தைந்துலோ
கத்தையும் வேதித்து விற்றுண்ணலாம்" என்ற தாயுமானார் பாடலுங்
காண்க. "வேதியாதவர் தம்மை வேதிப்பன" (339) என்றவிடத்
துரைத்தவையும் காண்க.
வேதகம்-
என்பதை வேதி எனவும் வழங்குவர். அது
தரிசனவேதி, பரிசனவேதி என இருவகைப்டும். இங்கு
இன்புறுவேதகம் என்றது பரிசனவேதி. தரிசனவேதியாவது தன்
பார்வைக்குட்பட்ட பொருளைத் தன்மய மாக்குவது. இது குருவின்
உபகாரமாகிய சாட்சுஷீ தீக்கையால் வினைவதாம். கண்ணேறு -
கண்ணூறு - கண்மிச்சில் - திருட்டி என உலகவழக்கிற் காணப்படும்
விளைவுகளையும் உன்னுக. இங்கு அருள் நோக்கமானது
மலமுடைய ஆன்மாவை மலநீக்கி வேறுபடுத்திக் கறைநீங்கிய தூய
செம்பொன்போல ஆக்குதலின் அதற்கு வேதகத்தின் செயல்
உவமிக்கப்பட்டது.
யாக்கை
தன்பரிசு - யாக்கை - கட்டப்படுவது. யா
-
பகுதி; ஐ - செயப்படு பொருள் விகுதி. நரம்பு முதலியவற்றாற்
கட்டப்பட்டமையின் இப்பெயர் பெற்றது. "கால்கொடுத் தெலும்பு
மூட்டிக் கருநரம் பாக்கை யார்த்துத், தோலுடுத்துதிர மட்டித்
தொகுமயிர் மேய்ந்த கூரை" (திருநேரிசை - திருக்கொண்டீச்சரம்
- 3) என்ற அப்பர் சுவாமிகள் தேவாரமும், "கட்டு முறுப்பும்" என்ற
உதாரண வெண்பாவினுரையுங் (சிவஞானபோதம் - சூ. 2 - அதி. 1)
காண்க. யாக்கை தன்பரிசு - உடம்பின் தன்மை.
மாயேயங்களாகிய தநு, கரணம், புவனம், போகம் என்ற நான்கனுள்
தனுவும் கரணங்களுமாகிய இரண்டும் இங்குக் குறிக்கப்பட்டன.
இவற்றின் பரிசு அறுதலாவது அருணோக்கம் பெறுதற்கு
முன்பு
வினைக்கீடாக வரும் ஏகதேச உணர்வை விளக்கிநின்றது
போலல்லாது, கண்ணுக்குப் பகல் விளக்குப்போலத் திருவருளாகிய
பேரொளியினுள் அடங்கி நிற்றலாம்.
வினை
இரண்டாவன - புனருற்பவத்துக்கேதுவாக உயிரால்
ஈட்டப்பட்ட அறம் பாவங்கள்; இவற்றினியல்பைத் "தன்மமோ
டதன்ம மாகி" (சூ. 2. 39) என்னும் சிவஞானசித்தித்
திருவிருத்தத்தாலறிக. இவற்றின் அறுதலாவது இவைதம்
பயனாகிய
இன்பதுன்பங்களைத் தாராதொழித்தல். அதாவது இவற்றின் பயன்
உயிரினைப் பற்றாது உடலூழாய் ஒழிதல்.
சாரும்மலம்
மூன்று - ஆணவம், மாயை, கன்மம் என்பன.
இவற்றுள் ஆணவமாவது சகசமலம் எனப்படும். "இச்சகசமலம் -
ஞானதிரோதகமாய்த், திரவியமாய், அறியாமைக் குணத்ததாய்ச்,
செம்பிற்களிம்புபோல உயிரின் குற்றமாய், அநாதிபந்தமாய்ச்,
(சடமுமாய்ப் பலவுமாயி னழிவெய்துமாகலின் அநாதிபந்தமாதல்
பெறப்படாமையின்) ஒனறேயாய், விஞ்ஞானகலர் பிரளயாகலர் சகலர்
எனப்படும் பாகுபாட்டிற் கேதுவாய், உயிர்கள்தோறும் தனித்தனி
வெவ்வேறாய் மறைத்து நின்று தத்தங்கால வெல்லையி
னீங்குவனவாகிய சக்திகள் பலபலவுடைத்தாய், உயிர்கள்
மூன்றவத்தைகளும் படுதற்கு மூலகாரணமாய், நித்தமாய்,
வியாபகமாய், வியாபக உயிர் அணுத் தன்மைப்படுமாறு
செய்தலின் ஆணவமென்னும் பெயர்த்தாய்ப் பசுத்துவம் பசு
நீகாரம் - மிருத்தியு - மூர்ச்சை - மலம் - அஞ்சனம் - அவித்தை
- ஆவிருதி - என்றற் றொடக்கத்துக் காரணக்குறிகளுமுடைத்தாய்
நிற்பது எனவும், படலம் படர்ந்தகண் ஞாயிற்றின் சந்நிதியினிற்பினும்
படலத்தான் அவ்வொளியையிழந்து இருளினழுந்துமாறுபோல,
முதல்வன் சந்நிதியினிற்பினுஞ் சோபானமுறையி னறிவிக்க லறியுந்
தன்மைத்தாய உயிர், அநாதியே யறிவித்தால் அறியமாட்டாமையின்,
அம்மாட்டாமையான் அவ்வறிவை யிழந்து அறியாமையாய்
அழுந்துதலின் அஃதவ்வுயிர்க்குப் பந்தமாயிற்றெனவு முணர்க" என்ற
சிவஞானபோதச் (4சூத் - 2 அதி) சிற்றுரையான் இதன்
தன்மையறியப்படும்.
கன்மம்
- இங்கு மூலகன்மங் குறித்தது. இதுவே
முதலுற்பவத்திற் சூக்குமதேகம் பெறுதற்கு ஏதுவாயது; இதனை,
"முந்துற்ற - நெல்லுக் குமிதவிடு நீடு செம்பிற் காளிதமுந்,
தொல்லைக் கடறோன்றத் தோன்றவரு - மெல்லா, மொருபுடை
யொப்பாய்த்தா னுள்ளவா றுண்டா, யருவமா யெவ்வுயிரு
மார்த்தே-யுருவுடைய, மாமணியை யுள்ளடக்கு மாநாகம்
வன்னிதனைத்,தானடக்குங் காட்டத் தகுதியும் போன் - ஞானத்தின்,
கண்ணை மறைத்த கடியதொழி லாணவத்தா, லெண்ணுஞ்
செயன்மாண்ட வெவ்வுயிர்க்கு - முண்ணாடிக், கட்புலனாற்
காணார்தங்கைகொடுத்த கோலேபோற், பொற்புடைய மாயப்
புணர்ப்பின்கண் முற்பாற், றநுகரண மும்புவன முந்தந்து"
என்னும்
போற்றிப் பஃறொடையானும், "செம்புறுகளின்பென வநாதிமல மூழ்கி"
என்னும் செப்பறைப்பதி அகிலாண்ட நாயகி பதிகச் செய்யுளானும்
உணர்க.
மாயையாவது
இருவினைப்பய னனுபவித்தற் பொருட்டு
வரும் தநுகரண முதலிவற்றுக்கு முதற் காரணமா யருப்பது.
இம்மலங்களின்
காரியங்களாவன : - மூலமலங்
காரியவேறுபாட்டான் எழு வகைப்படும். அவையாவன : மோகம்,
மதம், அராகம், கவலை, தாபம், வாட்டம், விசித்திரம் என்பனவாம்.
"..... இனி, இருவினையின் காரியமாவன இன்பதுன்ப முதலாயின.
மாயையின் காரியமாவன தநுகரண முதலாயின" என்று
மாபாடியத்துட் (2 சூ - 2 அ) கூறியவாற்றான் அறிக.
ஆணவமறுதலாவது
ஞாயிற்றின் ஒளிதோன்றியபோது
இருள் அடங்கி நிற்றல் போலத் திருவருள் உயிர்களிடத்து
வெளிப்பட்டபோது, அதாவது "விறகிற்றீயினன் பாலிற்படு
நெய்போல, மறைய நின்றுளன் மாமணிச் சோதியான், உறவு
கோனட்டுணர்வு கயிற்றினான், முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே"
(அப்பர்சுவாமிகள் - தனித் திருக்குறுந்தொகை - 10) என்றபடி
முன்னின்றபோது, அதனுள் தனது மறைத்தற் சத்தி மடங்கி அடங்கி
நிற்றல். மாயை கன்மங்க ளறுதல் மேல் உரைக்கப்பட்டது.
சாரும்
- அநாதியே உயிர்களைச் சார்ந்து நிற்கும்.
முத்தியில் இவை நீங்குதலால் இவை உயிர்க்கு இயற்கையன்றென்பது தெளியப்படும்.
மலம்
மூன்றும் அற - மேலே சொன்னவாறு மும்மலங்களும்
தத்தம் காரியங்களைச் செய்யா தொழிய
இங்குத் திண்ணனார்க்கு,
நான் வேட்டையாடி அமுது
படைப்பேன்; நான் இரவில் இறைவரைக் காப்பேன் என்ற உணர்வும்,
உடலும், அகக்கரண புறக்கரணச் செயல்களும் இருந்தன. இவற்றோடு
அவர் உலகிற் றிரிந்து செயல் செய்தனர். இவை மும்மல
காரியங்களன்றோ? எனின், அன்று என்றபடியாம்.என்னை? உடலும்
உடற்செயலும், அவ்வுணர்வும் இருந்தும் தம் பொருட்டு யான்
என்பதும் எனது, எனதுடல் முதலிய உணர்வும் இல்லை.
ஊனில்லையேல் நான் இளைப்பேன் உறக்கமில்லையேல்
ஓய்வில்லாமையால் களைப்பேன். இரண்டுமில்லையேல் முடிவில்
நான் இறப்பேன் என்பனவாதி யுணர்வுகள் இல்லையாயின.
"அவனுடைய அறிவெல்லாம் நமையறியு மறிவு" (806) என்றதனால்
அவருடைய உணர்வு முழுமையும் தேவரையே அறிந்தன; தம்மை
உணரவில்லை. தம் முணர்வு என்னும் ஆணவம் அவரிடத்துச்
சிவானந்த அனுபவத்துக்கு நிமித்தமாய் மாத்திரையாய் நின்றது.
இனி, வேட்டையும்
போக்குவரவு புரிதலாதி செயல்களும்
இருந்தும் அவை தம்பொருட்டு நிகழவில்லை. "அவனுடைய
செயலெல்லாம் நமக்கினியவாம்" (806) என்றதனால் இச்செயல்கள்
வினைப்பயன்களைத் தராமலும், மேன் முளையாமலும் நின்றன.
வினைக்கீடாக உடம்புகொண்ட பிராரத்தம் அவ்வுடலுள்ளளவும்
இருக்குமாயினும், அவர் அன்புபிழம்பாய்த் திரிவாராதலானும், தம்
அனுபவத்திற்காக ஐம்புலன் வழியே அறிவு செல்லாமையானும்,
அஃது உடலூழாதல் மாத்திரையாய் ஒழிந்தது. முன் ஈட்டப்பட்டு
அனுபவிக்க எஞ்சிநின்ற சஞ்சிதம் முன்பு
முதல்வனார்
அருள்நோக்கால் தீப்பொறிபட்ட பஞ்சுப்பொதிபோல்
எரிந்தொழிந்தது. ஆகாமியம் இறைபணி நிற்றலால்
மேல் ஏறாமல்
ஒழிந்தது. எனவே கன்மமாகிய போக்கு வரவு புரிதல் இருந்தும்
இருவினைப் பயனில்லையாயற்றன என்க.
மாயாமல
காரியங்களாய மாயேயங்கள் எனப்படும் உடலும்
கரணங்களும் தம்பரிசு வேறாயின. இறைவனது திருமலர்க்கை
தீண்டப்பெற்ற சண்டீசர் "மாயை யாக்கையின்மேல்
அளவின் றுயர்ந்த சிவமயமாய்ச் - சூழ்ந்த
வொளியிற்றோன்றியது"
(சண்டீசர் - புரா - 55) போலவும், "ஊனுயிர் வேறு செய்தானொடித்
தான்மலை யுத்தமனே" (திருநொடித்தான்மலை - 1) என்று
ஆளுடைய நம்பிகள் அருளியநிலை போலவும், இவரது யாக்கை
முதல்வனா ரருள்நோக்கால் ஒளியின் நீழல் அன்புருவமாயிற்று.
உடலும் உட்கரண புறக்கரணங்களும் உள்ளனவாயினும், அவை
செயல் செய்தனவாயினும், இங்கு "நஞ்செய லற்றிந்த நாமற்ற
பின்னாதன், றன்செயல் தானேயென் றுந்தீபற" என்ற நிலையில்
திண்ணனார் சரித்தனராதலின் மாயாமலம் ஆன்மாவுக்குத்
தன்
காரியமாகிய தத்துவங்களைத் தோற்றி விளக்குப்போல வுதவும்
செயல் வேண்டப்படுவதில்லையாய் ஒழிந்தது; என இவ்வாறு மல
மூன்றுமற்ற தன்மை கண்டுகொள்க.
மல மூன்றும்
அற - இனி,
இதற்கு இவ்வாறன்றி யாக்கைதன்
பரிசு என்ற மாயாமலமும், வினையிரண்டும் என்ற கன்மமலமும்,
சாருமலம் என்றதனால் ஆணவ மலமும் ஆகிய மூன்று மலங்களும்
அற என்றுரைப்பாருமுண்டு. சாருமலமொன்றும் என்பது
பாடமாயின், மேற்சுட்டிய மாயை கன்மங்களோடு ஆணவமாகிய
சகசமல மொன்றும் என வுரைத்துக் கொள்க. இவ்வாறு
கொள்ளுங்கால், பெத்த நிலையில் ஞான திரோதகமாய்
ஆன்மாக்களின் அறிவை மறைத்து நின்ற ஆணவம், முத்திநிலையில்
தனது மறைத்தற்சத்தி மடங்கிய வழியும், தானழியாது நிற்றல்
நோக்கியும், இது பலவாதலின்றி எல்லாவுயிர்களிடத்தும் நிற்கும் பல
சத்திகளையுடைய தொன்றே யாதல் நோக்கியும் ஒன்றும்
என்று
சிறப்பித்து இறுதியில் வைத்தார் என்றுரைத்துக் கொள்க.
அன்பு
பிழம்பாதல் - அன்பே வடிவமாயிருத்தல்.
‘பொருவிலன் புருவமானார்' (753) என்றவிடத்துரைத்தவை பார்க்க.
பின்னர் "அவனுடைய வடிவெல்லா நம்பக்க லன்பு" (806) என்பதும்
காண்க.
திரிவார்
- சரிப்பவர். திரிதல் - சரித்தல் - போக்கு வரவு
புரிதல். உலகில் உடலோடுகூடி உட்கரண புறக்கரணங்களாற் செயல்
செய்திருத்தல். திரிதல் - மாறுபடுதல் என்றுகொண்டு
திரிவார் -
மாறுபடுபவர்; ஆணவத்தோ டத்துவிதமாதலின்றி மெய்ஞ்ஞானத்
தாணுவினோ டத்து விதமாய்ச் சார்ந்து மாறுபட்டவர்
என்றுரைப்பாரு முண்டு.
அவர்
கருத்தின் அளவினரோ? அவ்வேடர்களது
கருத்தின் அளவினுள் அமைவரோ? அமையார் என்பது. இவரது
நிலை அவர்கருதி அளவுபடுத்தும் தன்மையதன்று. அவர்கள்
கருதவும் கூடாத நிலையினராதலின் அவர்களறிந்து பேதித்த
செயல்களின் குறியில் வாராதவராயினர் என்பது குறிப்பு. இவரது
"நிலையிவ்வாறு அறி நீ" என்று இறைவனார்காட்டச் சிவகோசரியார்
கண்டனர் என்பது பின்னர்க் காணப்படும். ஆதலின்
அவர்காட்டாக்காற் பிறர் எவர்க்கும் எவ்வாற்றானும்
கருத்தினளவுக்குட் படாததாம் என்பது. சாமானியரான அவ்வேடர்
கருத்தின் அளவிலே வருவரோ? என்றுரைப்பாருமுண்டு. 154
1இவற்றுள்,
மோகம், மலம் முதலிய அறுவகைக்கட்டு
நீங்குங்காறும் ஆன்மாக்களோடு சகசமாயுள்ளது. மோக மில்வழி,
ஏனை மத முதலியன நிகழாமையின் அது முதன்மைத்தாதல் அறிக.
அம்மோகமாவது, கொள்ளற்பாலது இது, நீக்கற்பாலது
இதுவென
நூன்முகத்தால் உணர்ந்தும், அரிவையர் முதலிய விடயங்களின்
மயங்குதற் கேதுவாயது. மதமாவது தன்னாலெய்தப்படும்
அரிவையைத் தானே புகழ்ந்து இவளின் மேற்பட்ட மகளிர்
உலகத்திலில்லை என மதித்தற் கேதுவாயது. அராகமாவது,
அவள்பால் மேன்மேலும் ஆசைமிகுதற் கேதுவாயது. கவலையாவது
ஊழ்வலியால் அவளைத் தணந்தவழிக் கண்ணீர்விட்டு அழுது
பெரிதுந் துன்பமுற்றுக் கவலுதற் கேதுவாயது.
தாபமாவது அதனால்
உள்வெதும்பித் தபித்தற் கேதுவாயது. வாட்டமாவது
அங்ஙனம்
அலறியும் ஆற்றியும் உள்வெதும்புதலான் மூர்ச்சையுற்று உள்ளமும்
உடம்பும் வாடுதற்கேதுவாயது. அரிவையர்மேல் வைத்துக்
காட்டியது உபலக்கணமாதலின், விடயந்தோறும் இவ்வாறு
கண்டு கொள்க. விசித்திரமாவது தான்பெற்ற உலக வாழ்க்கையை
நோக்குந்தோறும் இவர் எமக்கு உரிமைச் சுற்றத்தார்; இவள்
உரிமையுடைய மனைவி; ஆடை அணி பொன் முதலிய
செல்வங்களிற் குறைவில்லை; மனை கழனி முதலிய நிலங்களிற்
குறைவில்லை; இனிப் பெறக் கடவதென்னை? யெனவும், என்
குடும்பத்தைப் புரப்போர் யாவரெனவும் இவ்வாறு பலவேறு
வகைபடச் சிந்தை செய்தற் கேதுவாயது - சிவஞானமாபாடியம்
- 2 சூ, 2 அதி.
|