804.
|
அந்நிலையி
லன்பனா ரறிந்தநெறி பூசிப்ப,
மன்னியவா கமப்படியான் மாமுனிவ ரருச்சித்
"திங்
கென்னுடைய நாயகனே! யிதுசெய்தார்
தமைக்காணேன்;
உன்னுடைய திருவருளா லொழித்தருள வேண்டு"
மென,
|
155 |
804. (இ-ள்.)
வெளிப்படை அந்நிலையிலே அன்பனாராகிய
திண்ணனார் அறிந்த நெறியிற் பூசிக்க, நிலை பெற்ற ஆகம
விதிப்படி மாமுனிவராகிய சிவகோசரியார் அருச்சித்து, "என்னுடைய
நாயகரே! இவ்விடத்து இவ்வநுசிதங்களைச் செய்தாரைக் கண்டிலேன்;
உம்முடைய திருவருளினாலே இதனை ஒழித்தருளவேண்டும்" என்று
விண்ணப்பித்தாராக, 155
804. (வி-ரை)
அந்நிலையில் - அவ்வேடர்களின் குறியில்
வாராமல் அன்பு பிழம்பாய்த் திரிந்து சரிக்கின்றதும், பின்னர்
இறைவனாலே சிவகோசரியாருக்கு "அவனுடைய நிலையிவ்வாறு"
என்றறிவித்துக் காட்டுகின்ற ஏற்றமுடையதும் ஆகிய அந்தநிலையில்.
அன்பனார்
- அன்பேவடிவமா யுள்ளாராதலின் அன்பனார்
என்றார். அன்பு அன்னார் - அன்பையே தமக்கு ஒப்பாயுள்ளார்
என்றலுமாம். (753 - 803 - 806)பார்க்க.
அறிந்தநெறி
- தாம்கண்டும் நாணன்பாற் கேட்டும் அறிந்த
நெறி.
மன்னிய
- நிலைபெற்ற. பொருந்திய என்றலுமாம்.
ஆகமப்படி - ஆகமங்களில் இறைவனுக்குரியதென்று
விதிக்கப்பட்டபடியாய். மன்னிய ஆகமம் -
இறைவன்
வாக்காதலின் என்றும் அழியாமலும், மாறுபடாமலும், வேறு
எந்நூல்களானும் மறுக்கப்படாமலும் நிலைபெற்ற வென்பதாம்.
அன்பனார் தாம்கண்ட காட்சியளவையானும், அநுமான
அளவையால் நாணன் அறிந்து உரைத்தது கேட்ட
உரையளவையானும், அறிந்தநெறி பூசித்தார்;
முனிவனார் இறைவன்
வாக்காகிய ஆகமங்களால் அறிந்த உரையளவையாற் பூசித்தார்
என்க. அன்பனார் தம் கரணங்கள் சிவகரணங்களாக மாறித் தம்
அறிவு அவர் அறிவாக அறிந்து பூசித்தார். முனிவனார்
அவ்வாறன்றித் தம் கரணங்கள் தம்முடையவாகவே நின்று ஆகமம்
அறிவிக்கத் தம்மறிவு கொண்டு பூசித்தார். அன்பர் பூசை
இறைவர்தாமே அறிந்த பூசை. முனிவர் பூசை இறைவர்
ஆகமங்களால் அறிவித்த பூசை. இவ்விரண்டும் இறைவனுக்கு
உவப்பாயினும் முனிவர் பூசையின் பயனாக இறைவர் தம்மைத்தாமே
அறிவிக்குமுகத்தால் அன்பரன்பினைக் காட்டியறிவிக்க நின்ற நிலை
சிந்திக்கத்தக்கது.
மாமுனிவர்
- பெருமுனிவர் (790), திருமுனிவர் (789),
அந்தணனார் (798) என்றவை காண்க.
அருச்சித்து
- திருமஞ்சனம் முதலாகப் பூசையின் எல்லா
அங்கங்களையும் குறித்தது. "அருச்சனை செய்து" (801) பார்க்க.
இங்கு
இது செய்தார் எனக் கூட்டுக. "என்னுடைய
நாயகனே" என்ற சொற்கள் இடையிட்டது முனிவர் இச்செயல்
பலநாளும் நிகழக்கண்டு சகியாது உள்ளம் பதைத்த நிலை குறித்தது.
இந்த "அநுசிதம் கெட்டேன் யார் செய்தார்" (785) என்றதும் காண்க.
என்னுடைய
நாயகனே! - என்னை அடிமையாக உடைய
தலைவனே!. "தமையுடைய தன்னுணர்வார்" (சிவஞானபோதம் -
அவையடக்கம்) என்றதற்குத் தம்மையுடையானாகிய தலைவனை
யுணரும் சித்தாந்த சைவர் என உரைத்தது காண்க.
உயிர்க்குயிராகிய ஆன்ம நாயகராதலின் நீர் என் உள்ளத்தை
அறிவீர்; தேவரீரது திருமுன்பின் தூய்மை கருதியே இதனை
வேண்டுகின்றேன் என்று குறிப்பார் இவ்வாறு கூறினார்.
இது
செய்தார் தமைக் காணேன் - இது செய்தாரிவர்
போலும் என்றனுமானத்தால் "மேவநேர் வரவஞ்சா வேடுவரே
யிதுசெய்தார்" (786) என்று கூறியதன்றி இச்செயலை நேரிற்
கண்டேனல்லேன் என்றபடி. "அக்கானவன் வரவினைப், பரந்த
காட்டிடைப் பார்த்து நடுக்குற்று" என்றது முதலாகக் கண்ணப்பதேவர்
திருமறத்தில் (11-ம் திருமுறை) நக்கீரதேவர் அருளியது, காட்டிலே
திண்ணனார் பேய்கோட் பட்டார் போலத் திரியும் தன்மை கண்டு
அவரே இது செய்தாராதல் வேண்டுமென்று ஐயுற்றுக் கூறியதாதலின்
இதனோடு மாறுபடாமை யறிக. காணேன் - கண்டு
விலக்ககில்லேன்
என்ற பொருளில் வந்த தென்றலும் பொருந்தும். இவ்வாறே
திருமறத்திற் கூறுவன பிறவும் இங்குக் கூறுவனவும் பொருந்த
உரைத்துக் கொள்க.
உன்னுடைய
திருவருளால் ஒழித்தருள வேண்டும் -
உனது திருவருட் பிரேரணையினால் - சங்கற்பத்தால் - நீக்கக்
கடவதன்றி வேறு செயல் இல்லை என்றபடி. ஒழித்தல் - நிகழாமற்
செய்தல். அருள - எனது வேண்டுதல் நிறைவேறுமாறு
அருள.
என - என்று பிரார்த்திக்க. 155
|