805. அன்றிரவு கனவின்க ணருண்முனிவர் தம்பாலே
மின்றிகழுஞ் சடைமவுலி வேதியர்தா
                            மெழுந்தருளி
"வன்றிறல்வே டுவனென்று மற்றவனை நீ
                             நினையேல்;
நன்றவன்றன் செயறன்னை நாமுரைப்பக்கே"
                                ளென்று,

156

     805. (இ-ள்.)வெளிப்படை. அன்றிரவிலே அருள்
முனிவரிடத்துக் கனவில் மின்னல் போல விளங்குகின்ற
சடைமுடியுடைய வேதியராகிய சிவபெருமான் எழுந்தருளி "நீ
அவனை வலியதிறலுடையதொரு வேடுவன் என்று நினையாதே;
அவனது நன்றாகிய செயலை நாம் சொல்லக் கேட்பாயாக" என்று
தொடங்கி, 156

    805. (வி-ரை.) அன்று இரவு - திண்ணனார் "திங்கள்சேர்
சடையார் தம்மைக்" கண்ட நாளினின்று ஐந்தாம் நாளிரவு. (810)
பார்க்க. 800 - 801 பாட்டுக்களின் கீழ் உரைத்தவையும் காண்க.
சிவகோசரியாரும் திண்ணனாரும் காணுமாறு திருவருள் வெளிப்பட
இறைவன் சங்கற்பிக்கும் திருநாளாதலின் அவ்வுயர்வு தோன்ற
அன்று
எனச் சுட்டிக் கூறினார்.

     கனவின்கண் - இறைவன் ஆன்மாக்களின் பக்குவநோக்கிச்
சிலர்க்கு நனவிலும் சிலர்க்குக் கனவிலும் வெளிப்பட்டு அருளுவர்.
மற்றும் பலர்க்குக் கனவு நனவு இரண்டிலும் வெளிப்படார். இங்குப்
போலவே திருநாளைப்போவார் நாயனார்க்கு "அவர் வருத்தமெலாந்
தீர்ப்பதற்கு, முன்னணைந்து கனவின்கண் முறுவலொடு
மருள்செய்வார்" (திருநாளை - புரா - 27) என்ற சரிதமும், அது
போன்ற பிறசரிதங்களும் காண்க. இவ்வாறன்றி ஒருமலத்தார்,
இருமலத்தார், மும்மலத்தார் என்ற பாகுபாட்டின்படி முறையே
தன்மையில் உண்ணின்றும், முன்னிலையில் மான்மழு நாற்றோள்
நீலகண்டம் முதலியவற்றுடன் கோலங்காட்டித் தோன்றியும்,
படர்க்கையிற் குருவாய்க் கனவில் நேரேவந்தும் அருள்புரிதல்
உண்மை நூல்களானறியப்படும். இங்குத் திண்ணனார்க்கு நனவில்
நேரே அருள்வதனை மறுநாட் காண்போம். "கனவிலுந் தேவர்க்
கரியாய் போற்றி, நனவிலுநாயேற் கருளினை போற்றி" என்ற
திருவாசமுங் காண்க.

     அருள் முனிவர் - எவ்வுயிர்க்கும அருளையுடையோர்.
"அந்தணனார்" (798) என்றது காண்க. "அருள வேண்டும்" என
அருளை வேண்டினாராதலின் அவ்வருளைப் பெறநிற்கும் முனிவர்
என்றது குறிப்பு. "சென்ற வல்லிடைக், கனவிலாதரிக்கு மந்தணன்
றனக்கு" என்பது நக்கீரர் அருளிய திருமறம்.

     மின்திகழும் சடைமவுலி வேதியர்தாம் - இறைவர்
முனிவர்பாற் கனவிற்காட்டி யெழுந்தருளிய கோலங்கூறியபடி.
சடைமுடியுடைய வேதியராய்த் "தாமாந் தன்மை யறிவுறு கோலத்
தோடு", முக்கண் திருநீலகண்டம் முதலிய அடையாளங்களுடன்
வந்தார் என்பதாம். இத்திருவடையாளங்களுள் முதன்மை பெறுஞ்
சிறப்பு நோக்கிச் சடைமவுலியைக்கூறி அது முதலாக ஏனையவற்றை
உடன்கொள்ளவைத்தார். இச்சிறப்புப்பற்றியே கபர்த்திநேநம : என்ற
நாமத்தாற் சிவாஷ்டோத்தரம் துதிக்கின்றது. முனிவர்க்கு இறைவர்
கனவிற் காட்டிய இத்திருக்கோலத்தைச் "சீரார் திருக்கா ளத்தியு
ளப்பன், பிறையணி யிலங்கு பின்னுபுன் சடைமுடிக், கறையணி
மிடற்றுக் கனன்மழுத் தடக்கை, நெற்றி நாட்டத்து நிறைநீற் றாக,
மொற்றை மால்விடை யுமையொரு மருங்கிற், றிருவுருக் காட்டி
யருளி" என்று கண்ணப்பதேவர் திருமறத்தில் சடையை முன்
வைத்துத் தொடங்கிக் கூறினர் நக்கீரதேவர். மின்திகழும் சடை -
மின்னல் போல
விளங்கும் சடை. "பொலிந்திலங்கு, மின்வண்ண
மெவ்வண்ண மவ்வண்ணம் வீழ்சடை" (பொன்வண்ணத்தந்தாதி)
என்றது காண்க.

     வேதியர்தாம் - சிவபிரான் ஒருவரே பிராமணர் என்று
வேதங்கள் கூறுதல் காண்க. "தனிமுதலாம் பரனென்று பன்முறையும்,
துணிந்தமறை மொழியாலே" பலநாளுந் துதித்த மறைமுனிவர்க்கு
அவர் சிந்தித்துத் துதித்தவாறே வருதல் முறையாதலின்
வேதியராய்வந்தார். அவரே பிற எல்லாக் கோலங்களும் தாங்கி
வருதல் திருவிளையாடற்புராண முதலியவற்றுட் காண்க. "மறையவ
னரசன் செட்டிதன் றாதை" என்ற பேரூர்ப்புராணமும்
(பள்ளுப்படலம்) காண்க.

     வன்திறல் - வலிமை செய்வதாகிய வேட்டைப்போர்த்திறல்.
வலிமை - அறத்தின் முகமாகச் செய்யும் திறல் அன்றி
வன்கண்ணராகி வலிந்து கொலைச் செயல் செய்யும் மறத்திறல்
குறித்தது.

     வேடுவன் என்று நினையேல் - "மேவநேர் வரவஞ்சா
வேடுவரே யிதுசெய்தார்" (786) என்று துணிந்த எண்ணங்கொண்டு
விண்ணப்பித்தா ராதலின் அவ்வெண்ணத்தினுள்ளே நின்றறிந்த
இறைவனார் "வேடுவன் என்று நினையேல்" என்றார். "உள்குவா
ருள்கிற் றெல்லா முடனிருந் தறிதியென்று, வெள்கினேன்" என்ற
திருநேரிசை காண்க.

     மற்றவனை - வேடர் குலத்தினனாயினும் அவர்களுள்
ஒருவனாகவேனும், மற்ற மானிடருள் ஒருவனாகவேனும்
வைத்தெண்ணப்படாதவன் எனவும், அவன் தன்மை வேறாகும்
எனவும் பிரித்துக் காட்டுவார் மற்று அவன் என்றார்.

     நன்று - நன்றாகிய. நன்று செயல் தன்னை எனக்கூட்டுக.
"அவனுடைய செயலெல்லா நமக்கினிய வாமென்றும்"
கூறினாராதலின் அவை நன்றாயின என்றார். நாம் நன்று (நன்றாக -
நன்கு) உரைக்க எனவும், (நீ) நன்றுகேள் எனவும் கூட்டி
அவற்றிற்கேற்க உரைப்பினுமமையும்.

     "கேள்" என்று அருள்செய்வார் (806) - "ஒழிக என்று
அருள்செய்து" (807). போயினார் என மேல்வரும் இரண்டு
பாட்டுக்களுடன் கூட்டிமுடிக்க.

     அருமுனிவர் - நன்றுமவன் றன்செயலை - அன்ன
வன்றன் செயல் தன்னை
- என்பனவும் பாடங்கள்.