808.
|
கனவுநிலை
நீங்கியபின் விழித்துணர்ந்து
கங்குலிடைப்
புனைதவத்து மாமுனிவர் புலர்வளவுங்
கண்டுயிலார்
மனமுறுமற் புதமாகி வரும்பயமு முடனாகித்
துனைபுரவித் தனித்தேர்மேற் றோன்றுவான்
கதிர்தோன்ற, |
159 |
808.
(இ-ள்.) புனைதவத்து மாமுனிவர்
- கொள்ளப்பட்ட
தவத்திற் சிறந்த பெருமுனிவராகிய சிவகோசரியார்; கனவு ......
உணர்ந்து - கனாவாகிய நிலையினின்றும் நீங்கியபின் விழிப்பு
நிலையினை யடைந்து (கனாவிற் கண்ட பொருளை) உணர்ந்து;
புலர்வளவும் கங்குலிடைக் கண்துயிலார் - போது விடியுமளவும்
அவ்விரவில் தூங்காதவராகி; மனமுறும் ... உடனாகி - மனத்தில்
மிக்க அற்புதமும், (அது முடுகியதனால்) வரும் பயமும் உடன்
உடையராய்; துனைபுரவி - ... தோன்ற - வேகமுடைய குதிரை
பூண்ட தனித் தேரின் மேல் தோன்றும் ஞாயிற்றின் கதிர்கள்
தோன்றிய அளவிலே, 159
808.
(வி-ரை.) கனவுநிலை- சொப்பனாவத்தை
என்பர்.
பின் விழித்தெழுந்து - அந்நிலையினின்றும் நீங்கி விழித்திருக்கும்
நிலையினை - சாக்கிராவத்தையை - அடைந்து. சாக்கிரம்,
சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்பன உடலில்
ஆன்மாவின் அவத்தைபேதங்கள் எனவும், இவற்றின் முறையே
புருவநடு, கழுத்து, இருதயம், நாபி மூலாதாரம் என்ற இடங்களில்
ஆன்மா தங்குமெனவும் கூறுவர். கனவுநிலையில்
கண்டத்தானத்தில் நின்று சூக்கும உடலின் வழி ஆன்மா தொழில்
செய்யும். பின்னர் விழிப்பு நிலையடையும்போது புருவ நடுவில்
நின்று தூல உடலின் வழி ஐம்பொறிகளாலும் உணர்ந்து
தொழிலியற்றும்.
உணர்ந்து
- கனாவில் இறைவனருளியவற்றை நனவில்
உணர்ந்து, நனவிற்கண்டபலவற்றையும் கனவில் மறந்தும், கனவிற்
கண்டபலவற்றையும் நனவில் உணராமலும் இருப்பது உயிரியல்பாம்.
இங்கு அவ்வாறன்றிக் கனவில் இறைவன் அருளியவை முற்றும்
முனிவர் நனவில் உணர்ந்தார் என்பதாம்.
புலர்வளவும்
கங்குலிடைக் கண்டுயிலார் என மாற்றுக.
கனவு கண்டபின் உறங்கினவர் நற்கனவின் பயனை இழப்பர்
என்பது ஒருமரபு. இரவின் கடையாமத்திற் கண்ட கனா உடன்
பலன்தரும் என்பர். உடனே பலன் தந்ததாகலின் இது
விடியற்காலையிற் கண்டதென்று ஊகிக்கப்படும். ஆதலின்
இறைவனருளை எதிர்பார்த்து விழித்திருந்தனர் என்பதுமாம். இரவில்
நான்காம் சாமத்திலும் பின்னரும் உறங்கவாகாது என்பதும் விதி.
"வைகறை யாமந் துயிலெழுந்து" என்ற ஆசாரக் கோவை காண்க.
"மறையவ னறிவுற் றெழுந்து" என்ற திருமறமும் சிந்திக்க.
அற்புதமும் பயமும் துயிலாமைக்குக் காரணமாம் என்றலுமொன்று.
புனைதவந்து
- புனைதல் - மேற்கொள்ளுதல் - செய்தல்.
தவத்துப்புனை - என மாற்றித் தவத்தினை
மேற்கொண்ட
என்றுரைப்பாருமுண்டு.
மனம்உறும்
அற்புதம் - அற்புதம் -
இன்னதென்றறியப்படாததோர் பெருமித உணர்ச்சி. இங்குத் தாம்
அறியாத நிலையில் இறைவனருளியபடி விளங்கிய வேடராகிய
திண்ணனாரது பெருமையும், அதனை இறைவனே முன்னின்று
தம்மை அறியவைத்து அன்பர் கூட்டத்துச் சேர்க்கும் அருமையும்
அற்புதமெனப்பட்டன. "அந்த னாண்டுதன் னடியரிற் கூட்டிய
அற்புத மறியேனே" என்ற திருவாசகக் கருத்தும் காண்க.
வரும்
பயமும் உடன் ஆகி - பயம் - முன்உளதாகிய
அற்புதங் காரணமாக அதனால் விளைந்தது ஆதலின் வரும் பயன்
என்றும், உடன்ஆகி என்றும் கூறினார். இறைவன்
அறிவிக்க
அறிந்தவையும், இனிக்காட்டக் காண்பவையும் முன்னர் அறியவாராது
மாறாகப் பலபலவும் எண்ணியும் செய்தும் வரநேர்ந்ததே எனும்
நினைவு பயத்தை விளைத்தது. வேடனாரது பெருமையையும்
அதனை நோக்கத் தமது சிறுமையையும் பிழைகளையும்
அப்பிழைபாராது பொறுத்து இறைவன் அருளியவற்றையும்
உணர்ந்தபோது பயம் வந்தது. "எத்தனையு மரியநீ
யெளியை யானா
யெனையாண்டு கொண்டிரங்கி யேன்று கொண்டாய், பித்தனேன்
பேதையேன் பேயேனாயேன் பிழைத்தனக ளெத்தனையும் பொறுத்தா
யன்றே!, யித்தனையு மெம்பரமோ வைய! வையோ? வெம்பெருமான்
றிருக்கருணை யிருந்தவாறே" (தனித் திருத்தாண்டகம்) என்றது
காண்க. அற்புதம் என்றதற்கு வேடரது தீயசெயல்
சிவபெருமானுக்கு
இப்படியு மிருந்ததோ என்ற ஆச்சரியம் எனவும், சாமானிய வேடர்
தேவர்கட்குமரிய நிலையினையும் சிவபெருமானாற் பாராட்டப்படும்
நிலையினையும் அடைந்தனரே என்று எண்ணிய ஆச்சரியம்
எனவும் உரைப்பாருமுண்டு.
இவ்வாறு அற்புதமும்
பயமும் உடனாகிய மனநிலையோடு
முனிவர் அந்நாளில் இதன்மேற் செயல்களையும் செய்தனர் என்று
மேல்வரும் பாட்டுடன் கூட்டி உரைத்துக் கொள்க. உடனாகி -
வந்து - மூழ்கி - நினைந்து - ஏறி - பூசித்து - ஒளித்து - இருந்தார்
என்று முடிக்க. இம்மனநிலையுடனே இச்செயல்க ளொவ்வொன்றும்
நிகழ்ந்தன என்பதாம். இதனையே நக்கீரதேவர் "மறையவ
னறிவுற்றெழுந்துமனமிகக் கூசி வைகறைக் குளித்துத், தான்முன்
செய்வதோர், பொற்புடைப் பூசனை புகழ்தரச் செய்து, தோன்றா
வண்ண மிருந்தன னாக" என்று திருமறத்துள் அருளினர்.
துனைபுரவி
- வேகமாகச் செல்லும் குதிரை. துனை -
விரைவு. "உராத்துனைத் தேர்த்தென" (சிவஞானபோதம்).
தோன்றுவான் என எதிர் கால வினையாலணையும்
பெயராற்
கூறினமையாலும், தோன்றுவான் தோன்ற என்னாது கதிர்தோன்ற
என்றமையாலும் ஞாயிறு உதிக்காது அவனது கதிர்களின் றோற்றம்
மட்டும் காணத்தொடங்கி யென்று தெரிகின்றோம். இதனை
அருணோதயம் எனவும், ஞாயிற்றின்றோற்றத்தைச்
சூரியோதயம்
எனவும் கூறுவர். "கண்ணா ரிரவி கதிர்வந்து
கார்கரப்ப",
"அருணனிந் திரன்றிசை யணுகின னிருள்போ யகன்றது" என்ற
திருவாசகங்கள் காண்க. எனவே, ஞாயிறு தோன்றச் சில
நாழிகைகளின் முன்பே முனிவர் சென்று புனல்மூழ்கிக்
கடன்முடித்தார் என்பதாம். இதனை "வைகறைக் குளித்து" என்று
மேற்காட்டிய திருமறம் உணர்த்திற்று.
கனைபுரவி
- என்பதும் பாடம். 159
|