809. முன்னைநாள் போல்வந்து திருமுகலிப்
                           புனன்மூழ்கிப்,
பன்முறையுந் தம்பிரா னருள்செய்த படிநினைந்து,
மன்னுதிருக் காளத்தி மலையேறி, முன்புபோற்
பிஞ்ஞனைப் பூசித்துப் பின்பாக
                       வொளித்திருந்தார்.

160

     809. (இ-ள்.) வெளிப்படை முன்னாளிற்போல் வந்து
திருமுகலியின்நீரின் மூழ்கித் தமக்குப் பெருமானாகிய காளத்தியப்பர்
கனவில் அருள் செய்தபடியினைப் பலமுறையும் நினைந்துகொண்டே,
நிலைபெற்ற திருக்காளத்தி மலையில் ஏறி முன்புபோல
அக்கடவுளைப் பூசித்துப் பின்புறமாக ஒளித்திருந்தார். 160   

     809. (வி-ரை.) முன்னைநாள்போல் - முன்னாட்களிற்
செய்த வழக்கம்போல் என்க. இவை திண்ணனார் இறைவரைக்
கண்டு பூசித்த இரண்டாம் நாளுக்கு முந்திய நாள்கள். நாள் -
சாதியொருமை. முன்னைநாள் - முதல்நாள் என்பர் சுப்பராய
செட்டியார். வந்து - தவஞ் செய்யும் வனத்திலிருந்து
திருமலையினடிவாரத்துக்கு வந்து. மூழ்கிவந்து என்று
கூட்டியுரைத்தலுமாம்.

     தம்பிரான் அருள் செய்தபடி(யைப்) பன்முறையும்
நினைந்து
- என மாற்றுக பன்முறையும் நினைதலாவது
பலவாற்றானும் வைத்துச் சிந்தித்தல். இவைமுன் அற்புதமும் வரும்
பயமும் உடனாகி
என்ற விடத்துரைக்கப்பட்டன.

     வந்து - மூழ்கி - ஏறி - பூசித்து - இவை யாவும் முன்னை
நாள்களிற் போல நிகழ்ந்தன. மூழ்கியபின் பூசனைக்குரிய பூ - நீர்
முதலிய பொருள்களைத் தேடுதலும், மலையேறிச் செல்லுதலும்
திருவருட்டிறத்தினைச் சிந்தித்த வண்ணமாகவே நிகழ்ந்தன என்பார்
நினைந்து ஏறி என்றார்.

     முன்புபோற் பூசித்து - "முன்னைநாள் போல்வந்து"
என்றலே யமையும்; மீண்டும் முன்புபோல் என்றல் வேண்டா
எனின், அற்றன்று; இந்நாட் பூசையில் முன்னாள்களிற் செய்ததுபோல
இறைச்சியும் எலும்புங் கல்லையும் திருவலகால் மாற்றுதலும், மீண்டும்
புனன்மூழ்கி வருதலும், பவித்திரமாஞ் செயல் புரிதலும் அது பற்றிய
பிரார்த்தனையும் நிகழவில்லை எனவும், திருவருளின் றிறத்தினை
எண்ணி யுருகிச் சாந்திபெற்று மனம் இருந்தது எனவும் குறிப்பார்
மீண்டும் முன்புபோல் என்றா ரென்பதாம். ஆனால்
இந்நாளிற்றிருமுன்பு கிடந்த இறைச்சி முதலியவற்றை மாற்றினரோ?
அன்றோ? எனின் மாற்றினர் என்றே கொள்க. ஆயின் அவற்றை
இறைவன் தமக்கு இனியவாமென்று அறிவித்தமையின்
அவைஅநுசிதமென்று உணர்தலின்றி ஏனை நின்மாலியங்களோ
டொப்பக் கண்டு அகற்றிய பின்னர் அந்நாட் பூசையினை முடித்தனர்
என்பது ஊகிக்க நின்றது. இக்கருத்துத் "தான் முன் செய்வதோர்,
பொற்புடைப் பூசை புகழ்தரச் செய்து" என்ற திருமறத்தால்
விளக்குதல் காண்க. இவ்வாறன்றி முன்னைநாட்களிற்செய்த பூசை
தாம் அநுசிதம் என்று கொண்டதற்குப் பிராயச்சித்த மென்றும்,
அன்று செய்தது அநுசிதமல்லாததை அநுசித மென்ற தமது
பிழையைப் போக்கச்செய்த பிராயச்சித்த மென்றும்கூறி
அன்றையநாளிலும் பவித்திரபூசை செய்தனர் என்று
உரைப்பாருமுண்டு. அஃதுரையன்றென வுணர்க.

     பின்பாக - பின்புறமாக. காளத்திநாதருக்குப் பின்புறமிருந்த
மரங்களின் மறைவில் என்பர் மகாலிங்கையர். பின்பு ஆக
எனப்பிரித்துப் பின்பு தமக்கு ஆக்கமுளதாக என்றலுமாம்.
ஆக்கமாவது சிவனருள்நெறிவிளங்கக் கண்டுய்தல்.

     இப்பாட்டாற் சிவகோசரியார் ஆறாம் நாளிற் பூசை முடித்த
திறங் கூறப்பட்டது. இவை முன்னைநாள்போல் நிகழ்ந்தன என்றலே
யமையும்; வந்து மூழ்கி ஏறி என விரித்துக் கூறியது மிகையாம்
பிறவெனின்; அற்றன்று. அந்நான்கு நாளினும் பூசித்தல்
முதலியவற்றில் முனிவர் பெருங்கவலை கொண்டனர்;
இந்நாளிலோவெனின், "மனக் கவலை ஒழிக" என இறைவர்
ஆணையிட அறிந்தாராதலின், கவலைக்கிடனின்றிச் சாந்திபெற்ற
மனத்தோடு இவை நிகழ்ந்தன என்பார் இச்செயல்களை வேறு வேறு
பிரித்துக் கூறினார். அன்றியும், "பூசனைக் கேற்பக் கொய்த மலரும்
புனலும் முதலான கொண்டு அணைந்தார்" (784), "வந்து
திருமலையின்கண் வானவர் நாயகர் மருங்கு ... சிந்தை நியமத்தோடு
செல்கின்றார்" (785) எனக் கூறியதன்றி வருதல் - மூழ்குதல் -
மலையேறுதலாகிய செயல்களை முன்னர் விரித்துக் கூறாமையும்
உணரப்படும். 160