811. மாறிலூ னமுது நல்ல மஞ்சனப் புனலுஞ் சென்னி
யறுநாண் மலரும் வெவ்வே றியல்பினி லமைத்துக்
                                கொண்டு,
தேறுவார்க் கமுதமான செல்வனார் திருக்கா
                                   ளத்தி
யாறுசேர் சடையார் தம்மை யணுக, வந் தணையா
                                 நின்றார்,
162

     811. (இ-ள்.) மாறில் .... மலரும் - நிகரில்லாத
ஊனமுதத்தினையும், நல்ல திருமஞ்சன நீரினையும், சென்னியில்
ஏறும் புதிய மலர்களையும்; வெவ்வேறு ...கொண்டு - வெவ்வேறாந்
தன்மையில் அமைத்துக்கொண்டு; தேறுவார்க்கு..... அணையாநின்றார்
- தெளிந்து தேறுகின்ற அன்பர்களுக்கு அமுதம்போன்ற
செல்வனாரும் திருக்காளத்தியில் எழுந்தருளியவருமாகிய கங்கை
ஆறு சேர்ந்த சடையாரை அணுகுதற்கு வந்து அணைகின்றவராகி,
162

     811. (வி-ரை.) மாறுஇல் ஊன் அமுது - மாறுஇல் -
ஒப்பில்லாத. ஈட்டுதல் சமைத்தல் - சுவைபார்த்தல் முதலிய
புறச்செயல்களாலும், இச்செயல்களைத்தூண்டிய அன்பாகிய
அகச்செயலாலும் ஒப்பரிய. ஊன் அமுது - ஊனாகிய அமுது.
முன்னாட்களில் ஈட்டிய ஊனிலும் சிறந்த என்றலுமாம். முன்னாட்கள்
போலன்றி அன்று உடும்பும் அடித்துச் சமைத்துக் கொணர்ந்தனர்
என்பது "கடும்பகல் வேட்டையிற் காதலித்தடித்த, உடும்பொடு" என்ற
திருமறத்தா லறியப்படும்.

     நல்ல மஞ்சனப் புனல் - "மாநதி நன்னீர் தூய வாயினிற்
கொண்டு" (770) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க.
மஞ்சனநீரும் அதனைக்கொள்ளும் கலமும் ஒக்க நன்மையுடையன
ஆதலின் நல்ல என்றார். நல்ல மஞ்சனம் என்று கொண்டு
நன்மைதரும் திருமஞ்சனம் என்றலுமாம். இன்னின்ன பொருள்களால்
திருமஞ்சனமாட்டுதல் இன்னின்ன பயன்தரும் என்று ஆகமங்களிற்
கூறுதல் காண்க.

     சென்னி ஏறும்நாள் மலர் - "தூநறும் பள்ளித்தாமங்
குஞ்சிமேற் றுதையக் கொண்டார்" (770) என்றபடி
திருப்பள்ளித்தாமத்தைக் குடுமியிற்செருகி அமைத்துக்
கொண்டனராதலின் சென்னிஏறும் என்றார். இறைவனது சென்னியில்
ஏறுவதற்காகக் கொண்ட என்றலுமாம்.

     வெவ்வேறு இயல்பினில் அமைத்துக் கொண்டு -
வெவ்வேறியல்பாவன தனித்தனி சிறப்புடையனவாகிய இயல்பு.
அன்றுகொண்ட ஊனமுது முதலியன முன்னை நாட்களிற்
கொண்டவற்றினும் சிறந்தன என்பது மேற்பாட்டின் குறிப்பு.
"மேன்மேல் வந்து எழும் அன்பால்" (800) என்றபடி அன்பு நாளுக்கு
நாள் மேல்எழுந்து மிக்கதாதலின் அவ்வாறு மிக்குக்கூடிய அன்பின்
எழுச்சியால் அமைத்தலின் இவை வெவ்வேறியல்பினைக் கொண்டன
என்க.

     இனி முன்னை ஐந்து நாட்களினும் அமைத்த அமுது, நீர், பூ
இவற்றினியல்பின் இவை வேறாயின என்றலுமாம்.

     முன்னாட்களிற் கொண்ட பொருள்கள் அவர் எண்ணியபடி
இறைவன் திருப்பூசைக்குப் பயன்பட்டன. இன்று அவ்வாறன்றி
இறைவன் "அவனுடைய செயல் எல்லா நமக்கினிய வாமென்று" (806)
முன்னைநாளிரவே உகந்து கொண்ட பாங்கினால் திருவருள்
வெளிப்பாட்டுக்குத் துணைக் கருவிகளாயமைந்த இயல்பினவன்றி,
அவர் எண்ணி யமைத்துக் கொண்டவாறு அன்றைநாளிற் பூசிக்கப்
பயன்படாத இயல்புடையனவாயின என்பதும் குறிப்பு. இது
"வாயினன்னீர்சிந்திட ... ஊனும் சிதறிவீழ ... கொந்தலர்
பள்ளித்தாமங் குஞ்சிநின் றலைந்து சோர" (814) என்றுரைத்த 
வாற்றானறியப்படும். அன்று முன்னை நாட்களிற்போலப் பூசை
நடவாது, கண்ணிடந்து சாத்தியதும் சாத்த ஒருப்பட்டதும் ஆகிய
பூசையே நிகழ்ந்தது என்பதும் காண்க.

     தேறுவார்க்கு அமுதமான செல்வனார் - தேறுவார் -
சிவபெருமானே முழுமுதலாகிய பசுபதியாவர் எனத் தெள்ளத்
தேறித் தெளிந்த அறிவுடையவர், கேட்டல், சிந்தித்தல், தெளிதல்,
நிட்டைகூடுதல் என்ற நான்கனுள் தெளிந்து நிட்டை கூடுதலைக்
கைவந்தவர்களே தேறுவார் எனப்படுவர். அவர்களுக்கு இறைவர்
அமுதமாகுவர் என்பது. அமுதம் - நிலைபேறுடையதாய் உள்ளத்தே
ஊறும் இன்பவூற்று; மரணத்தை நீக்கும் இனிய மருந்து. செல்வனார்
- அதனாற் குறைவில்லாதவர். "செல்வன் திருக்காளத்தியு ளப்பன்"
என்று திருமறத்தில் நக்கீரர் இப்பகுதியிற் கூறியதும்,
"அடிசார்ந்தவர்க்கு முடியா இன்பம், நிறையக் கொடுப்பினும்
குறையாச் செல்வ" (திருவிடை - மும் - 22) என்று பட்டினத்தடிகள்
அருளியதும் இங்கு நினைவுகூர்க.

     தேறுவார் - "தெள்ளத் தேறித் தெளிந்து தித்திப்பதோர்,
உள்ளத் தேறலமுத வொளிவெளி" (தனித் திருக்குறுந்தொகை), "
தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே, யேற்றுந் தகையன"
(திருவித்தம் - திருஇன்னம்பர் - 7) என்றற்றொடக்கத்து அப்பர்
சுவாமிகள் திருவாக்குக்களும் காண்க. "இவரே
முதற்றேவரெல்லார்க்கு மிக்கார், இவரல்ல ரென்றிருக்க வேண்டாம்
- கவராதே, காதலித்தின் றேத்துதிரேற் காளத்தி யாள்வார்நீ,
ராதரித்த தெய்வமே யாம்," (கைலைபாதி - அந்தாதி - 72),
"அவர்க்கே யெழுபிறப்பு மாளாவோ மென்று, மவர்க்கேநாமன்பாவ
தல்லாற் - பவர்ச்சடைமேற், பாகாப்போழ் சூடு மவர்க்கல்லான்
மற்றொருவர்க், காகாப்போ மெஞ்ஞான்று மாள்" (அற்புதத்
திருவந்தாதி - 3) என்றபடி பசுபதியார்க்கு ஆளாய்த் தொண்டு
செய்வதனையன்றி வேறறியாத் தன்மை யிலே சிறந்தோர்கள்
தேறுவார்
எனப்பெறுவர். "உன்னடியார் தாள் பணிவோ
மாங்கவர்க்கே பாங்காவோம், அன்னவரே யெங்கணவ ராவா
ரவருகந்து, சொன்னபரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம், இன்ன
வகையே யெமக்கெங்கோ னல்குதியேல், என்ன குறையுமிலோம்",
"எங்கொங்கை நின்னன்பரல்லார்தோள் சேரற்க, எங்கை யுனக்கல்லா
தெப்பணியுஞ் செய்யற்கக் கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங்
காணற்க, இங்கிப் பரிசே யெமக்கெங்கோ னல் குதியே,
லெங்கெழிலென் ஞாயி றெமக்கு" (திருவெம்பாவை - 9 - 19)
எனவரும் திருவாசகங்களிற் கூறுவதும் இவர்களது பண்பாம்.

     ஆறுசேர்சடையார் - ஆறு அருட்பெருக்கையும், சடை
அன்பின் நெறியினது விரிவையும் குறிப்பாலுணர்த்துதலின் இங்கு
இவ்வாறு கூறினார்.

     அணுகவந்து - சேரும்பொருட்டு வந்து. அணுகுதல் -
வேட்டைக் காட்டிற் சென்று தூரத்தே நின்றவர் இடத்தால்
அணிமையில் வருதலும், பின்னர்க் காளத்தியாரைப் பிரியாது
வலத்தே நிற்கும் நிலைபெற வருதலும் குறித்தது. திருவடிசார
அணைதல் குறிப்பு. "சிவத்தைச் சார அணைபவர் போல" (752)
என்று இதனை முன்னர்க் குறித்ததும் காண்க. முன்னை நாள்களிற்
போலன்றி, இன்று வருதல் மீளாது அணுகி நிற்றலுக்கேயாம்
என்றுணர்த்தினார் என்பதுமாம். இறைவன் அன்பர்க்கு அணுக்கன்
என்ற இயல்பும் காணத்தக்கது.

     அணையா நின்றார் - அணைகின்றனராய். நிகழ்காலத்து
வந்த முற்றெச்சம். வில்லியார் - காலை - போகி - ஆடி (810) -
கொண்டு - அணுகவந்து அணையா நின்றார் (811) - விரைந்தேகுவார்
முன் - தீங்கு செய்ய, - என்று அணையும் போதில் (812) - கண்டு
ஒடிவந்தார் (813) என இந்நான்கு பாட்டுக்களையும் தொடர்ந்து
முடிக்க. இவ்வாறன்றி அணைகின்றாராயினர் என நிகழ்கால
வினைமுற்றாகக் கொண்டு முடித்துரைப்பாருமுண்டு. அணையா
நின்றார் - பெயராகக் கொண்டு, (சேரும் அத்திண்ணனார் என)
வினைமுற்றுப் பெயராய் நிற்றலால் முதலில் அகரச்சுட்டுத்தொக்கி
நின்றது என்பர் சுப்பராயச் செட்டியார். 162