812.
"இத்தனை பொழுது தாழ்த்தே" னெனவிரைந்
                           தேகு வார்முன்
மொய்த்தபல் சகுன மெல்லா முறைமுறை தீங்கு
                               செய்ய,
"இத்தகு தீய புட்க ளீண்டமு னுதிரங் காட்டும்;
அத்தனுக்கென்கொல்கெட்டேன்! அடுத்த?
                    தென்றணையும்போதில்,
163

     812. (இ-ள்.) இத்தனை..........முன் - "இவ்வளவு நேரம்
தாழ்த்து விட்டேன்" என்று எண்ணி விரைவாகச் செல்பவரின்
முன்னே; மொய்த்த ..... செய்ய - கூடிய பல சகுனங்கள் யாவையும்
தீமையுளதாம் என்று அறிவித்தலைச் செய்ய; "இத்தகு ..... அடுத்தது?"
என்று - "தீமைகாட்டும் இத்தகைய சகுனங்கள் முன்னே நெருங்கி
இரத்தக் குறியைக் காட்டுகின்றன; அதனால் எனது அத்தனாருக்கு
அடுத்ததுயாதோ? ஓ! கெட்டேன்!" என்று; அணையும்போதில்
-அணைகின்றபோது, 163

     812. (வி-ரை.) இத்தனைபொழுது தாழ்ந்தேன் - முந்திய
நான்கு நாட்களினும் "வெயில்படுவெங் கதிர்முதிரு"ம் (792) நேரம்வர
நண்பகலின் முன்வேட்டை முடித்தார். இன்று "இரவியும்
வான்றனிமுகட்டில் வந்தழல் சிந்தக், கடும்பகல் வேட்டையில்"
(திருமறம் - நக்கீரர்) என்றறியப்படுதலின் ஞாயிற்றின் கதிர் முதிர்ந்து
கடும்பகல் ஆயினபின் வேட்டை முடித்தார். ஆதலின் தாழ்த்தே
கொன்றிரங்கினார். அன்பு மிகுதியாற் பொழுது தாழ்த்ததாகத்
தோற்றிற்று என்றுரைத்தலுமாம். "நீள் இருள்" (777) என்ற
விடத்துரைத்தவை பார்க்க.

     மொய்த்த பல் சகுனம் எல்லாம் - மொய்த்தல் -
செறிதல். பல் - பலப்பல. தொகையும் வகையும் குறித்தன. சகுனம் -
பின்னர் வரும் நன்மைதீமைகளைத் தமது காட்சி குரல்
முதலியவற்றாலுணர்த்தும் பறவை முதலியன. இவற்றை நிமித்தம்
என்றும் கூறுவர். எல்லாம் - ஒன்று போலவே யாவும்.

     முறை முறை - அவ்வவையும் தத்தம் பாங்கிலே. தீங்கு
செய்ய
- செய்ய - என்றது எடுத்துக் காட்ட என்ற பொருளில்
வந்தது. 700 - ம் திருப்பாட்டில் குறிகள் என்ற விடத்துரைத்தவை
பார்க்க.

     இத்தகு தீயபுட்கள் - புட்கள் - சகுனங்கள். அவற்றுள்
காக்கை - கருக்குருவியிடமாதல் கெடுதி குறிக்குமென்பர்.
"கூகையோ டாந்தை தீய, புள்ளினமான தம்மிற் பூசலிட் டழிவு
சாற்றும்" - (திருஞான - புரா - 632) என்றபடி ஆந்தை கூகை
கூவிப் பூசலிடுதல் அழிவு காட்டுவன. செம்போத்துக் காணுதல்
இரத்தப் பெருக்குக் காட்டு மென்று கூறுவர்.

     ஈண்ட - விரைய. காட்டும் - காட்டா நிற்கும்.
இச்சகுனங்களாற் குறித்த பொருள் விரைவின் நிகழும் என்பது.

     கெட்டேன்! அத்தனுக்கு என்கொல் அடுத்தது? என
மாற்றுக. தமது அறிவெல்லாம் அத்தனையன்றி வேறொன்றும்
அறியாமையால் சகுனப்பலன் அத்தனுக்கு அடுக்கும் என்றறியவே
மிக்க இரக்கம் வந்தது. ஆதலின் கெட்டேன்! என்றார்.
பிறரெல்லாம் தங்கள் தங்களது நன்மை தீமைகளையே
முன்வைத்தெண்ணுவராதலின் இத்தன்மையான சகுனப்பலன்
தம்மைச்சாருமே என்றிரங்குவர். இங்குத் திண்ணனார் தம்மையும்
மறந்தனராதலின் அத்தனுக்கு அடுத்தது என் என்றனர்.
"ஆவியினினிய வெங்க ளத்தனார்க் கடுத்த தென்னோ?" (818)
என்று பின்னர்க் கதறுகின்ற நிலை காண்க. கெட்டேன் -
சகுனப்பலன் நிச்சயமாதலின் அத்துணிபுபற்றி இறந்த காலத்தாற்
கூறினார். சகுனப்புட்கள் உதிரங்காட்டும் என்றது திண்ணனாருக்கு
முன் அனுபவ வாசனையினாற் போந்த அறிவு.