815. விழுந்தவ ரெழுந்து சென்று துடைத்தனர் குருதி;
                                  வீழ்வ
தொழிந்திடக் காணார் ; செய்வ தறிந்தில ருயிர்த்து
                                    மீள
வழிந்துபோய் வீழ்ந்தார் ; தேறி"யாரிது செய்தா?"
                                  ரென்னா
வெழுந்தனர்; திசைக ளெங்கும் பார்த்தன; ரெடுத்தார்
                               வில்லும்,
166

     815. (இ-ள்.) வெளிப்படை. வீழ்ந்த திண்ணனார் எழுந்து
போய் உதிரத்தைத் துடைத்தனர்; அவ்வுதிரம் பாய்தல் நிற்கக்
கண்டாரிலர்; செய்யக்கடவது இன்னதென்று அறிந்திலர்;
பெருமூச்சுவிட்டு மீளவும் செயலழிந்துபோய் வீழ்ந்தனர்; பின்னர்
மனந்தேறி "இது செய்தார் யாவர்?" என்று எண்ணி எழுந்தனர்;
எல்லாத் திக்குக்களினும் பார்த்தனர்; வில்லையும் எடுத்தனர். 166

     815. (வி-ரை.) துடைத்தனர் குருதி; அக்குருதி வீழ்வது
எனச் சுட்டுப் பெயர் வருவிக்க. குருதி என்பது சிங்கநோக்காக
முன்னும் சென்று குருதி துடைத்தனர் என இயைந்தது என்றலுமாம்.

     ஒழிந்திடக்காணார் - ஒழிந்திலது என்னாது இவ்வாறு
கூறியது ஒழியக் "கண்டலே கருத்தாய் நினைந்திருந்"தார்
திண்ணனார் என்பதுணர்த்தி வற்புறுத்தற் பொருட்டு. மேற்பாட்டிற்
குருதிகண்டார் என்றவிடத் துரைத்தவையும் பார்க்க.

     துடைத்தனர், காணார், அறிந்திலர், வீழ்ந்தார்,
எழுந்தனர், பார்த்தனர், எடுத்தார்
என இவ்வொரு பாட்டில்
ஏழு தனி வினை முற்றுக்கள் வைத்தோதியது திண்ணனாரது
மனத்தில் அவலமிகுதியினால் ஒன்றன்பின்ஒன்றாய் விட்டுவிட்டு
விரைவில் நிகழ்ந்த வேறுபாடுகளையும், அவற்றாற் றூண்டப்பட்ட
செயல்களையும் அவ்வாறே நாடகச்சுவை படக் காட்டுதற்பொருட்டு.
அன்பு பலவாறாக உருவெடுத்தலும் உணர்த்தப்பட்டது. அது
தாங்கலாற்றாது மயக்கும்; தீர்வு தேடச் செய்யும்; வேறுபல
முயற்சியிலும் ஊக்கும்; வீராவேசம் தோன்றிப் பழி வாங்கத்
தூண்டும்; ஒன்றுமாற்றாதபோது வீழ்ந்து கதறி யழச்செய்யும்.
உலகியலிற் காணும் இந்நிலைகள் யாவும் இங்குப் பெருநிலையில்
நிகழ்ந்தன என்பது கண்டுகொள்க.

     செய்வதறிந்திலர் - இதற்குத் தீர்வாக யாது செயத்தக்க
வென்றறிய வாராது நின்றனர்.

     அழிந்து வீழ்ந்தார் - மனமழிந்து பதைத்து வீழ்ந்தனர் என
முன் உரைக்கப்பபட்டமையின் இங்குச் செயலழிந்து வீழ்ந்தனர்
என்க.

     தேறி - மீண்டும் மனம் தேறி. இங்குத் தேறுதல் - இன்னது
எண்ணுவது - செய்வது - என்று தோன்றாது மயங்கி வீழ்ந்த
நிலையினின்றும் தேறி ஒருவழிச் செல்லுதல் என்னும் பொருளில்
வந்தது. தேறி - எண்ணி என்றலுமாம். யார் இது தேறிச் செய்தார்
என்று கூட்டி இதனையும் எண்ணிச் செய்தார் யாவர்
என்றுரைத்தலும் ஒன்று.

     எழுந்தனர் - தேறி, யாவர் இது செய்தனர் என
நினைந்தவுடன் இது செய்தாரைக் கண்டு ஒறுக்கவேண்டுமென்று
வீரமும் சினமும் தோன்றின. அவை தோன்றவே, முன்னிருந்த
கையறுநிலையாகிய வீழ்ச்சியிலிருந்து மேற்கிளம்பி எழுந்தனர்
என்பதாம். புண்ணிற்குத் தீர்வு தேடுதலினும் பழிவாங்குமியல்பே
முற்பட்டு நிற்பது உலகியல். அதுமாறி இறைவன் பொருட்டாய்
நிகழ்ந்தது.

     திசைகள் எங்கும் பார்த்தனர் - இது வீரத்தின் பெருமிதச்
செயல்.

     எடுத்தார் வில்லும் என்றதும், வினையை முன்வைத்ததும்
அக்குறிப்பு. வில்லும் - பின்னர் வாளியும் தெரிந்து என்றதனால்
உம்மை எதிரது தழீஇயது. எண்ணும்மை என்றலுமாம். எடுத்தார் -
கையினின்றும் சிலை வீழ்ந்ததென்று மேற்பாட்டிற் கண்டோமாதலின்
அவ்வாறு வீழ்ந்த வில்லினை எடுத்தார் என்பது.

     வில்லும் அம்பும் எடுத்துக் கொண்டது, இது செய்தாரைக்
கண்டால் ஒறுத்து ஒழிக்கும் வீரத்திறம் பற்றியது என்பது மேல்வரும்
பாட்டானறிக. 166