816. வாளியுந் தெரிந்து கொண்"டிம் மலையிடை யெனக்கு
                                      மாறா
மீளிவெம் மறவர் செய்தா ருளர்கொலோ? விலங்கின்
                                     சாதி
யாளிமுன் னாகி யுள்ள விளைத்தவோ? வறியே"
                                   னென்று
நீளிருங் குன்றச் சார னெடிதிடை நேடிச்
                               சென்றார்.
167

     816. (இ-ள்.)வெளிப்படை. ஏற்ற அம்புகளைத் தேர்ந்து
எடுத்துக் கொண்டு "இந்த மலையில் எனக்கு மாறாக
வலிமையுடைய கொடியவேடர்கள் செய்தனரோ? சிங்கம்
முதலாகவுள்ள விலங்கினங்கள் செய்தனவோ? தெரியேன்" என்று
எண்ணி, நீண்ட பெரிய குன்றின் சாரலில் நெடுந்தூரம் தேடிச்
சென்றார். 167

     816. (வி-ரை.) வாளியும் தெரிந்துகொண்டு - செயலழிந்து
வீழ்ந்தவர் தேறி வில்லும் எடுத்து, ஏற்ற அம்புகளையும்
தெரிந்துகொள்ளவல்லராயினர். ம்மை எச்சமும் சிறப்புமாம்.

     எனக்கு மாறா மீளி வெம்மறவர் - உலகச்சார்புகளையும்
தம்மையும் மறந்து நின்ற திண்ணனாருக்கு இங்கு எனக்கு எனத்
தமது நினைவும் மாறா என மாறுபாடு பகை - சினம் முதலிய
நினைவும், மீளி வெம்மறவர் - என வேடர் முதலிய உலகச் சார்பு
நினைவும் போந்தன. தமது பசி, உறக்கம் முதலியவை தோன்றாது
மறந்தார்க்கு எவ்வாறு தேவரது பசி முதலியவை தோற்றிச் செயல்
நிகழக் காரணமாயினவோ, அவ்வாறே, ஈண்டும் தேவரைக்காக்கும்
தமக்குப் பகையாய் ஊறு செய்தாரை எண்ணியபோது தாம் முன்னை
உலக அனுபவத்திற் கண்ட தமது இருப்பும் பகையும் முதலிய
தொடர்புகள் நினைவுக்கு வந்தன. 756 - ம் பாட்டில் உரைத்தவை
பார்க்க. சண்டீசநாயனார் சரிதத்தில், அவர் பூசை செய்தபோது
மற்றொன்று மறிந்திலர்; அங்குவந்த தமது பிதாவைக் கண்டிலர்;
அவன் கூறிய கொடிதா மொழியுங் கேட்டிலர்; அவன் தமது
திருமுதுகிற்புடைத்ததனையும் உணர்ந்திலர்; ஆனால் இறைவனுக்குத்
திருமஞ்சனம் ஆட்டுதற்கு வைத்த பாற்குடத்தை அத்தீயோன்
காலாலிடறிச் சிந்திய செயல்கண்டனர்; அவனைப் பிதாவும் குருவும்
மறையோனுமாகிய எச்சதத்தன் என்று அறிந்தனர்; அவன் செய்த
சிவாபராதம் தண்டிக்கற்பாலது என்றுணர்ந்தனர்; அதன்
பொருட்டுக்கோலும் எடுத்தனர்; அது திருவருளால் மழுவாயிட
அவன்றாள்களை எறிந்தனர் என்ற நிகழ்ச்சிகளை இங்கு வைத்துப்
பொருந்தக் கண்டுகொள்க. திண்ணனார் பின்னர்ச் செய்வனவும்
இவ்வாறே கண்டுகொள்க.

     சீவன்முத்திக்கும் பரமுத்திக்கும் உள்ள வேறுபாடு இங்குக்
கருதத்தக்கதாம். சீவன் முத்தர் இறைபணியின் ஏகமாகி நின்று
அப்பணியின் பொருட்டு உடல் உணர்வுடன் இறைவனைப் பொருந்தி
இருப்பர்; பரமுத்தர் அவ்வாறன்றி
இறைவனிற் கலந்து தொழும்பாய்
அனுபவித்து நிற்பர். சீவன் முத்தர் நிலையாவது உடல் முதலிய
கருவிகரணங்களுடனிருக்கும் போதே முத்தியைத் தலைக்கூடி
நிற்றல். அவர்களது அறிவு, இச்சை, செயல்கள் இறைவனது
திருப்பணிமாத்திரையாய் வியாபரிக்கும் திருப்பணிக்கு முட்டுப்பாடு
வரும்போது அவைகட்கு வாசனையினால் உலகிய லுணர்ச்சி
புலப்பட்டு அவ்விடையூற்றைப் போக்கும் அளவில் தொழிற்படும்.
இதனையே 753, 803, 806 - ம் திருப்பாட்டுக்களில் விரித்தருளினர்.
இஃது அணைந்தோர் தன்மை எனச் சிவஞானபோதம் 12 - ம்
சூத்திரத்திற் கூறப்படுதல் காண்க.

     திண்ணனார் காளத்தியப்பரைக் கண்டபோதே, அவரது
அருணோக்கத் துணையாற் சீவன்முத்த நிலையடைந்தனர்.
அதன்பின் ஆறு நாளும் அந்நிலையில் உலகிற் சரித்தனர். சீவன்
முத்தர்க்கும் ஒரோவழிப், புறத்தே அறி விச்சை செயல்கள்
வியாபரிக்கு மெனவும், அஃது அவர்க்காகாமையின் ஆணவ மாயை
கான்மிய மென்னு மலங்களைக் களைவர் எனவும், அதற்கு அவர்தம்
செயல் வியாபரிக்குங்காற் சிவாலயத்தைப் பரமேசுவரனெனவே
கண்டு வழிபடுவர் எனவும், அவ்வாறு வழிபட்டுத் தானதுவாய்க்
காணுந் தவர்க்குக் கடைந்த விறகிற் றீக் காணுதல் போல இறைவன்
வெளிப்பட்டுத் தானதுவாய்த் தோன்றியருளுவன் எனவும் சிவஞான
போத மாபாடியத் துரைத்தவை காண்க.

     மீளி வெம்மறவர் - விலங்கின்சாதி - இத்தகைய
கொடுமை செய்வார் மறவரேயாவர்; ஆனால் இத் தேவர்பால்
எவர்க்கும் மாறுபாடு உண்டாதற்கியைபில்லை; இவர் "மேவினார்
பிரியாமாட்டா விமலனார் - ஆவியினினியர்" (818); ஆதலின்
இதற்குக் காரணம் அவ்வேடர் என்பாற் பூண்ட மாறுபாடுதானோ?;
என்று எண்ணி எனக்கு மாறா என்றார். அவ்வாறு அவர்கள்
செய்ததன்றாயின் காரணமின்றியும் ஊறு செய்யும் குணமுடைய
விலங்கின் சாதி விளைத்திருத்தல் வேண்டும்; வெவ்விலங்
குளவென்றஞ்சி இரவு முழுதும் காவல் புரிந்தேனன்றோ? என்று
நினைத்தார். உளர் கொலோ? - கொல் ஐயப்பாடு
உணர்த்துவதாதலின் தமக்குமாறாக வேடர் உளர் என்பதில்
திண்ணனார் துணிவுபெறவில்லை. ஆதலின் அவர்களை ஒழித்து
விலங்கின் சாதியை எண்ணினார். இருகாரணமுங் கருதி வில்லும்
அம்பும் எடுத்துத் தேடிப் போந்தனர் என்பதாம்.

     ஆளி - சிங்கம். யாளி என்றுரைப்பாருமுண்டு. இது முன்
காலத்தில் இருந்து இக்காலத்து மரபு ஒழிந்ததொரு பெரிய கொடிய
விலங்குச்சாதி. நீண்ட மூக்குடைய புலி போன்ற தென்றும்,
சிங்கத்தினையும் வெல்லக்கூடிய தென்றும் கூறுவர். ஆளி -
முன்னாகி
- என விலங்கினத்தில் முதன்மை பெற்றதனைக் கூறி
ஏனையவெல்லாம் அதனுள் அடக்கினார். ஆகி என்பது
செயவெனெச்சத் திரிபு.

     அறியேன் - இதனிலுந் துணிவுபெறவில்லை யென்பதாம்.
நீள் இருங் குன்றச் சாரல் - தொடர்ந்து நீண்ட பெருமலைகள்.
விலங்கினந் தேடிச் சென்றாராதலின் அவை தங்குமிடமாகிய மலைச்
சாரல்களிற் சென்றனர்.

     நெடிது இடை நேடி - நெடுந்தூரம்வரை பல வழியாலும்
தேடி. 167