819.
,"என்செய்தாற் றீரு மோதா?; னெம்பிரான்
                         றிறத்துத் தீங்கு
முன்செய்தார் தம்மைக் காணேன்; மொய்கழல்                              வேடரென்று
மின்செய்வார் பகழிப் புண்க டீர்க்குமெய் மருந்து
                             தேடிப்
பொன்செய்தாழ் வரையிற் கொண்டு வருவனா"
                       னென்று போனார்.
170

      819. (இ-ள்.) வெளிப்படை. "என்ன செய்தால் இது
தீருமோ? (அறியேன்); எமது பெருமானிடத்து இத் தீங்கு முன்
செய்தவர்களைக் காணேன்; மொய்த்த வீரக் கழலையணிந்த
வேடர்கள் ஒளியுடைய நெடிய அம்பினால் உளவாம் புண்களை
எப்போதும் தீர்க்கும் நிச்சயமான மருந்துகளைப் பொன்செய்யும்
மலையின் தாழ்வரையி னிடத்திருந்து தேடிக்கொண்டு வருவேன்"
என்று சொல்லிப் போயினார். 170

     819. (வி-ரை.) என் செய்தால் தீருமோ? -
"ஆவதொன்றறியேன்" "என் செய்வேன்" என்று மனமழிந்த
திண்ணனார் இதனை எவ்வகையாலும் தீர்த்தல் வேண்டுமன்றே?
என்ன செய்கை செய்தால் இது தீருமோ என மேலும் எண்ணிச்
சூழ்வேன் என் றெண்ண மிடுவாராயினர். குருதி கண்டதும் முதலில்
மயங்கி வீழ்ந்தார்; பின் தேறி இது செய்தாரை ஒறுப்பேன் என்று
வீராவேசத்தாற் றோடினார்; பகை ஒன்றும் காணாமையால் மனக்
கொதிப்பும் தடுமாற்றமும் நீங்கச், சோகத்தோடு கதறினார்; அதன்
பின்னர் இத்தீங்கினை எவ்வகையானுந் தீர்த்தல் வேண்டும், அதனை
எண்ணிச் செய்வேன் என்று நிதானித்து ஆராயத் தொடங்கினார்.
இஃது இப்போது அவரது மனநிலை, இவ்வாறே மேல் வருவனவும்
காண்க.

     என் செய்தால் தீரும் - என் செய்கே னென்றதைத்
தொடர்ந்த மனநிகழ்ச்சி.

     தீங்கு முன்செய்தார் தம்மைக்காணேன் - தீங்கு
செய்தாரைத் தண்டித்தல் அத்தீங்கினால் விளைந்த துன்பத்தைப்
போக்காவிடினும் துன்பப்படுவார்க்கு ஒருவாற்றால் மன அமைதி
உண்டாக்கும் வகையால் ஒருவகைத் தீர்வாகமேற்கொள்வது
உயிரியற்கையாம். இதுபற்றியே முன்னர்த் திண்ணனார் "யார்
இதுசெய்தார்?" என்று கிளம்பி வேடரையும் விலங்கினத்தையும்
தேடிச் சென்றனர். அக்கருத்தினைத் தொடர்ந்தே இங்குக் காணேன்
என்றார். செய்தாரைக் கண்டு ஒறுத்திருந்தேனாகில் அது அம்மட்டில்
ஒருவகைத் தீர்வாகி, மேலும் இங்ஙனம் விளையா வண்ணம்
தடுப்பதுடன், அவரால் நேர்ந்த புண்ணின் மூலத்தை அறிந்து
அதற்குத் தக்கபடி மாற்றுச் செய்து தீர்க்கலாகும் என்பதும்
கருதியதாம்.

     மின்செய்வார் பகழிப்புண் - விளக்கமுடைய கூரிய
அம்புகளாலாகிய புண், இப்புண் எதனாலுண்டாகியது என்று
அறிந்திலரேனும், நோய்மூலம் நாடாது நோயை மட்டும் நாடி மருந்து
செய்யும் நவீன மருத்துவர்போலப், புண்ணின் விளைவாகிய உதிரம்
பாய்தலும் பிறவும் கண்டு, பகழிப்புண்ணிலும் இவை காணப்படுதலால்
அதன் தீர்வாகிய மருந்தே இதற்கும் ஆம் என்று அனுமான
அளவையாற் றுணிந்து, பகழிப் புண்தீர்க்கும் மெய்ம்மருந்து
தேடினார் என்க.

     மெய்ம்மருந்து - பிழையாத - நிச்சயமாகிய - மூலிகைகள்.
மெய் - உடல் எனக் கொண்டு உடற்புற மருந்து என்றலுமாம்.
உயிரைச் சார்ந்த பவநோய் தீர்க்கு மருந்து வேறுண்மையுமறிக.

     பொன் செய்வரைத் தாழ்வில் - என மாற்றுக. தாழ்வரை
- இல்முன் - முன்றில் என வருவனபோல வரைத்தாழ்(வு)
எனற்பாலது தாழ்வரைஎனவந்தது. தாழ்வு - பள்ளம் - தாழ்ந்த
இடத்தை யுணர்த்துதலின் ஆகுபெயர். "பள்ளந்தா முறுபுனலிற்
கீழ்மேலாக" (திருவாசகம்), "அன்ன தன்றிருத் தாழ்வரை" (23)
என்றவை காண்க.

     பொன்செய் - பொன்விளையும் நிலத்தின் விளைவனவும்,
பொதுவாய் மலையின் விளைவனவும் ஆகிய மருந்து மூலிகைகள்
மிக்க வீரியமுள்ளன என்பர். பொன்முகலி பெருகுதற்கிடமாதலின்
பொன்செய் வரை என்றார். முகலி இம்மலையினின்று
பொன்கொழித்து வருதல் மேல் 747 - ல் உரைக்கப்பட்டது. பொன்
- அழகு எனக்கொண் டுரைப்பாருமுண்டு.

     கொண்டு வருவன் நான் என்று போனார் - தேடி
எடுத்துக் கொண்டு நான் வருவேன் என்று சொல்லிப்போயினர்.
சொல்லுதல் - தேவர்க்கு அறிவித்து அவரைத் தேற்றுதல்
கருதியது.

     வருவன் என்று போனார் - செய்கை போதலேயாயினும்,
திண்ணனார் முன் கருதியது வருதலேயாம். வரும் ஆவலே அவர்
கருத்தின் மிக்கிருந்தது என்பது குறிப்பு. உலக வழக்கிலும்
போகின்றவர்கள் போகின்றேனென அமங்கலமாகக் கூறாமல்
வருகின்றேன் என்று சொல்லிப்போகும் மரபும் இதுபோன்ற
கருத்துடையதாம்.

     மருந்து நாடி - என்பதும் பாடம். 170