821.
மற்றவர் பிழிந்து வார்த்த மருந்தினாற் றிருக்கா
                                  ளத்திக்
கொற்றவர் கண்ணிற் புண்ணீர் குறைபடா தொழுகக்
                                 கண்டே
"யிற்றையி னிலைமைக் கென்னோ வினிச்செய
                           "லென்று பார்ப்பா
"ருற்றநோய் தீர்ப்ப தூனுக் கூ"னெனு முரைமுன்
                              கண்டார்.
172

     (இ-ள்.) வெளிப்படை. இவ்வாறு மற்றுப் பிழிந்து வார்த்த
மருந்தினால் திருக்காளத்தி யப்பருடைய கண்ணின் புண்ணினின்று
வரும் குருதிநீர் குறைவுபடாமல் முன் போலவே வழிய, அவர்கண்டு
"இந்நாளின் நிலைமைக்குத் தீர்வாக இனிச் செய்வது என்னையோ?"
என்று ஆராய்ந்து எண்ணுவார் "ஊனே ஊனுக்கு உற்ற நோய்
தீர்ப்பது" என்னும் பழமொழி தம் நினைவின் முன்வர உணர்ந்தார்.

     (வி-ரை.) மற்று - அசை. மற்றுப் பிழிந்து எனவும், அவர்
கண்டே
எனவும் கூட்டுக. மாற்று என்பது மற்று என
விகாரப்பட்டது என்றலுமாம். மாற்று - தீர்வு. கொற்றவர் -
தலைவர். முன்னர் முதல்வனார், நாயனார் என்றதற்கேற்ப இங்குக்
கொற்றவர் என்றார். கொற்றமாவது தாம் பெரியராயினும்
அன்பர்க்கெதிர்வந்து ஆட்படுத்தும் காண்க.

     புண்நீர் - புண்ணினின்றும் போந்தநீர்; குருதி. உடலின்
மேலிடம் எங்கும் போர்த்த மேற்றோலைப் பிளந்து உள்ளிருக்கும்
தசை குருதி முதலியவை வெளியிற் காண்பதுவே புண் எனப்படும்.
புண் - (Injury) என்பதற்கு (Breach of the continuity of the cutaneous
membrane)
மேற்றோலின் தொடர்ச்சி அறுபடுதல் என்று நவீன
அயல்நாட்டு மருத்துவர் கொள்ளும் வரையறையும் காண்க. உடலின்
உள்ளே ஓடிப் புண்ணாகிய திறப்பினின்றும் வெளிவரும் செந்நீர்
குருதி இரத்தம் - எனப்படும்.

     இற்றையின் நிலைமை - தமது தலைவர்க்கு இன்று இந்த
நோய்கண்டதும், அது, தாம் இதுவரை முயன்றும் எவ்வாற்றானும்
தீராமையும் ஆகிய நிலைமை.

     என்னே இனிச் செயல் என்று பார்ப்பார் - இதுவரை
செய்த உபாயங்கள் பயனற்றவையா யொழியவும், மனஞ்சலித்துவிடாது
மேலும் ஆய்ந்தனர். இதுவும் உலகியற்கை. "இறுவரை காறு முயல்ப"
என்பது நீதிநூல். பார்ப்பார் - வினைப்பெயர். ஆராய்வாராகிய
திண்ணனார். பார்ப்பார் - கண்டனர் எனக் கூட்டி முடிக்க.
பார்த்தல்
இங்கு மனத்தினுள் ஆய்ந்து பார்த்தலின்மே னின்றது.

     உற்றநோய்........உரை - உரை - பழமொழி; "ஊனுக்குஊன்"
என்பது பழமொழி. உற்றநோய் தீர்ப்பது என்பது அதற்கு உரை.
"மாம்ஸ0 மாம்ஸெந வர்த்ததே" என்னும் மேற்கோளுங் காண்க.
ஊனுக்கு உற்றநோய் தீர்ப்பது ஊன் எனமாற்றி உரைத்துக்
கொள்க. இது அந்நாளில் வேடர்களுக்குள் வழங்கிய பழமொழிகளில்
ஒன்று என்று தெரிகின்றது. இவர்களது குலத்தொழிலாகிய
வேட்டைப் போரில் பலகாலும் உடற்பகுதிகள் சிதையக்
காண்பாராதலின் அதற்கு இவ்வாறு ஆகியதொரு தீர்வும் கண்டு
அதனைப் பழமொழியாகவும் வழங்கினர் என்பதாம். மனிதரது
உடற்பகுதிகள் சிதைந்து ஊறுபட்டபோது பிற மனிதருடல்களிலேனும்,
பிற விலங்கு முதலியவற்றி னுடல்களிலேனும் அவற்றிற்கு ஒத்த
பகுதிகளைப் பெற்று இரத்தச்சூடு மாறா முன்னம் சிதைந்த
பகுதிகளில் ஒட்டிப் புண்ணாற்றுவதென்ற வொருவகை மருத்துவ
முறையினை இந்நாள் நவீன மருத்துவரும் கையாளுகின்றனர்.
மக்களின் உடலில் எலும்பின் பகுதி ஊறுபட்டால் அதனை நீக்கி
வேறு உடலின் எலும்பின் ஒத்த பகுதியைச் சேர்த்திப்
பொருத்துவதும், வேறு பல பகுதிகளைப் பொருத்துவதும், மனிதரது
கண் புண்ணாகவே அதனைக் குடைந்து எடுக்கவேண்டி வந்தபோது
நாய், பூனை முதலிய பிராணிகளின் கண்களைத்தோண்டி உடனே
அப்பிவைத்திடுவதும் ஆகிய இவை போன்ற மருத்துவ முறைகள்
இந்நாளில் மேம்பட்டனவாகச் சொல்லப்பட்ட மருத்துவச் சாலைகளில்
செய்யப்படுகின்றன. இவை பண்டைநாளில் வனவேடர்
கையாண்டதொரு பழைய வழக்கத்தின் வழிவந்த எச்சம் என்று
சொல்லக்கூடியதாகின்றது. மருத்துவம், உழவு முதலிய
கலைஞானங்களின் அனுபவ உண்மைகளைப் பழமொழிகளாக
வழங்குவது நம் நாட்டிலும் ஏனை நாடுகளினும் உள்ள வழக்கமாம்.
ஒத்ததற்கு ஒத்தமுறை (Like for like) என்ற ஒப்புத்தீர்வு முறை
(Homeopathy)
ப் பழமொழியும் இதுபோன்ற பிறவும், இவைபோன்ற
ஏனைக் கலைஞானப் பழமொழிகளும் காண்க.

     கலைஞானங்களின் அனுபவ உண்மைகள் மறதி முதலிய
காரணங்களால் மாறுபடாது நிலைத்து நிலவவும், எளிதில் யாவரும்
பயிலவும், நினைவுகூரவும் அவற்றைப் பழமொழிகளாக வழங்கும்
வழக்கம் உதவிபுரிகின்றது. அவ்வழக்கம் இங்கு அரிய பெரிய
செயலுக்கும், செயலின் விளக்கத்துக்கும் பயன்பட்ட வரலாறு
இச்சரிதத்தினாற் காணலாம்.

     முன் கண்டார் - மனக்கண்ணின் முன்னே வரக்கண்டனர் -
நினைவுக்கு வர அறிந்தனர். முன்உரை என்று கூட்டிப் பழமொழி
என்று கொள்ளலுமாம்.

     இழியக் கண்டும் - என்பதும் பாடம். 172