822.
|
"இதற்கினி
யென்க ணம்பா லிடந்தப்பி னெந்தை
யார்கண்
அதற்கிது மருந்தாய்ப் புண்ணீர் நிற்கவு மடுக்கு"
மென்று
மதர்த்தெழு முள்ளத் தோடு மகிழ்ந்துமுன் னிருந்து
தங்கண்
முதற்சர மடுத்து வாங்கி முதல்வர்தங் கண்ணி
லப்ப, 173 |
822.
(இ-ள்.) வெளிப்படை "இனி இம்மருந்து செய்தற்காக,
எனது கண்ணை அம்பினாலே தோண்டி அப்பினால் எமது
பெருமானாரது கண்ணில்நேர்ந்த நோயினுக்கு இதுவே மருந்தாகி,
அதனாற் புண்ணினின்று போதுகின்ற குருதிநீர் வராமல் நிற்கவும்
கூடும்" என்று எண்ணிக், களித்து எழுகின்ற உள்ளத்தோடும்
மகிழ்ந்து திருமுன்பு இருந்துகொண்டு, தமது கண்முதலைச்
சரத்தினால் ஊன்றித் தோண்டி எடுத்துக் கையில் வாங்கி
முதல்வனாரது கண்ணில் அப்ப, 173
822. (வி-ரை.)
இதற்கு - "ஊனுக்குஊன்" என முன்கண்ட
உரையாற்றெரிந்த மருந்து பெறுதற்கு முதல்வனாரது புண்ணாகிய
ஊனில் அப்புதற்கு அது போன்ற கண்ணாகிய ஊன்பெற வேண்டிய
அதனுக்கு. இதற்கு - இந்நோய்க்கு என்றலுமாம்.
என்கண்
இடந்து அப்பின் - கண்ணாகிய ஊன் வேண்டும்
அதற்கு மான் முதலியவற்றைக் கொன்று அவற்றின் கண்ணைத்
தோண்டி அப்பலாகுமே யெனின் அது தாமதப்படுதலோடு இறந்த
பிராணியின் அங்கமாதலின் சூடுதணிந்து ஒவ்வாமலும்,
கொடுக்கத்தக்க கண்ணையுடைய தாம் பக்கத்திலிருப்ப வேறெங்கும்
இதனைத் தேடவேண்டுவதில்லை எனத் துணிந்தனர். யாக்கைதன்
பரிசு அற்ற (803) நிலையிலிருந்தனராதலின் அவ்வியாக்கையினின்று
கண்ணை நினைத்தனரன்றி அதனை யிடக்கும் போதும் இடந்த
பின்னும் உளதாகும் துன்பமுதலாயினவற்றை நினைந்தாரிலர்.
என்கண் - ஞானேந்திரியங்கள் ஐந்தும் இருக்குமாதலின்
தலையே எண் சாணுடம்பில் முதன்மை பெற்றதாம்.
அவ்வைந்தனுள்ளும், சேய்மையிலுஞ் சென்றியைந்தறிதலாற் கண்
சிறந்தது என்ற குறிப்பால் என்கண் என்று விதந்து கூறினார்.
இறைவனது
கண்ணினின்றும் போந்த முருகவேளினது
அருளாற் போந்தவர் திண்ணனாராதலின் கண்கொடுத்தல்
முறையேயாம் என்ற குறிப்பும் பெற என்கண் - என்றார் எனலுமாம்.
புண்நீர்
- புண்ணிலிருந்து வடியும் குருதியாகிய செந்நீர்.
நிற்கவும்
அடுக்கும் - வடியாமல் நிற்கவும் கூடும். உம்மை
ஐயம்பற்றி வந்தது. "அப்பியும் காண்பன்" என்ற திருமறமும் காண்க.
மதர்த்து
எழும் - களிப்புற்றதனால் எழுகின்ற. மதர்த்தல் -
மகிழ்தல் - களிப்புறுதல். எழுதல் - பூரித்தல்.
காரியம் -
கைகூடுமுன்பே இவ்வாறு மருந்தாகவுதவும் பேறு பெற்றதற்கு
மகிழ்ந்தனர்.
முன்
இருந்து - திருமுன் வீற்றிருந்து - மருந்துகள் பிழிந்து
வார்க்கும்போது நின்ற திண்ணனார் இப்போது கண்ணைத்தோண்டி
வாங்கும்போது அசைவின்றியிருப்பதாக இருந்தனர் என்க.
உடற்பகுதிகளை மருத்துவர் அறுக்கும்போது அசைவற்றிருத்தல்
வேண்டுமென்பது முறை. மடுத்து - வைத்து - ஊன்றி. வாங்கி
-
கண்ணைத் தோண்டிப் பிரித்து . வேறாக எடுத்து.
தங்கண்
முதல் - என்க. கண்முதல் - கண்ணின் வேர்.
முதல் - வேர். அடிப்பாகம். "நின்முதல் வழிபடத் தன்மகற் றடிந்த
தொண்டர்" (கோயினான் - 40), "வெஞ்சின மாசுணந் தன்முதல்
முருக்க, நென்முதற் சூழ்ந்த நீர்ச்சிறு பாம்பு" (மேற்படி 8) என்பன
காண்க. முதற்சரம் என்று கூட்டி முதன்மையான
அம்பு
என்றுரைத்தலுமாம். முதன்மையாவது திண்ணப்பனாரைக்
கண்ணப்பனாராக ஆக்குதற் குரியபடி வலது கண்ணைத்
தோண்டியும், இடது கண்ணைத் தோண்ட ஊன்றியும் உதவிய
சிறப்பு. பின்னரும் "ஒருதனிப்பகழி" (826)
என்றது காண்க.
இச்சிறப்புப்பற்றிக் "கணைகொள் கண்ணப்பர்" (தக்கேசி -
திருநின்றியூர் - 2) என்று நம்பிகள் அருளிய குறிப்பும் காண்க.
இடக்கண்ணுக்கு இரண்டாமுறை அம்பு எடுத்தலின் இதனை
முதற்சரம் என்றார் என்றுரைப்பாருமுண்டு.
சரம்
மடுத்தல் - அம்பினை ஊன்றுதல். "கணையது மடுத்து",
"மற்றைக் கண்ணிலும் வடிக்கணை மடுத்தனன்"
என்பன திருமறத்
திருவாக்கு. வாங்கி - தோண்டியெடுத்த கண்ணினைக்
கையில்
வாங்கி. "கையில் வாங்கி" என்பது திருமறம்.
சரம்
எடுத்து - என்பதும் பாடம். 173
|