823.
|
1நின்றசெங்
குருதி கண்டார்; நிலத்தினின் றேறப்
பாய்ந்தார்;
குன்றென வளர்ந்த தோள்கள் கொட்டினார்; கூத்து
மாடி
"நன்றுநான் செய்த விந்த மதி"யென நகையுந்
தோன்ற
வொன்றிய களிப்பி னாலே யுன்மத்தர் போல
மிக்கார். 174 |
823.
(இ-ள்.) வெளிப்படை குருதிநின்றதைக் கண்டார்;
அந்தப்பெரு மகிழ்ச்சியினாலே நிலத்தினின்று உயரப்பாய்ந்து
குதித்தார்; மலை போல வளர்ந்த தமது தோள்களைக் கொட்டினார்;
கூத்தும் ஆடி "நான் செய்த இந்த மதி - யோசனை - மிக நன்று"
என்று சிரிப்புத் தோன்றப் பொருந்தியகளிப்பினாலே உன்மத்தர்
போன்ற நிலையில் மிக்கவராயினர். 174
823. (வி-ரை.)
நின்ற செங்குருதி கண்டார் - குருதி
வெளிவராத நிலைமையைக் கண்டாராதலின் செங்குருதி நின்றது
கண்டார் எனமாற்றிப் பொருள் கொள்க. "வென்ற வைம் புலனான்
மிக்கீர்" (401) என்றதுபோலக் காண்க. "நீங்கிய நாணொடு"
என்றாற்போல இவ்வாறு வருதல் பொருத்தமில் புணர்ச்சி என்பது
சுப்பராய செட்டியாருரை.
நிலத்தினின்று
ஏறப்பாய்ந்தார் - இங்குக் கூறிய
ஏறப்பாய்தல், தோள்கொட்டுதல், கூத்தாடுதல், நகை தோன்றுதல்,
உன்மத்தர் போலாதல் எனுமிவை பெருமகிழ்ச்சியால்
வெளிப்படக்காணும் உடற்செயல்கள். முன் குருதி கண்டபோது
மனமும் மெய்யும் மொழியும் முடங்கி மயங்கிச் சோர்ந்து
நிலத்திடைப் பதைத்து வீழ்ந்தார் (814). குருதி நிற்கக்கண்ட
இப்போது அவை தழைக்கத் தாமும் நின்று ஏறப்பாய்ந்தார்.
ஏறப்பாய்தல் - நின்ற இடத்தினின்றும் உயரக் கிளம்பிக் குதித்தல்.
குன்றென
வளர்ந்த தோள்கள் கொட்டினார் - வளர்ந்த
- குருதி கண்டபோது கையிற் சிலையுடன் ஊனும் சிதறிவீழ்த்தித்
(814) தோள்கள் மெலிந்தன; குருதி நிற்கக் காணலும் அம்மகிழ்ச்சி
மிகவே அவை குன்று போல வளர்ச்சிபெற்றன என்க. குன்றென -
முன்னர்க் குன்றுபோல வளர்ச்சிபெற்றும் இப்போது மெலிந்த
தோள்கள் தமது முன்னை நிலையாகிய குன்றுபோல. "செவ்வரை
போற்புய மிரண்டும்" (701) என்றதுகாண்க. நாயகனைப் பிரிந்த
சோகத்தால் நாயகிக்கு உடல் மெலிந்து கைவளை கழலுதலும்
அவனைக் கூடியவழி உடல் பூரித்துக் கைவளை உடைதலும்
முதலியனவாக அகப்பொருணூல்களிற் பேசப்படும் நிலைகளி
னியல்பை இங்குக் குறிக்க.
கூத்தும்
ஆடி - தம்மை மறந்து கூத்தாடுதல் மிக்க
மகிழ்ச்சியின் விளைவு. "கும்பிடுதலும், தட்டமிடுதலும், கூத்தாடுதலும்
உவகை மிகுதியில் நிகழும் மெய்ப்பாடு" (சித்தியார் - 12 - 2) என்ற
பொழிப்புரையும் காண்க. "ஆசையொடு மரனடியா ரடியாரை
யடைந்திட் டவர்கரும முன்கரும மாகச் செய்து" என்ற ஞான
சாத்திரத் (12 - 2) திருவாக்கிற் கண்டவாறு இங்குத் திண்ணனார்
அரனையே யணைந்தனர்; அரனை ஆசையொடும் அடைந்தார்;
அவர் கருமந் தன் கருமமாகச் செய்தார்; அவர் பிரேரணையாகிய
அருண்ஞானக் குறியின்நின்று தம்மை மறந்து
அவரையே
கும்பிட்டு அருச்சித்தார்; இங்கு அவரது நோய்தீரக் கண்டபோது
உவகையினாற் கூத்தும் ஆடினர்; சீவன் முத்த நிலையாகிய பரம
உபசாந்தத்தை அடைந்தனர் - என்பது க. சதாசிவ செட்டியார்
உரைக் குறிப்பு.
நான்
செய்த இத்தமதி நன்று- என மாற்றுக. மதி
-
எண்ணம் - ஆலோசனை. மதித்தற்கருவியின் றொழிற்பாடு.
செய்தமதி - மதி - உள்ள நிகழ்ச்சி; செய்தல்
-
உட்கருவியின்றொழில். மதி - மதியாற்றூண்டப்பட்ட
செயலுக்கு
ஆகு பெயரென்றலுமாம்.
ஒன்றியகளிப்பினாலே
உன்மத்தர் போல - ஒன்றிய -
பொருந்திய முன்னிருந்த சோகமும் கவலையும் நீங்க இப்போது
வந்து சேர்ந்த. களிப்பினாலே உன்மத்தர் போலாகுதல்
மதமிகுந்தபோது உளதாம் உட்கரண புறக்கரணநிலை. உன்மத்தர் -
மதம்மிக்கவர். உத் - மேல். உற்பாதம்,
உற்பவம், உற்பீசம்
என்பவை காண்க. மத்தம் - மதத்தாலாகும்
நிலை.
மிக்கார்
- இந்நிலையின் மெய்ப்பாடுகளின்
மிகுதியுடையராயினார்.
குன்றெனவளரும்
- என்பதும் பாடம். 174
|