824.
|
வலத்திருக்
கண்ணிற் றங்க ணப்பிய வள்ள லார்தந்
நலத்தினைப் பின்னுங் காட்ட நாயனார் மற்றைக்
கண்ணி
லுலப்பில்செங் குருதி பாயக் கண்டன ருலகில்
வேடர்
குலப்பெருந் தவத்தால் வந்த கொள்கையி னும்பர்
மேலார், 175
|
824.
(இ-ள்.) நாயனார் தலைவராகிய காளத்தியப்பர்;
வலத்திருக் கண்ணில்.......காட்ட - தமது வலது திருக்கண்ணிலே
தம் வலக்கண்ணைத் தோண்டி அப்பிய வள்ளலாராகிய கண்ணப்ப
நாயனராது நன்றாந்தன்மையை மேலுங்காட்டுதற்பொருட்டு; மற்றைக்
கண்ணில்..........கண்டனர் - தமது மற்றைக்கண்ணாகிய இடது
கண்ணில் இடையறாது செங்குருதி பாய்ந்திழியும்படி செய்தனர்;
உலகில்.....மேலோர் - இவ்வுலகிலே வேடர்குலம் செய்த பெருந்தவங்
காரணமாக அதனில் வந்தவதரித்த, கொள்கையினால் தேவரினும்
மேலவராயின திண்ணனார் (அதனைக்கண்டு), 175
824. (வி-ரை.)
கண் அப்பிய வள்ளலார்- கண்ணை
இடந்து அப்பியதனால் வள்ளலாந்தன்மை வெளிப்படக் காண
நின்றவர். அப்பிய - காரணப்பொருளில்
வந்த பெயரெச்சம்.
வள்ளலார் - முன்னர் ஒரு கண் அப்பியதோடு
பின்னும் மற்றைக்
கண்ணையும் இடந்து அப்ப ஒருப்படுபவர் என்ற குறிப்புப்பெற
இங்கு வள்ளலார் என்றார். முன்னர் "வள்ளலார்
மலையை நோக்கி"
(751) எனக் காளத்திநாதரை வள்ளலார் என்றார். "உள்ளதே தோற்ற"
என்ற சிவஞான போத உதாரண வெண்பாவில் (2சூ - 2அ)
வள்ளலவன் என்றவிடத்து "வள்ளல் என்றார் தற்பயன் குறியாது
வேண்டுவார் வேண்டியவாறே நல்கும் அருளுடைமை நோக்கி"
என்று சிற்றுரையிற் கூறியது காண்க. இங்கு அவ்வள்ளலாருக்கும்
வேண்டுவதை வேண்டியவாறே கொடுக்கும் வள்ளன்மை
பூண்டதனாற் கண்ணப்ப நாயனாரையும் அவ்வாறே வள்ளலார்
என்ற சுவை காண்க. ஏனை வள்ளல்கள் எனப்படுவோர் புகழ்
முதலியவற்றை விரும்பித் தமது புறப்பற்றாயுள்ளவற்றைத் தருவர்.
"யாதனின் யாதனி னீங்கிய னோத, லதனி னதனி னிலன்" என்றபடி
கொடைப்பொருள்களா லுளதாகும் உபாதி நீங்குதலாகிய
சுகங்கருதியும் தருவர். திண்ணனார் அவ்வாறின்றி ஒன்றும்
வேண்டாது உத்த மாங்கத்தில் உத்தமாங்கமாகிய கண்ணைக்
கொடுத்தனர் என்றதனை இங்கு உணர்க.
நலம்
- முற்றும் அன்பேயாந்தன்மை. பின்னும் காட்ட
-
முன் காட்டியதன்றிப் பின்னரும். மேலும் உறுதிப்படுமாறு. உம்மை
இறந்தது தழுவியது. பின்னருங் காட்டுதலாவது, தமக்குப் பயன்பட
மற்றொரு கண் எஞ்சியுள்ளது என்று கருதி ஒரு கண் கொடுத்தனர்;
அதனையும் வேண்டின் தருவரோ? என்ற ஐயப்பாடு நிகழாமற்
காட்டுதல். நாயனார் தலைவர்; ஆளாக உடையவர்தம் அடிமையை
எவ்வாறும் ஏவல்கொள்ள உரிமையுடையார் என்பதும், அடிமையினது
உடலும் பொருளும் ஆவியும் முழுதும் தலைவருடையனவேயாம்
என்பதும் கருதி இங்கு நாயனார் என்றார்.
கண்ணைத் தோண்டச்
செய்தவனாதல் முதல்வனாரது கருணைக் கிழுக்கில்லை, அவரத
நன்மையை ஆன்மாக்கள் அறிந்துய்யச் செய்யும் கருணையின்
விளைவாதலின் என்பது.
உலப்பில்
செங்குருதி பாய் - செங்குருதி உலப்பிலதாய்ப்
பாய என்க. உலப்பு - ஒழிவு. செங்குருதி
- அடைமொழி இயற்கை
குறித்தது.
பாயக்கண்டனர்
- பாயச்செய்தனர். பாய்தல்போலக்
காட்சிப்படுமாறு திருவுள்ளம் வைத்தனர். கண்டனர் -
காணுமாறு
செய்தனர் என்ற பொருளில் வந்தது. "பாய இருந்தனர்" (813) என்றது
காண்க. பாய - பாயும்படி செய்விக்க. பிரிவினை
விகுதி தொக்கது
என்று கொண்டு, அவ்வாறு பாய்தலை மேலோர் கண்டனர் என்று
கூட்டி உரைத்தலுமாம்.
மற்றைக்கண்
- வலத்திருக்கண் அல்லாத மற்றைக்கண்
அதாவது இடதுகண்.
வேடர்குலப்
பெருந்தவம் - "கானவர் குலம்
விளங்க.....அளவில் செய்தவத்தினாலே" (662) என்றவிடத்தும், அதன்
மேற்பாட்டுக்களிலும் உரைத்தவை பார்க்க.
வந்த
மேலோர் - கீழாயின அக்குலத்தில் வந்தவராயினும்
மேலோர் என்று கொள்ள நின்றது.
கொள்கையின்
உம்பர் மேலோர் - கொள்கை -
கொள்ளப்பட்டது. இங்கு அன்பு குறித்தது. உம்பர் -
மேல் உலகம்.
அவ்வுலக வாசிகளாகிய எல்லாத் தேவர்களையும் குறித்தது. உம்பர்
- உம்பரினும். ஐந்தனுருபு தொக்கது. உம்பர்கள் -
ஒவ்வோர்
பொருளை விரும்பிச் சிவனை பூசித்துப் பதம் பெற்றவர்கள்.
திண்ணனார் அவ்வாறன்றி ஒன்றையும் வேண்டாது அன்பே
வடிவாகி இறைவர் பொருட்டே பூசித்துப் பேறு பெற்றவர். ஆதலின்
அவரினும் மேலோர் என்றார். இதனை அறிந்த
"நான்முகன்
முதலாயுள்ள வானவர் வளர்பூ மாரி பொழிந்தனர்" (828) என்றதும்
காண்க. இங்கு உம்பர் என்றது தேவரில் மிக்க
திருமாலைக்
குறித்ததாகக் கொண்டு, அவரும் ஆழிவேண்டிக் கண்ணையிடந்
தருசித்தாராயினும் தமக்கு ஒரு பயனும் வேண்டாது இறைவனது
புண்தீர்த்தல் ஒன்றே கருதிக் கண்ணையிடந் தப்பியதனால்
அவரினும் மேலோர் என்றுரைப்பதுமாம்.
மேலோர் (திண்ணனார்)
கண்டபின் (825) என்று (825) -
எண்ணுவார் - ஊன்றி ஊன்றத் - தேவதேவர் - தரித்திலர் (826), -
பாகர் - அங்கணர் - அற்புதர் - திருக்கை - கையைத் - தடுக்க -
வாக்கு மூன்றடுக்கு என்ற (827) என்று இந்நான்கு பாட்டுக்களையும்
முடித்துக்கொள்க. 175
|