825.
கண்டபின் "கெட்டே! னெங்கள் காளத்தி யார்க
                                 ணொன்று
புண்டரு குருதி நிற்க, மற்றைக்கண் குருதி பொங்கி
மண்டுமற் றிதனுக் கஞ்சேன் மருந்துகை கண்டே;
                                னின்னு
முண்டொரு கண்; ணக் கண்ணை யிடந்தப்பி                      யொழிப்பே" னென்று
176

     825. (இ-ள்.) கண்டபின் - கண்டவுடன்; "கெட்டேன்........நிற்க
- ஓ! கெட்டேன்! எமது காளத்தியப்பருடைய கண்களில் ஒன்றில்
வந்த புண்ணினின்று பாய்ந்த குருதிவராமல் நின்றுவிட;
மற்றைக்கண்.......மண்டும் - மற்றைக் கண்ணில் குருதி பொங்கி
மிகுகின்றது; மருந்து கைகண்டேன் - இந்நோய்தீர்க்கும் மருந்தினை
அனுபவத்திற் கண்டு கொண்டேன்; மற்றிதனுக்கு அஞ்சேன் -
வரத்தகாத இது வந்ததனுக்கு அஞ்சமாட்டேன்; இன்னும்........கண் -
எனக்கு இன்னும் ஒரு கண் எஞ்சியுள்ளது; அக்கண்ணை........என்று -
அந்தக் கண்ணைத் தோண்டித் தேவர் கண்ணில் அப்பி
இந்நோயினைத் தீர்ப்பேன்" எனத்துணிந்து; 176

     825. (வி-ரை.) கண்டபின் - (மேலோர்) அதனைக்
கண்டபின். அதனை என்ற செயப்படுபொருள் வருவிக்க.

     கெட்டேன் - குருதிகாட்டும் சகுனம் கண்டபோதே
"அத்தனுக் கடுத்ததென் கொல்கெட்டேன்" (812) என்றது காண்க.
இது தம்பெருமானுக்குத் தீங்கு நேரக் கண்டு தரியாதெழுந்த மிக்க
இரக்கங் குறித்தது.

     எங்கள் காளத்தியார் - முன்னரும் "எங்களத்தனார்" (818)
என்றது காண்க.

     மற்ற இதனுக்கு என்றது மற்றிதனுக்கு என வந்தது. மற்ற -
வரத்தகாத - வேறுபாடாகிய. இதனுக்கு மற்று அஞ்சேன் என்று
கூட்டியுரைத்தலுமாம்.

     மருந்து கை கண்டேன் - "அஞ்சுவ தஞ்சாமை பேதைமை"
யாதலின் அஞ்சேன் என்றதற்குக் காரணங் கூறியவாறு.
கைகண்டேனாதலின் அஞ்சேன் என்க. கைகூடும் என்புழிப்போலக்
கை உறுதிப் பொருள்தரும் (உபசர்க்கம்) இடைச்சொல். முன்னர்
"நிற்கவும் அடுக்கும்" (822) என்ற ஐயப்பாட்டினிற் கண்ணைத்
தோண்டினர். இப்போது அந்த ஐயம் நீங்கியதனால்
உறுதிப்பெற்றெழுந்த துணிவு குறித்தது.

     ஒழிப்பேன் - குருதி பெருகும் நோயினைத் தீர்ப்பேன்.
செயப்படு பொருள் வருவிக்க.

     என்று - என மனத்திற் றுணிந்து.

     கெட்டேன்! - ஒன்று நிற்க - மற்றைக்கண் குருதிமண்டும் -
அஞ்சேன் - கை கண்டேன் - உண்டு - அப்பி ஒழிப்பேன் என
இவ்வாறு விரைவில் ஒன்றன்பின் ஒன்று வரக் கூறியது மிக்க
விரைவில் அவரது உள்ளத்தில் தொடர்ந்து நிகழ்ந்த பல்வேறு மன
நிகழ்ச்சிகளை அவ்வாறே குறித்தற்காமென்க. முன்னர் 815 - லும்
இவ்வாறுரைத்தது காண்க. 176