826. கண்ணுதல் கண்ணிற் றங்க ணிடந்தப்பிற் காணு
                                   நேர்பா
டெண்ணுவார் தம்பி ரான்றன் றிருக்கண்ணி லிடக்கா
                                   லூன்றி
யுண்ணிறை விருப்பி னோடு மொருதனிப் பகழி
                                 கொண்டு
திண்ணனார் கண்ணி லூன்றத் தரித்திலர் தேவ
                                தேவர்,
177

     826. (இ-ள்.) தங்கண் இடந்து - தமது கண்ணைத்
தோண்டி; கண்ணுதல் கண்ணில் அப்பின் - நுதற்
கண்ணினையுடைய தேவரது கண்ணிலே அப்பினால்; காணும்
நேர்பாடு எண்ணுவார் - காணும் நேர்பாட்டினை எண்ணுவாராய்;
தம்பிரான்.........ஊன்ற - திண்ணனார் தமது பெருமானுடைய
அத்திருக்கண்ணிலே தமது இடக்காலினை எடுத்து ஊன்றிக்கொண்டு,
மனதில் நிறைந்தெழுந்த விருப்பத்தோடும் ஒப்பற்ற ஒரு அம்பினை
எடுத்து அதனைத் தமது கண்ணில் ஊன்றவே; தேவதேவர்
தரித்திலர் - தேவ தேவராகிய காளத்திநாதர் தரித்திலராதலின், 177

     826. (வி-ரை.) கண்ணுதல் - இறைவர் காட்டிய அருட்கண்
காரணமாக நிகழ்ந்த இச்சரிதம் முடியுமிடமாதலின் இங்கு
இப்பெயராற் கூறினார். கண்ணுதல் - நுதலில் - நெற்றியில் -
கண்ணுடையவர். சிவபெருமான். "வல்லிருளாயெல்லா வுலகுடன்றான்
மூடவிரு ளோடும்வகை நெற்றி யொற்றைக்கண் படைத்துகந்த
உத்தமன்" (தக்கராகம் - கலையநல்லூர் - 4) என்று ஆளுடைய
நம்பிகள் அருளியபடி உலகுக்கு ஒளி நெறியாகிய அன்புநெறியினைக்
காட்டி உதவும் திருக்கண் என்பது குறிப்பு. சிவக்கண்ணனாகிய
வலக்கண்ணாற் பாசநீக்கமும், அருட் கண்ணாகிய இடக்கண்ணாற்
சிவமயமாக்கலும், ஞானக்கண்ணாகிய நெற்றிக்கண்ணால்
சிவானந்தானுபவ முறுவித்தலும் செய்கின்றாராதலின் கண்ணப்பரைத்
தம் வலப்பக்கத்தே என்றும்மாறாது நிற்கவைக்கும் இப்போது
இப்பெயராற் கூறினார் என்று ஆலாலசுந்தரம் பிள்ளை இங்கு
விசேடவுரை காண்பர்.

     காணும் நேர்பாடு எண்ணுவார் - நேர்பாடு - கண்ணுக்குக்
கண் நேர்பட்டு அமையும் பொருத்தம். காணும் - காணவேண்டிய.
காணத்தக்க. தெரியத்தக்க. காணுதல் இங்குப் பரிசத்தாலுணர்தல்
குறித்தது.

     கண்ணில் இடக்கால் ஊன்றி - கண்ணில் - கண்ணின்
பக்கத்தில். தமது எஞ்சிய ஒரு கண்ணையும் இடந்துவிடின் அதனை
அப்புதற்குரிய இறைவனது இடதுகண் இருக்குமிடம்
தெரியாதாகையால், அந்த இடத்தை அடையாளம் கண்டுகொள்ள
ஊன்றினர் என்க. கண் தோண்டியவுடன் அதன் சூடு தணியாமலும்
இரத்தம் குளிராமலும் உடனே அப்பினால்மட்டுமே ஊனொடுஊன்
ஒட்டிச்சேரும். ஆதலின், இதற்காக வறிதே தடவி முயன்று
தாமதப்படாதபடி இவ்வாறு முன்எச்சரிக்கை செய்தனர்.

     ஒரு தனிப்பகழி - ஒப்பற்ற பெருமையுடைய அம்பு.

     கண்ணில் ஊன்ற - தேவரது கண்ணிற் காலூன்றலும்,
பின்னர்த் தம் கண்ணில் அம்பு ஊன்றலும் தேவரது புண்தீர்க்கும்
தீவிரத்தால் விரைவில் ஒன்று போல நிகழ்ந்தன என்பதனை
ஊன்றி - ஊன்ற என்றதனாற் குறித்தார்.

     தரித்திலர் - தரித்திலராதலின். வலக்கண்ணை
இடந்தப்பியதனைத் தரித்த இறைவர், அம்பினை இடதுகண்ணி
லூன்றலும் தரித்திலர் என்றார். வலதுகண் தமதுபாகமும் இடதுகண்
அம்மையாரது கருணைப் பாகமுமாதலின் அப்பாகத்திற்குரிய இடது
கண்ணைத் தோண்டப்பார்த்தலைத் தமது பேரருள் தரியாதாயிற்று.
அதனால் கையைப் பிடித்துக்கொண்டு "வலத்தில் நிற்க" என்று
பேரருள் புரிந்தார் என வரும்பாட்டிற் குறித்தல் கருதுக.

     தேவதேவர் தரித்திலராதலின் (அந்தப்) பாகர் - அங்கணர் -
அற்புதர் - திருக்கை - தடுக்கும்; வாக்கு - என்ற - என
வரும்பாட்டுடன் கூட்டி முடித்துக் கொள்க.

     உண்ணிறை காதலோடும் - என்பதும் பாடம். 177