827.
செங்கண்வெள் விடையின் பாகர், திண்ணனார்                             தம்மையாண்ட
வங்கணர், திருக்காளத்தி யற்புதர் திருக்கை யம்பாற்
றங்கண்மு னிடக்குங் கையைத் தடுக்கமூன்
                             றடுக்கு நாக
கங்கண ரமுத வாக்கு "கண்ணப்ப நிற்க"
                                வென்ற.
 178

     827. (இ-ள்.) செங்கண்.......பாகர் - சிவந்த கண்ணையுடைய
வெள்ளை விடையினை ஊர்தியாகவுடையவரும்; திண்ணனார்......
அங்கணர் - திண்ணனாரை ஆட்கொண்ட அங்கண்மையுடையவரும்
ஆகிய; திருக்காளத்தி.......திருக்கை - அத்திருக்காளத்தி யற்புதரது
திருக்கை (தோன்றி); அம்பால்........கையை - அம்பு கொண்டு
கண்ணைத்தோண்ட முயற்சித்த அவரது கையினை; தடுக்க -
தடுக்கா நிற்க; நாககங்கணர் அமுதவாக்கு - பாம்பைக்
கங்கணமாகத் தரித்த இறைவரது அமுதமாகிய திருவாக்கு;
மூன்றடுக்கு - மூன்றுமுறை; "கண்ணப்ப நிற்க" என்ற -
"கண்ணப்பனே நில்!" என்றன. 178

     827. (வி-ரை.) செங்கண் - விடைக்கு இயற்கையடைமொழி.
வெள்விடை - இறைவனது இடபம் வெள்ளைநிறமுடையதாகச்
சொல்வது மரபு. "நரை வெள்ளே றொன்றுடையானை" (திருச்சிரா -
குறிஞ்சி - 1) என்ற ஆளுடையபிள்ளையார் திருவாக்கும் பிறவும்
காண்க. செம்மை - வெம்மை - முரண்தொடை. பாகர் - ஊர்ந்து
செலுத்துபவர் - யானைப்பாகர் முதலிய வழக்குக்கள் காண்க. பாகன்
என்ற சொல் வழக்கைச் சிலேடையாக வைத்துப் "படமாடும்
பாம்பணை யானுக்கும் பாவை நல்லாடனக்கும், வடமாடு மால்விடை
யேற்றுக்கும் பாகனாய்" (திருநாவலூர் - நட்டராகம் - 9)
என்றருளிய ஆளுடைய நம்பிகள் தேவாரமும் கருதுக.
விடையின்பாகர் - விடை - அறம். விதிவழி நடத்தல் அறமாம்.
இறைவன் சொன்ன விதியே அறமாவது.

      திண்ணனார் தம்மை ஆண்ட அங்கணர் - இறைவன்
சொன்ன விதியாகிய ஆகமப் "பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள்
போல் விளங்கத்" திண்ணனார் பூசை செய்தனராதலின் அவரை
ஆண்டனரென்பார் பாகர் - என்றதனை அடுத்து ஆண்ட
அங்கணர்
என்றார். முன்னர் அருட்கண் நோக்கத்தால்
ஆட்கொண்டனர். இங்குக் குருதி பெருக நின்ற அழகிய
திருக்கண்காட்டி ஆட்கொண்டனர் என்ற குறிப்புப்பட
அங்கணர்
- என்றார். முன்பு தந்தது பாசநீக்கம் என்பது 803 - ம்
திருப்பாட்டால் உரைக்கப்பட்டது. இங்குத் தந்தது சிவப்பேறு
என்பது என் வலத்தில் நிற்க - என்றதனாலறியப்படும்.

     அங்கண்மையாவது கருணையின் தன்மையன்றோ?
இங்குக்கண்ணைக்கொண்டு நோய் செய்தது அங்கண்மையாகுமோ?
எனின், மதர்த்தெழு முள்ளத்தோடு மகிழ்ந்து (822) என்றும்,
உண்ணிறை விருப்பினோடும் (826) என்றும் அறிகின்றபடி இது
திண்ணனார்க்கு வருத்தமும் நோயும் செய்யாது இன்பமே
விளைத்ததாகலின் அங்கண்மையேயாம் என்க.

     அற்புதர் - ஞானமே வடிவாயுள்ளவர். அற்புதம் - ஞானம்.
வேதவழிவருவது சைவநெறி. "வேதப் பயனாஞ் சைவம்" (சண்டீசர் -
புரா - 9). சைவ வழிவருவது பத்தி. "வேதநெறி பத்திநெறி வழாது"
என்பது திருவிளையாடற் புராணம். அன்புநெறிக்கு அருளும் முறை
ஞானமும் வீடும் தருதலாமென்க.

     நாககங்கணர் அமுதவாக்கு மூன்றடுக்ககு "கண்ணப்ப நிற்க"
என்ற எனக் கூட்டுக. மூன்றடுக்காவது நில்லு கண்ணப்ப என்று
மூன்றுமுறை சொல்லுதல். "நில்லு கண்ணப்ப! நில்லு கண்ணப்ப!
என்னன்புடைத்தோன்றல் நில்லு கண்ணப்ப!" எனவரும் நக்கீர
தேவரருளிய திருமறப்பகுதிகளும் "ஒல்லைநம்புண் ஒழிந்தது பாராய்!
நல்லை! எனப்பெருந் திருவேட்டுவர்" எனத்திருமறத்தினுட் கல்லாட
தேவநாயனார் அருளியதும் காண்க.

     திருக்கை யம்பாற் றங்கண் முன்னிடக்குங் கையைத்
தடுக்க
- சிவலிங்கத் திருமேனியினின்று ஒருகை முளைக்கச் செய்து
அதனாற் கண்ணப்பரது கையினை அம்புடனே பிடித்து அவர்
கண்ணைத்தோண்டும் செய்கையைத் தடுத்தது. "இன்னுரை யதனொடு
மெழிற்சிவ லிங்கந் தன்னிடைப் பிறந்த தடமலர்க கையாலன்னவன்
றன்கை யம்பொடு மகப்படப், பிடித்தருளினன், "ஆண்டகை,
ஒருகையாலு மிருகை பிடித்து" எனவரும் திருவாக்குக்கள் காண்க.
வாக்கினாற் றடுத்தலே போதும்; கையினாற் பிடித்துத் தடுத்தல்
வேண்டா எனின், அவ்வாக்கு அவர் செவியிற்புக்கு, அது அறிவிலே
தாக்கி, அறிவினா லேவப்பட்ட கை அவ்வறிவினாலே மீளத்
தடுக்கப்படுதல் வேண்டும். அதன்முன் செயலில் முளைத்து நிற்க
கை தடுக்கப்படுதல் வேண்டுமாதலின் திருக்கை பிடித்துக்கொண்டது.
அற்றாயின் கையினாற் பிடித்தாலே போதும் வாக்கு எதற்கு
என்னில் அவர்க்குப் பொருள் அறிவித்து அமுதமாக்குதற்கு வாக்கு
வேண்டப்படுமென்க. இதுபற்றியே "இன்னுயிரை யதனொடு மெழிற்
சிவ லிங்கந் தன்னிடைப் பிறந்த தட மலர்க் கையால்" என்றருளியது
திருமறம். கண்ணப்பரது தீவிரதரச் செயல் நோக்கி இரண்டும்
வேண்டப்பட்டன என்றலுமாம். "உற்றுமுன் பிடித்த" என மேல்வரும்
பாட்டிற் கூறியதும் காண்க.

     இடக்கும்கையை - இடப்பதற்குத் துணிந்து அம்பினைக்
கண்ணில் ஊன்றிய கையை. தடுக்க - தடுத்தல், அது முயன்றபடி
கண்ணைத் தோண்டாதவாறு அதனைப் பிடித்துக் கொள்ளுதல்.

     நாககங்கணர் - அமுதவாக்கு - மரணத்தை விளைவிக்கும்
விடமுள்ள நாகம் கையிற் கங்கணமாக அமையினும் வாக்கு
அதனை நீக்கும் அமுதமாம் என்றபடி. அமுத வாக்கு - இறத்தலும்
மீளவும் பிறத்தலுமின்றி மீளாநெறியாகிய முத்தியின் பத்திற்
கண்ணப்பரை "என் வலத்தில் நிற்க" என்று இதனையடுத்து
இப்போது இருத்துவதாகலின் இவ்வாறு கூறினார். அமுதம் -
இறவாத இன்பமுத்தி.

     அன்பர் தங்கண் - தடுக்குமுன்.....என்றே -
தடுக்கமுன்.........என்றே
- என்பனவும் பாடங்கள். 178