828.



கானவர் பெருமா னார்தங் கண்ணிடந் தப்பும் போது
மூனமு துகந்த வைய ருற்றுமுன் பிடிக்கும் போது
ஞானமா முனிவர் கண்டார்; நான்முகன் முதலா
                                  யுள்ள
வானவர் வளர்பூ மாரி பொழிந்தனர் மறைக
                                ளார்ப்ப.
179

     (இ-ள்.) வெளிப்படை வேடர் தலைவராகிய கண்ணப்பர்
தமது கண்ணைத் தோண்டித் தேவர்கண்ணில் அப்பிய காலத்தும்,
அவர் ஊட்டிய ஊனமுதை உவந்து - கொண்டருளிய ஐயராகிய
காளத்திநாதர் அவர் மற்றைக் கண்ணைத் தோண்டும் கையைத்
தோண்டும் முன்பே பொருந்திப் பிடித்த காலத்தும், ஞானப்பெரு
முனிவராகிய சிவகோசரியார் கண்டனர். வேதங்கள் ஆர்த்துப்
பிரமதேவர் முதலிய தேவர்கள் கற்பகப் புதுமலர் மழை
பொழிந்தனர். 179

     (வி-ரை.) கண்இடந்து அப்பும் போதும் - முதலில்
வலக்கண்ணைத் தோண்டி அப்பிய காலத்தும். இடக்கண்ணை என்ற
சுப்பராய செட்டியாருரை பிழைபோலும்.

     முன் உற்றுப் பிடிக்கும் போதும் என மாற்றுக. உம்மைகள்
எண்ணின்கண் வந்தன. அப்பியது முன்னும் பிடித்தது. பின்னும்
நிகழ்ந்தன. அப்பின என்னாது அப்பும்போதும் என்றதனால்
அதுபற்றியே முன்நிகழ்ச்சிகளையும், இவையிரண்டுங் கூறவே
இடைப்பட்ட எல்லா நிகழ்ச்சிகளையும் கண்டார் என்பது.
ஊனமுதுவந்த என்ற குறிப்புமது.

     ஊன் அமுது உவந்த ஐயர் - தள்ளத்தக்க ஊனைக்
கொள்ளத்தக்க அமுதமாக மிக மகிழ்ந்துகொண்ட பெருமை
யுடையாராதலின் அதனைத் தொடர்ந்தே அவ்வூனைப் பெற்றும்
சமைத்தும் ஊட்டியும் தொழில் செய்த கையினைப் பிடித்துக்
கொண்டனர் என்பது தொனிக்கின்றது காண்க. "கானவூ னமுத
மாக்கும் சிலை" (681) என இதனை முன்னர்க் குறிப்பிட்டதும்
கருதத்தக்கது.

     ஞானமா முனிவர் - சிவஞானமுடைய பெருமுனிவர்.
சிவகோசரியார். முன்னர் - "மாமுனிவர்" (801) என்றார். இங்கு
இறைவனருளினாற் காட்டவும் உணர்த்தவும்பட்ட ஞானத்தைப்
பெற்றவர் என்பார் "ஞானமாமுனிவர்" என்றார்.

     கண்டார் - செயல் காட்டக் காண்கின்றாய் (807)
என்றதனால், செயல்களின் மூலம் பரிவைக் காட்டுவிக்க
அச்செயல்களையும் கண்டார்; அவற்றால் அறியப்படும்
உள்ள
நிகழ்ச்சி யாகிய அன்பின் பெருக்கையும் கண்டார் எனச்
செயப்பபொருள் வருவிக்க. முனிவர்க்கும், இவர் மூலம் ஏனைய
ஆன்மாக்களுக்கு காட்ட இறைவர் இவ்வாறு நிகழ்த்தினாராதலின்
கண்டார்
என அவற்றின் பலன் கூறினார்.

     மறைகளார்ப்ப - வேதங்களைத் தேவர்கள் சொல்லிப்
பூமழை பொழிந்தனர் என்க. வேதமந்திரங்கள் திருவருள்
வெளிப்பாடுபற்றித் தாமே நாதத்தினின்று தோன்றி ஒலித்தன
என்றலுமாம். "ஒதுமறை யோர்பிறி தொலித்திடினு மோவா,
வேதமொழி யாலொளி விளங்கியெழு மெங்கும்" - (திருஞான -
புரா - 31) "இயற்றுபவரின்றியு மியம்பு, மங்கல முழக்கொலி
மலிந்த" (மேற்படி - 33) என்றவை காண்க. கற்பகப் பூமாரி
பொழிதல் முதலிய நிகழ்ச்சிகள் திருவருள் வெளிப்பாடு
நேர்ந்தபோதெல்லாம் நிகழ்வன 398 முதலியவை பார்க்க.
"அருளலும், விண்மிசை வானவர், மலர் மழை பொழிந்தனர்:
வளையொலி படகந், துந்துபி கறங்கின; தொல்சீர் முனிவரு
மேத்தினர்" என்றது திருமறம்.

     பிடித்தபோதும் - பூவின்மாரி - என்பனவும்
பாடங்கள். 179