835.
|
மருவிய
திருவின் மிக்க வளம்பதி யதனில் வாழ்வார்
அருமறை முந்நூன் மார்பி னந்தணர் கலய ரென்பார்
பெருநதி யணியும் வேணிப் பிரான்கழல் பேணி
நாளும்
உருகிய வன்பு கூர்ந்த சிந்தையா ரொழுக்க
மிக்கார். 5 |
(இ-ள்.)
வெளிப்படை. பொருந்திய திருவினாலே மிகுந்த
வளத்தையுடைய அந்தப் பதியில் வாழ்வாராகிய அரிய
மறைவிதிப்படி பூணூல் அணிந்த மார்பினையுடைய அந்தணராவார்
கலயர் என்று சொல்லப்படுபவர்; கங்கையினை
அணியும்
சடையினை யுடைய சிவபெருமானது திருவடிகளைப் போற்றித்
தினமும் உருகிய அன்புமிக்க மனத்தையுடையவரும் சைவவொழுக்க
மிகுந்தவருமாவர்.
(வி-ரை.)மருவிய
- மேற்பாட்டிற் கூறியபடி வேள்விப்
புகைப்பால் நாறும் மழை நீரின் பெருக்கினாற் பொருந்திய.
இறைவன் ஆணையினால் குபேரன் தன் பெருநிதியம் கொணர்ந்து
சேர்த்ததனால் வந்து மருவிய. திருவருட்சாதனமாகிய
திருவும்,
அதனால் ஏனை எந்தச் செல்வத்துக்கு மில்லாததாகிய மிக்க
வளமும் என்று இச்சரித நிகழ்ச்சியின் குறிப்பும் காண்க. வளம் -
இவ்வுலக வளமும் அவ்வுலக வளமும்.
வாழ்வார்
- வாழ்வாராகிய கலயர் என்பார் - சிந்தையாரும்
ஒழுக்கமிக்காருமாவர் என முடிக்க.
மறைமுந்நூல்
- மறைகளில் விதித்தபடி மறை
மந்திரங்களோதி அணியப்படுவதும், மறை ஒதும் நியதியுடைமை
ஏற்று அதற்கடையாளமாவதும் ஆகிய முந்நூல் என்க. முந்நூல்
-
மூன்றாகச் சேர்க்கப்பட்ட இழைகளையுடைய நூல். பிரமசாரிக்கு
மூன்று இழையும், இல்வாழ்வானுக்கு இருமூன்றாக ஆறிழையும்,
அவருள் மக்களுடையானுக்கு மும்மூன்றாக ஒன்பதிழையும் கொண்ட
நூல் அணிதல் விதி; ஆதலின் முந்நூல் எனப்படும்.
இங்கு
முந்நூல் - மும்மூன்றிழை குறித்தது. ஒன்பது போலவர்
மார்பினினூலிழை என்று, அப்பர் சுவாமிகள் தனித்திருக்
குறுந்தொகையில் இறைவனது பூணூலைப்பற்றி அருளுதலும்,
"ஒன்பதுகொண்ட மூன்றுபுரி நுண்ஞான்" என்ற
திருமுருகாற்றுப்படையும் காண்க. இவ்வாறன்றி அருமறை அந்தணர்
என்று கூட்டி யுரைப்பினுமமையும்.
அந்தணர்
- மறைமுந்நூன் மார்பினர் என்றலே அமையும்,
அந்தணர் என்றது மிகையாமெனின் அற்றன்று; அரசரும் வணிகரும்
நூலணிய மறைவிதி யுளதாதலின் அவரினின்று பிரிக்க அந்தணர்
என்றார். ஆயின் அந்தணர்
என்றலேயமையும் மறைமுந்நூல்
என்றல் மிகையாமெனின். அற்றன்று. அந்தணர்களுள் ஆச்சிரம
பேதம் பற்றியும் பிறவற்றாலும் முந்நூல் அணிதல் இல்லாத
அறவோரும் உளராதலின் இவர் அவ்வாறன்றி மறைவிதிப்படி
இவ்வாழ்க்கையினின்று அந்தணர் என்று காட்ட மறைமுந்நூல்
மார்பின் என்றலும் வேண்டுவதாயிற்று.
கலயர்
- இது திருக்கடவூர் இறைவனது பெயர். கலயம்
-
கலசம் - கடம், தேவர்கள் கொணர்ந்த அமிர்தகலசமே சிவலிங்கத்
திருமேனியாக உருக்கொண்டூன்றிய தலம் என்ற தலசரிதம் காண்க.
அக்காரணம்பற்றி இங்கு இறைவர் கலயர் என
வழங்கப்பெறுவர்.
அந்தந்தத் தலத்து எழுந்தருளிய கடவுளரின் பெயரை அவ்வவரை
வழிபட்டு ஒழுகுவோர்க்கு
இட்டுவழங்கும் வழக்கம்பற்றி
இந்நாயனாருக்கு கலயர் எனப் பேரிட்டு வழங்கப்பட்டனர்.
பெரு
நதி - கங்கை. உருவாலும் அளவாலும் பெரிதாதலோடு
சிறப்பாலும் பெரிதென்பார் பெருநதி என்றார். அஃதாவது
சிவபெருமான் சிரத்திற் றாங்கப்பெற்ற பெருமை வேறு
எந்நதிக்குமில்லாமல் இதற்கே சிறப்பாயுரியதாதல். கங்கைதோய்ந்த
நீள்சடையார் - (831) என்றவிடத் துரைத்தவை பார்க்க.
நாளும்பேணி
உருகிய என்க. உருகுதலுக்குக் காரணம்
அன்பும் பேணுதலுமாம். அன்பு கூர்ந்த உருகிய சிந்தை
எனக்கூட்டுக. அன்பினாற் பேணுதல் சாதனமும் - சிந்தை உருகுதல்
அதனாற்பெறும் பயனுமாம்.
ஒழுக்கம்
மிக்கார் - ஒழுக்கத்தால் மிகுந்தவர். ஒழுக்கம்
என்பது இங்கு வேதங்களிற் கூறப்பட்ட தர்மம்சர - சத்யம்வத
என்பனவாதி உலகநெறி நிற்கும் ஒழுக்கமன்றிச்ச சிவாகமங்களில்
விதித்த சரியையாதி சன்மார்க்கம் குறித்தது. வேதநெறி சைவநெறி
என்ற இரண்டனுள் வேத ஒழுக்கம் முன்னர் "மறைமுந்நூல்
மார்பினந்தணர்" என்றதனாற் கூறப்பட்டது காண்க. "வேதநெறி
தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க" என்றதும் காண்க.
இவ்வாறன்றிச் சிந்தையார் - என்றதை ஆறாம்
வேற்றுமைத்
தொகையாகக் கொண்டு, சிந்தையார்களது சைவ ஒழுக்கம்
என்றுரைப்பினுமமையும். இவ்வாறுவந்த சைவ ஒழுக்கத்தை
மேல்வரும்பாட்டாலும், அதனின் மிக்கு நின்ற தன்மையை அதற்கு
மேல்வரும் பாட்டாலும் விரித்துக் கூறுவார்.
இப்பாட்டால்
நாயனாரது நகரச்சிறப்பும், மரபும், பேரும்
சைவ ஒழுக்கத்திறமும் கூறப்பட்டன.
மார்பர்
- என்பதும் பாடம். 5
|