836.
|
பாலனா
மறையோன் பற்றப் பயங்கெடுத் தருளு
மாற்றான்
மாலுநான் முகனுங் காணா வடிவுகொண் டெதிரே
வந்து
காலனா ருயிர்செற் றார்க்குக் கமழ்ந்தகுங் குலியத்
தூபஞ்
சாலவே நிறைந்து விம்ம விடும்பணி தலைநின்
றுள்ளார். 6 |
(இ-ள்.)
வெளிப்படை. (அவர்), பாலனாகிய மறையவராம்
மார்க்கண்டேய முனிவர் பற்றிக்கொண்டதனால் அவரது பயமுழுதுங்
கெடுத்து அருள் செய்தவாற்றினால் விட்டுணுவும் பிரமதேவனும்
காணாத வடிவினைக்கொண்டு வெளிப்பட்டு வந்து காலனை
உதைத்துருட்டி உயிர் போக்கிய அமிர்தகடேசராகிய
சிவபெருமானுக்கு மணம்மிக்க குங்குலியத்தூபத்தை மிகவும் நிறைந்து
வீசும்படியாக இடுகின்ற திருப்பணியிற் சிறந்து நின்றவராயினார்.
(வி-ரை.)
பாலனாம் மறையோன் - மார்க்கண்டேயமுனிவர்.
பாலன் - பதினாறு வயதுடைமையிற் பாலன் என்றார்.
சிவபெருமான்
அருளிய வரத்தினால் இவர் என்றும் அந்தப் பதினாறுவயதே
உடையராகின்றாராதலின் அச்சிறப்புக்குறிக்கப் பாலன்
ஆம்
என்றார்.
பற்ற
- பற்றிக்கொண்ட காரணத்தினால். காரணப்
பொருளில்வந்த வினையெச்சம். மழைபெய்யக் குளநிறைந்தது
என்பதுபோலக் காண்க.
பயம் - எல்லாவற்றுக்கும் மேலான மரண பயம். இங்கு
அவர் பற்றுதற்குக் காரணமாய் வந்த காலபயம் குறித்தது.
பயங்கெடுத்தல்
- காலவேதனையைப் போக்குதல்.
அருளுதல் - சிவப்பேறாகிய மீளாநெறியில் வைத்தல். பாசநீக்கமும்
(உண்மையில் இது காலபாச நீக்கமாம்.) சிவப்பேறுமாகிய இருபயனுங்
குறித்தார். "வழிபாடு செய்யும் பாலன் மிசைச்சென்று
பாசம் விசிறி
மறிந்தசிந்தைக் காலன்" என்ற அப்பர்சுவாமிகள்
திருவிருத்தமும்,
"வஞ்சநமன் வரதனைக்கும் வன்பிறவி வேதனைக்கும் அஞ்சி
யுனையடைந்தே னையா பராபரமே" என்ற தாயுமானார் பாடலும்
காண்க.
மாலும்
நான்முகனும் காணா வடிவு - விட்டுணுவும்
பிரமனும் அடியும் முடியும் காணமாட்டாது கீழும்மேலும் நீண்டிருந்த
பெரிய அழற்றூணுருவம்.
காணா
வடிவுகொண்டு எதிரே வந்து - காணமுடியாது
நின்றவர் காணுமாறுள்ள தோர் வடிவுகொண்டு தாமே எதிரில்வந்து.
ஆணவ மறைப்பு உள்ளவழிக் காணா வடிவாய் நின்றதும், ஆணவ
நீங்கித் தானற்றவழி எதிர்வந்ததும் ஆம் என்று குறிக்கப்
பெருந்தேவர்களும் பெருமுயற்சி செய்தும் காணவொண்ணாதவர்
தாமே வெளிவருவர் என்றார். "கனவிலுந் தேவர்க் கரியாய் போற்றி,
நனவிலு நாயேற் கருளினை போற்றி" என்பனவாதி எண்ணிறந்த
தமிழ்மறைகள் காண்க.
பயங்கெடுத்
தருளும் ஆற்றல் ... எதிரேவந்து -
செற்றார் - இங்குக் காணும் வடிவுகொண்டு எதிர்வந்தது
அடியவர்க்குப் பயம்போக்கி அருள்செய்யும் பொருட்டேயன்றிக்
காலன் காணும்படியாகவன்று என்பது. அவனும் காண
வந்தனரேயெனின் நெல்லுக்கு இறைத்தநீர் புல்லுக்குமாவதுபோல
அவனும் கண்டான் என்க. ஆனால் அது பாலனுக்குப் பயங்கெடுத்து
அருளும் வடிவமாயிருந்தது. காலனுக்கு அதுவே உதைத்துருட்டிச்
சங்கரிக்கும் பயங்கொடுக்கும் வடிவமாயிருந்தது. எதிர்வருதல்
அடியார்க்கும், செறுதல் அல்லார்க்குமாக நின்றது. ஒரேநிலையில்
இவ்விரண்டு தன்மைகளும் நின்ற பெருமையை நக்கீரதேவநாயனார்
கோபப்பிரசாதம் (பதினொராந் திருமுறை) என்ற நூலில் "மறைபயில்
மார்க்கண் டேயர்க் கருளியும்" எனவும்,
"மறிகட லுலகின் மன்னுயிர்
கவருங், கூற்றுவன்றனக்கோர் கூற்றுவனாகியும்" என்றும்
பாராட்டினர். இவ்வாறு உதைபட்டபோது அதனால்வருந்துதலின்றிப்
பிரம விட்டுணுக்களுக்கும் காணக்கிடைக்காத திருவடியை யான்
அறியப்பெற்றேன் என்று காலன் இறுமாந்தனன் என்னும்
இக்கருத்தையே அப்பர் சுவாமிகள் "மேலு மறிந்தில
னான்முகன்மேற்சென்று கீழிடந்து மாலு மறிந்திலன்
மாலுற்ற
தேவழி பாடுசெய்யும், பாலன் மிசைச்சென்று
பாசம் விசிறி
மறிந்தசிந்தைக், கால னறிந்தா னறிதற் கரியான் கழலடியே" என்ற
திருவிருத்தத்தினுள் நகைச்சுவைபட அருளிய அழகு காண்க.
இத்தேவாரத்திருவாக்கினை நினைவூட்டி ஆசிரியர் பாலனாம்
என்றும், வழிபாடுசெய்யும் காரணத்தால் எதிர்வந்தார் என்ற
கருத்தைக் குறிக்கப் பற்ற என்றும், நான்முகன்
- மாலுமறிந்திலன்
என்றதனை மாலு நான்முகனுங் காணா என்றும்,
கூறியவாற்றால்
"முன்னோர் மொழிபொருளே யன்றி யவர்மொழியும், பொன்னேபோற்
போற்றுவம்" என்றபடி எடுத்துக் காட்டிய அருமை நோக்குக.
பற்ற
எதிர்வந்து செற்றார் - பற்றினால் வெளிவருவர், பற்றில்லா வழி
வெளிப்படார் என்று இறைவனது அருளையும் அதனை யடையும்
சாதனத்தையும் குறித்த நயமும் காண்க. "மறைய நின்றுளன்
மாமணிச் சோதியான், உறவு கோனட் டுணர்வு கயிற்றினான், முறுக
வாங்கிக் கடையமுன் னிற்குமே" என்ற கருத்தும்
இது. மாலு
நான்முகனும் பற்றில்லாது திருவடியைத் தேடியமையால்
வெளிப்படாது, பின்னர் இறைஞ்சியபோது வெளிப்பட்டனர்
என்பதும், பற்றும் வழிகள் இவை யிவையாம் என்பதும்
இலிங்கபுராணத் திருக்குறுந்தொகையினுள் அப்பர் சுவாமிகள்
பலவாற்றானும் வற்புறுத்தி அழகுபட அருளியது காண்க. "நன்றுநகு
நாண்மலரா னல்லிருக்கு மந்திரங்கொண், டொன்றிவழி
பாடுசெய
லுற்றவன்ற னோங்குயிர்மேற், கன்றிவரு காலனுயிர் கண்டவனுக்
கன்றளித்தான்" (திருஞான - தேவாரம் பண் - பழந்தக்கராகம் -
திருக்கோளிலி 3), "பதத்தெழு மந்திர மஞ்செழுத் தோதிப்
பரிவினொடு, மிதத்தெழு மாணித னின்னுயி ருண்ண
வெகுண்டடர்த்த, கதத்தெழு காலனைக் கண்குரு திப்புன
லாறொழுக, வுதைத்தெழுசேவடி யான்கட வூருறை யுத்தமனே"
(திருவித்தம் - 2), என்பன்வாதி எண்ணிறந்த தமிழ்மறைத்
திருவாக்குக்களில் இப்பெருமை பாராட்டித் துதிக்கப்பெற்றது காண்க.
"மார்க்கண்டர்க்காக மறலிபட்ட பாட்டையுன்னிப், பார்க்கிலன்பர்க்
கென்னபயங்காண் பராபரமே" என்ற தாயுமானார் பாடலும், பிறவும்
கண்டுகொள்க.
குங்குலியத்
தூபம் - குங்குலியம் என்பது தூளாக்கி
அனலிலிட்டுப் புகைத்தலால் நன்மணங் கமழும் ஒரு வாசனைப்
பண்டம். இது மலைக்காடுகளில் விளையும் ஒருவகை மரப் பிசின்.
இதனைக் குக்குலு - குற்குலு என்பர் வடமொழியாளர்.
செற்றார்க்குக்
கமழ்ந்த குங்கிலியத் தூபம் - இறைவனது
வழிபாட்டுக்கு உரியதாய்ச் சிவாகமங்களில் விதித்த குங்குலியத்
தூபம். திருவிளக்கும் தூபமும் வழிபாட்டுக்கு இன்றியமையாத
பொருள்கள். இவற்றை விதிப்படி உள்ளன்போடு இடுவோர்க்கு
இறைவர் அருள்கின்றார் என்பது "விரும்பிநல் விளக்குத் தூபம்
விதியினா லிடவல்லோர்க்குக், கரும்பினிற் கட்டி போல்வார்
கடவூர்வீ ரட்டனாரே" என்று இத்தலத் திருநேரிசையினுள்ளும்
"சங்கொலிப் பித்திடு மின்சிறு காலைத் தடவழலிற், குங்குலியப்புகைக்
கூட்டென்றுங் காட்டி" என்றுதிருவாரூர்த் திருவிருத்தத்துள்ளும்
அப்பர் சுவாமிகள் எடுத்துக் காட்டியருளினர். இங்குத் தூபத்தைக்
குறித்தது இந்நாயனாரது சரிதவாசங்கமழ்வது குறிக்க. சிறப்பாய்
விதித்த ஐவகைத் தூபங்களுட் குங்குலியம் ஒன்று. அவை
"குந்துருகந், துய்ய பெருங் கருப்பூரந் துன்னியகா ரகில்வெண்மை,
யெய்தியசந் தனமினிகுக்குலுவு மெனவறிக" என்ற
சிவதருமோத்திரத்தா லறிக. "சலம்பூ வொடு தூபமறந்தறியேன்"
என்றது முதலிய திருவாக்குக்கள் காண்க.
சாலவே
நிறைந்து விம்ம - மிக்க செறிவும் பரப்பும் குறித்த
ஒரு பொருட்பன்மொழி. விம்முதல் - நிறைவாகி
மேற்கிளம்புதல்.
தலைநிற்றல்
- அதுவே சிறந்த செய்தொழிலாக முனைத்தல்.
உள்ளார்
- சிவத்திருப்பணி செய்தலின் உளராயினார்.
அவ்வாறு சிவப்பணி எதுவும் செய்யாத ஏனையோர் பிறந்தும்
பிறவாதவர் எனப்படுவர் என்பது குறிப்பு. "பேசாத நாளெல்லாம்
பிறவா நாளே", "உளரானார் உளரானார்" (திரு. நா. புரா - 16)
முதலியவை காண்க.
மறையோன்
போற்ற - என்பதும் பாடம். 6
|