837.
|
கங்கைநீர்
கலிக்குஞ் சென்னிக் கண்ணுத லெம்பி
ராற்குப்
பொங்குகுங் குலியத் தூபம் பொலிவுறப் போற்றிச்
செல்ல
வங்கவ ரருளி னாலே வறுமைவந் தடைந்த பின்னுந்
தங்கணா யகர்க்குத் தாமுன் செய்பணி தவாமை
யுய்த்தார். 7 |
(இ-ள்.)
கங்கைநீர் ... எம்பிராற்கு - கங்கையின் நீர்
ஒலித்தற்கிடமாகிய திருமுடியும் நுதற்கண்ணுமுடைய எமது
சிவபெருமானுக்கு; பொங்கு ... செல்ல - மேன்மேற் செறிந்து பரந்து
கிளம்பும் குங்குலியத் தூபத்தைச் சிறப்புப் பொருந்தி விளங்கும்படி
தவிராது பேணிச் செலுத்திவந்தாராக; அங்கு - அந்நாளில்; அவர் ...
பின்னும் - அவருடைய திருவருளினாலே வறுமை வந்தடையவே
அதன்பின்னரும்; தங்கள் ... உய்த்தார் - தமது பெருமானுக்குத் தாம்
அவ்வறுமை வருமுன்பு செய்து வந்த அத்திருப்பணியைத்
தவிர்தலில்லாது முன்போலவே செய்து வருவாராயினர்.
(வி-ரை.)
கலித்தல் - ஒலித்தல். பெருவெள்ள மாய்ப்
பாய்ந்திரைத்து வந்த கங்கை இறைவனது அவிர்சடைமுன்
கண்டளவில் மிகைதவிர்ந்து சிறிதாயடங்கிற்றாகலின் பேரிரைச்சல்
செய்யும் இயல்பினையுடையதாம் என்பது. விரிந்து ஒடுகின்ற நீரைச்
சிறைசெய்தபோது பேரொலி செய்யும் என்க.
நீர்கலிக்கும்
சென்னி - கண்ணுதல் - நுதற்கண்
கோபத்தையும், நீர்கலித்தல் பிரசாதத்தையும் குறிப்பன. இங்குக்
காலனை யுதைத் துருட்டிய நிக்கிரகமும், மார்க்கண்டேயரைக் காத்த
அனுக்கிரகமும் செய்த ஒருவர் என்பது குறிப்பாம். குங்குலியப்
பொங்குதூபம் என்க. பொலிவுற -
தூபத்துக்குப் பொலிவாவது
மிக்க நன்மணம் பொருந்திச் செறிந்திருத்தல். "சாலவே நிறைந்து
விம்ம" என முன்னர்க் கூறியது மிது.
போற்றி
- சோர்வுபடாமற் பேணி. செல்ல
- செலுத்த.
இவ்வாறு நடத்த.
அங்கு - அந்நாளில். அங்கு இடச்சுட்டு காலங்
குறித்தது.
அருளினாலே
வறுமை வந்து அடைந்த பின்னும் -
இதுபற்றி 445-ம் திருப்பாட்டினும் பிறாண்டு முரைத்தவை பார்க்க.
அடியார்களுக்கு வறுமையாகிய துன்பம் வரச் செய்தலும்
அருளாமோ? எனின், இஃது உண்மைநிலை யறியாதார்
வினாவேயாமென்க. என்னை? செல்வ வறுமைகளும்
இன்பத்துன்பங்களும் ஒன்றுபோலவே அவ்வவர் வினைக்குத்
தக்கபடி இறைவன்தர வருவன. "விரைந்தாளுநல்குரவே", "நோவுளார்
வாயுளான்" என்ற தேவாரத் திருவாக்குக்களின்படி வறுமை முதலிய
துன்பங்கள் அடிமையை அளக்கும் கருவிகளாகவும் இறைவன்
தருவன. "ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்" என்றபடி
இன்பத்துன்பங்களிரண்டையும் ஒன்று போலவே காணுவதாகிய
இருவினையொப்பு என்ற பக்குவநிலை வரும்படி செய்து,
அடியார்களை ஆட்கொள்ளுதல் அருளேயாதல் காண்க.
பின்னும்
- உம்மை உணர்வு சிறப்பொடு எச்சமுமாம்.
வறுமையினும் திருப்பணிதவாது உய்த்தலின் அருமை குறித்தது.
பின்னும் தவாமை உய்த்தார் என்க. "வளஞ்சுருங்கவும், முன்னை
மாறில் திருப்ப ணிக்கண் முதிர்ந்த கொள்கையராயினார்" (446)
என்றதும் காண்க. தவாமை - குறைவில்லாத
தன்மை. உய்த்தல் -
கொண்டு செலுத்துதல்.
முன்
செய்பணி - வறுமை வருவதற்குமுன் சாலவே நிறைந்து
விம்மக் கமழ் தூபமிட்டுச் செய்தபடி என்பார் முன்செய்
என்றார்.
செய்தபடி என்க. 7
|