839.
|
யாதொன்று
மில்லை யாகி யிருபக லுணவு மாறிப்
பேதுறு
மைந்த ரோடு பெருகுசுற் றத்தை நோக்கிக்
காதல்செய்
மனைவி யார்தங் கணவனார் கலய னார்கைக்
கோதின்மங்
கலநூற் றாலி கொடுத்து "நெற் கொள்ளு"
மென்றார்.
9 |
(இ-ள்.)வெளிப்படை.
உணவுக்குரிய சாதனம் யாதொன்றும்
கிடையாதாகி, இரண்டு பகல் உணவு இல்லாமல், வருந்துகின்ற
மைந்தர்களோடும் பெருகிய சுற்றத்தாரையும் பார்த்துக்
காதலையுடைய மனைவியார் தமது கணவராகிய கலயனாரது கையில்
குற்றமில்லாத மங்கலநூற் றாலியைக் கொடுத்து "இதற்கு நெல்
வாங்கி வாரும்" என்று சொன்னார்.
(வி-ரை.) யாதொன்றும் - உணவுப் பொருள்களேனும்,
அவற்றைத் தேடுதற்குரிய செல்வம் முதலிய பண்டமாற்றுப்
பொருள்களேனும் எவையும்.
இருபகல் - பகல் இங்கு நாளைக் குறித்தது.
உணவுமாறி
- உணவில்லாமல். பேதுறுதல் - வருந்துதல்.
மைந்தரோடும்
- சுற்றத்தை - இது மனைவியாரது
மனநிலை குறித்த இடமாதலானும், முதலிற் பசிதீர்க்கத் தக்கவர்
இளஞ்சிறாரேயாதலானும், தாயினது அன்பின் பெருக்கு
ஒப்பற்றதாதலானும் இங்கு மைந்தரை முதலில் வைத்தோதினார்.
இது பற்றியே காதல்செய் மனைவியார் என்றதுமாம்.
கோதில்
மங்கலநூல் தாலி - கோது - குற்றம். இங்கு
இச்செயல் குற்றமற்ற இல்வாழ்க்கை யொழுக்கங் குறித்தலின் கோதில்
எனத் தாலியின்மே லேற்றிக் கூறினார். மங்கலநூல் - மங்கலத்துடன் வருவதானும், சுமங்கலியத்துவமாகிய
தன்மை காட்டும்
அடையாளமாதலானும் இவ்வாறு கூறியபடியாம். மணமகளின்
கழுத்தில் மணமகன் மங்கல நூலணிவதுவே மணச்சடங்குகளில்
இன்றியமையாப்பகுதி. நூலுடன் தாலியும் பிறவும் கோத்தணிவது
பிற்கால வழக்குப்போலும். நூலையேவிட்டுப் பொற்சரடு அணியும்
இந்நாளின் புது வழக்கு நூல் வழக்குக்கு மாறுபட்டதென்ப. "மங்கல
நூல் சாத்தி" என்று திருவிளையாடற் புராணத்தில்
மீனாட்சியம்மையார் திருமணப் படலத்தினும், "மங்கல நாணை
மணிக்களமார்த்து" என்று கந்த புராணத்தில்
தெய்வயானையம்மையார் திருமணப்படல (247)த்திலும் கூறுவது
காண்க. மங்கல நூல் மட்டுமே சுமங்கலிகட்கு இன்றியமையாத
தென்பதும், பெருங்கேடு வருங்கால் மங்கல நூலிற்கோத்த
பொற்றாலியைபும் வேறுபிரித்து எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலா
மென்பதும் அறநூல் விதியாமாதலின் இங்கு மனைவியார் மங்கல
நூலை மட்டும் அணிந்துகொண்டு தாலியை நூலினின்றும் பிரித்து
எடுத்து நெற்கொள்ளக் கொடுத்தனர். கோதில் மங்கல
நூல் என்ற
இதனால் இச்செயலால் மங்கலத்துக் கிழுக்கின்றென்பதும் குறிப்பு.
சுமங்கலித்துவத்தை நூலே குறிப்பதாம் என்பது "அம்பொன் மணி
நூல்தாங்கா தனைத்துயிர்க்கு மருள்தாங்கி" (திருநா. புரா - 34)
என்றதனாலும் "சசிதேவி மங்கல்ய தந்து ரட்சாபரண க்ருபாகர"
என்ற கந்தரலங்காரத்தாலும் அறிக. 9
|