841. (இ-ள்.)
வெளிப்படை. "கங்கையைச் சிவந்த சடையின்
மேல்வைத்த அங்கணருடைய பூசைக் கேற்றதான நறுமணமுள்ள
குங்குலியம் இதுவானால், நான் பெரும்பேறு இன்று
பெற்றவனாயினேன்; இதன் மேலும் நல்லபேறு வேறுண்டோ?;
பெறுதற்கரிய இப்பேற்றினைப் பெற்று வைத்தும், இனி வேறு
கொள்ளத்தக்கது என்ன உளது? " என்று எழுகின்ற விருப்பத்தில்
மிகுந்தவராகி,
841. (வி-ரை.)
செங்சடைமேல் ஆறுவைத்த எனமாற்றுக.
வைத்தஅங்கணர் அங்கணராதற்கு அடையாளங்காட்டியபடி.
சடை மேல் ஆறுவைத்ததனால் தமது அங்கண்மையாகிய
அருட்டிறத்தைக் காட்டியவர் என்பது குறிப்பு.
அங்கணர்
பூசைக்கேற்ற - எனவும், வேறு
இனிக்கொள்வதென்? எனவும் கூறியவதனால், பிறவெல்லாவற்றினும்
அவர் பூசையேவிரும்பிச் செய்யத்தக்கது என்பதும், அதுவே
உறுதிதரும் அருளைப்பெறச் செய்வதாம் என்பதும் நாயனார்
திருவுள்ளத்திற் கருதினார் என்றபடியாம்.
நல்ல
பேறு - நன்மையெல்லாம் தரத்தக்க பேறு. இதனால்
தாம் கொள்ள எண்ணிவந்த நெல் முதலிய எவற்றைக் கொண்டாலும்
அவை நல்ல பேறாகா என்று நாயனார் எண்ணினார் என்பது
குறிப்பு.
வேறு
இனிக்கொள்வதென்? வேறு - என்றது
பூசைக்குரியவற்றின் புறம்பானவை. தமக்கும் மனைவியார் மக்கள்
சுற்றத்தார் முதலியோர்க்கும் பசித்துன்பம் போக்க நெற்கொள்ளும்
முயற்சியை வேறு - என்று ஒதுக்கி அவையெல்லாவற்றினும்
அங்கணர்பூசையினையே சிறந்ததெனக் கொண்டது
மனைவிமக்களுடன் கூடிய இல்வாழ்க்கையினுள்ளிருந்தும்
சிவபெருமானிடத்து இவர்க்கிருந்த அயரா அன்பின் றிறங்காட்டியது.
"விரும்புநல் விளக்குத் தூபம் விதியினா
லிடவல் லார்க்குக்,
கரும்பினிற் கட்டி போல்வார் கடவுர்வீ ரட்டனாரே" என்ற அப்பர்
சுவாமிகளது மெய்த்திருவாக்கின்படி மிடியும்பசியும்கவலையும்
முதலியதுன்பங்களை யெல்லாம் களைந்து பூசையின் இன்பமே
கரும்பின் கட்டிபோல ஊறுகின்றதனை இங்குக் கண்டுகொள்க.
இதன் பின்விளைவுகளும் இவ்வாறே இனியனவாதலும் உன்னுக
இன்று
நான் நல்ல பேறு பெற்றேன் - என்க. பெற்றேன் -
பெறுவேன் என எதிர்காலத்துக் கூறற்பாலது பெற்றேன் எனத்
தெளிவுபற்றி இறந்த காலத்தில் வந்தது. நல்லபேறு
என்றதனையே
வற்புறுத்திப் பின்னரும் பெறாப்பேறு என்றார்.
இதன்
மேல் மற்றுப்பேறு உண்டோ? இல்லை என்றதாம்.
ஓகாரம் எதிர்மறை. பேறு என்ற சொல்வருவிக்க.
பெறாப்பேறு
- எவராலும் பெறுதற்கரிய பேறு. பெறா
என்னும் ஈறு குறைந்த பெயரெச்சத்தின் எதிர்மறை இன்மை
குறிக்காது பெறுதற்கு அருமை குறித்து நின்றது. "பெறுதற் கரிய
பிறவியைப் பெற்றும், பெறுதற் கரிய பிரானடி பேணார், பெறுதற்
கரிய பிராணிக ளெல்லாம், பெறுதற் கரியதோர் பேறிழந்தாரே"
என்ற திருமூலர் திருமந்திரக்கருத்தை இங்கு வைத்துக் காண்க.
குங்குலிய மூட்டுதல் மிகச்சிறந்த பேறு என்று காண்பதற்குத்
திருவையாற்றில் தெற்குக்கோபுரவாயிலில் ஆட்கொண்டார்
சந்நிதியில் இன்றும் குங்குலியக்குழியில் நிரந்தரமாய் அது
எரிக்கப்படுதல் காண்க.
வைத்து
- உம்மை தொக்கது. வேறு - தாம் கருதிவந்த
நெல் முதலாகிய உணவுப்பண்டம். இவற்றை வேறு என்றொதுக்கியது
அவை உடம்போடு ஒழியும் பயன்றருதவல்லது இதுபோல
உயிர்க்குறுதி தாராமை கருதி.
உரைத்து
- பிறரொருவரையும் பாராது தமக்குத்தாமே
சொல்லிக்கொண்டு.
எழும்
விருப்பின் மிக்கார் - உள்ளிருந்து மேன்மேல்
எழுகின்ற விருப்பத்தினை மிகுதியும் உடையாராகி.
ஈதே
- என்பதும் பாடம். 11