842.

"பொன்றரத் தாரு" மென்று புகன்றிட வணிகன் றானு
"மென்றர விசைந்த" தென்னத் தாலியைக் கலய
                                   ரீந்தார்;
அன்றவ னதனை வாங்கி யப்பொதி கொடுப்பக்
                                  கொண்டு
நின்றிலர் விரைந்து சென்றார் நிறைந்தெழு களிப்பி
                               னோடும்.
  12

     842. (இ-ள்.) வெளிப்படை. "நான் உமக்குப் பொன்னைத்தர
நீர் இக்குங்குலியத்தினைத்தாரும்" என்று கலயர் சொல்ல, வணிகனும்
"தேவரீர் எதனைக் கொடுக்க இசைந்தீர்?" என்றான்;' கலயர்
தாலியை ஈந்தனர்; அப்போதே அவன் அதனை வாங்கிக்கொண்டு
அந்தப் பொதியைக் கொடுத்தான். அதனைப் பெற்றுக்கொண்ட
கலயர் அங்குச் சிறிதும் நில்லாமல் உள்ள நிறைந்த
பெருமகிழ்ச்சியுடன் விரைந்து சென்றனர். 12

     842. (வி-ரை.) பொன் தரத்தாரும் - இது வணிகனை
நோக்கி நாயனார் கூறியது விலையாகப் பொன்னை நான் தர
அதனைப் பெற்றுக்கொண்டு இக்குங்குலியப் பொதியினை நீர்
தாரும்.

     பொன் என்றது இங்குப் பொன்னாலாகிய அணியைக் குறித்து
வந்தது. காரணமாகிய மெய்ப்பொருளைக் காண்பார்க்குக்
காரியமாகிய வேற்று விகாரங்காட்சிப் படாதாதலின் தாலி பொன்
எனப்பட்டது.

     என் தர இசைந்தது - பொன் என்றதனால் அப்பொன்னோ
- பொன்னணியோயாது என்றபடி. "பொன்னணிவ" ரென்ற வழக்கும்,
"நிறை பொன்னணியக் கருதுகின்றார் பலர்" (195) என்ற
திருக்கோவையாரும் காண்க.

     தாலியை ஈந்தார் - அவ்வாறு வினவிய வணிகனுக்கு அது
இன்னதெனவாயினாற்கூறாது - சொல்லிக் காலந்தாழ்க்காது -
செயலிலே தாலியைஈந்து அவ்வழியால் விடைதந்தனர் என்க.
பூசைக்கான பொருள் தேடுதலின் தீவிரம் குறித்தது.

     அதனை வாங்கி அப்பொதி கொடுப்ப - அதனை
வாங்கிக்கொண்டு அதற்கீடாக அந்தப் பொதியினைக்கொடுக்க.
விலைபற்றி நாயனார் சிந்தித்திலரேனும், கொண்ட பொருளுக்கு
நேரொக்கக் கண்டவன்போல அவன் அப்பொதியினைக்
கொடுத்தான் என்பது குறிப்பு.

     நின்றிலர் விரைந்து சென்றார் - பூசைச்சாதனம்
அருமையிற் பெற்ற ஆர்வமும் தூபப்பணியில் வைத்த தீவிரதர
அன்பும் குறித்தது.

     தமக்குரியதேயாயினும் உரித்தன்றேயாயினும், நன்றேயாயினும்
தீதேயாயினும், ஏதேனும் ஒரு தொழில் செய்து பிழைக்கவறியாது,
உடைமை விற்றும் அடிமை விற்றும் உணவின்றிப் பட்டினி கிடந்தும்
தாலியையும் விற்க முயன்றும் உணவு தேடுவது சோம்பர் செயலாம்
என்று அறிவார் போன்ற சில நவீனர் இகழ்தலும் கூடும். மிடியும்
பசியும் வருத்தியபோதும் தமக்குரிய தொழிலையன்றி வேறு தொழில்
செய்து உயிர் வாழ எண்ணமாட்டார் பெரியோர் என்பது
இந்நாயனாரது வாழ்க்கையாலறியப்படும் உண்மை நீதிகளுள்
ஒன்றாம். ஆனால் எமது பெருமக்கள் தொழில் செய்தும்,
கூலிவேலை செய்தும் சீவித்தலை இகழ்ந்தாரல்லர். "அல்ல னல்குர
வாயிடக் கூலிக்கு, நெல்லறுத்தும்" என்ற அரிவாட்டாய நாயனார்
சரிதமும், "வளமுடையார் பாலெண்ணெய் கொடுபோய்மா றிக்கூறிக்,
கொளமுயலுஞ் செய்கையுமற் றவர்கொடா மையின் மாறத், தளருமன
முடையவர்தாஞ் சக்கரவெந் திரம்புரியுங், களனில்வரும் பணிசெய்து
பெறுங்கூலி காதலித்தார்", "செக்குநிறை யெள்ளாட்டிப் பதமறிந்து
திலதயிலம் பக்கமெழ மிகவுழந்தும் பாண்டில்வரு மெருதுய்த்துந்,
தக்கதொழிற் பெருங் கூலி தாங்கொண்டு" என்ற கலியநாயனார்
சரிதமும், பிறவும் இவ்வுண்மையை விளக்குவன. ஆனால்
இப்பெரியார்கள் பலரும் தத்தம் மரபுக்கும் தகுதிக்கும் உரிய
தொழில்களையும் அவ்வகையிற் பெறும் கூலி வேலைகளையுமே
செய்தமையும் குறிக்க. "புலி பசித்தாலும் புல் தின்னாது" என்று
கொடுவிலங்கின் மேல் வைத்துக் காட்டும் நியதியையும் மறந்து,
தொழில் யாவும் ஒன்றே - யாரும் எத்தொழிலும் செய்யலாகும் -
எது செய்தேனும் பிழைத்தல் வேண்டும் என்று கூறும்
நவீனக்கொள்கையினை அறிவுடையோர் கொள்ளார். ழுஈன்றாள்
பசிகாண்பா னாயினுஞ் செய்யற்க, சான்றோர் பழிக்கும் வினை"
என்ற நீதிக்கு இச்சரிதம் இலக்கியமாம். இதுபற்றியே "செயல் எலாம்
தொழில்க ளாறே" என்று தொடக்கத்தில் வற்புறுத்திக் காட்டினார்.
இவற்றால் வேதியர்க்கு வேறு தொழில்கள் உரித்தாகாமையும்
காணப்படும். "இறந்த மூப்பினராகிய இருமுது குரவரும் கற்புடை
மனைவியும் குழவியும் பசியால் வருந்து மெல்லைக்கண் தீயன
பலவும் செய்தாயினும் புறந்தருக" என்னும் அறநூற் பொதுவிதியினை
அறிவுடைச் சான்றோர் மேற்கொள்ளார் ரென்பது துணிபு.

     நின்றிலர் மகிழ்ந்து - என்பதும் பாடம். 12