845.



மற்றவர் மனைவி யாரு மக்களும் பசியால் வாடி
யற்றைநா ளிரவு தன்னி லயர்வுறத் துயிலும் போதில்
நற்றவக் கொடிய னார்க்குக் கனவிடை நாத னல்கத்
தெற்றென வுணர்ந்து செல்வங் கண்டபின் சிந்தை
                                  செய்வார்,
15

     845. (இ-ள்.) வெளிப்படை. இவ்வாறிருந்த அவருடைய
மனைவியாரும் மக்களும் பசியினால் வாட்டமுற்று அன்று இரவில்
அயர்ந்து தூங்கும்போது நல்ல தவத்தின் கொடிபோல்வாராகிய
மனைவியாருக்குக் கனவில் இறைவன் இவ்விளைவுகளை உணர்த்தி
யருளினாராக, அவர் உணர்ந்து எழுந்து கனவிற்கண்டபடி உள்ள
செல்வங்களையெல்லாம் கண்டபின் மேல்வருமாறு
எண்ணுவாராயினர், 15

     845. (வி-ரை.) பசியால் வாடி - அயர்வுறத்
துயிலும்போதில் -
முன்னர் இரு பகல் உணவின்றிப்
பசித்திருந்தனர் (839). மூன்றா நாளாகிய அன்று நெற்கொள்ளும்மடி
தாலியைக்கொடுத்தும் நெல் வாராமையால் இன்றும் பசித்தனர்;
ஆதலின் வாடி மிகக் களைத்து அயர்ந்து துயின்றனர். எத்தனை
வாடினும் பகலிற்றுயில்கொள்ளுதல் ஆகாது என நூல்கள்
விதித்தலின், அயர்வும் பசியும் மிக்கிருந்தும் இவர்கள்
பகலிற்றுயிலது இரவுதன்னிற் றுயின்றனர் என்றார்.

     நல்தவக் கொடி அனார் - நல்ல தவத்தின் முளைத்து
விளைந்த கொடிபோன்றவர். சிவபூசை அடியார்பூசையாகிய
தவமேசெய்யும் நாயனாராகிய கொழுகொம்பிற்படர்ந்த கொடி
என்றலுமாம்.

     நாதன் கொடி அனார்க்குக் கனவிடை நல்க என்க.
நல்க
- இவ்விளைவுகளை உணரும் உணர்ச்சியை நல்க என நல்க
என்றதற்குச் செயப்படுபொருள் வருவிக்க.

     நாதன் இவ்விளைவுகளைக் கலயனார்க்கு அறிவிக்காமல்
மனைவியார்க்கு அறிவித்தும், பின்னர் நாயனார் இவற்றைக்கண்டு
மனைவியாரைக் கேட்டு அவர் சொல்ல அறிந்து கொள்ளுமாறு
வைத்ததும் என்னை எனின்?, இவையாவும் அம்மையார் தந்த
கோதின் மங்கலநூற்றாலி கொடுத்துக் குங்குலியப்பொதி
கொண்டதன் விளைவாதலானும், முன்னர் அறிந்து எழுந்து நாயனார்
வருமுன்பே அமுதுசமைத்து அவரையும் அடியார்களையும் ஊட்ட
வேண்டுமாதலானும் மனைவியார்க்கு அறிவித்ததும், பின்னர்ப்
"பாலடிசில் உண்டு பருவரல் ஒழிக" என்று நாயனார்க்கு
அறிவித்ததும் ஆம் என்க. மனைவியாரது கற்பின் பெருமையும்
அடியார்களைப் பன்னாள் அமுதூட்டிய அன்பின் பெருமையும்
காட்டியபடியுமாம்.

     தெற்றென உணர்ந்து கண்டபின் - கனவில்
தெளிவாகக்கண்டது போன்று, கனவுநிலை நீங்கி நனவு நிலை
பெற்றுக் கண்ட பின்பு என்றதாம். உணர்ந்துகண்டபின் -
துயிலுணர்ந்து கண்டபின் என்றலுமாம். 15