846


.
கொம்பனா ரில்ல மெங்குங் குறைவிலா நிறைவிற்
                                 காணும்
அம்பொனின் குவையு நெல்லு மரிசியு முதலாயுள்ள
வெம்பிரா னருளா மென்றே யிருகரங் குவித்துப்
                                போற்றித்
தம்பெருங் கணவ னார்க்குத் திருவமு தமைக்கச்
                                சார்ந்தார்.  
16

     846. (இ-ள்.) வெளிப்படை. இளந்தளிர்க் கொம்புபோன்ற
அவர், தமது திருமனை முழுமையும் குறைவில்லாத நிறைவினாற்
காணப்பட்ட அழகிய பொற்குவையும், நெல்லும், அரிசியும்
முதலாயுள்ள எல்லாம் எமது பெருமானது திருவருளேயாம் என்று
சிந்தித்து, இருகைகளையும் சிரசின்மேற் குவித்துத், துதித்துத் தமது,
நாயகராகிய ஒப்பற்ற பெரிய நாயனாருக்குத் திருவமுது சமைக்கச்
(பாகசாலையைச்) சார்ந்தனர். 16

     846. (வி-ரை.) கொடியனார்க்கு - கனவிடை - நல்க -
உணர்ந்து - கண்டபின் (அக்) கொம்பனார் - சிந்தை செய்வார் -
காணும் - பொன்குவை - முதலாயுள்ள(வற்றை) "அருளாம்" என்றே
- போற்றி - அமுது அமைக்கச்சார்ந்தார் என்று இவ்விரண்டு
பாட்டுக்களையும் தொடர்ந்து முடித்துக்கொள்க.

     சிந்தை செய்வா(ராய்) அருளாம் என்றே போற்றி - என்க.

     குறைவிலா நிறைவு - "குறைவிலா நிறைவே" என்ற
திருவாசகத்தை இங்கு நினைவு கூர்க. ஒன்றுக்கொன்று என்றும்
குறைவுபடாத நிறைவந்தன்மை. குறைவிலா நிறைவுடய இறைவர்
தமது தன்மைக் கேற்பக் கொடுத்தார் என்க. காணும் - காணப்படும்.
படுவிகுதி தொக்க செயப்பாட்டு வினைப்பெயரெச்சம்.

     உள்ள - உள்ளவை அகரவீற்றுப் பலவின்பாற்பெயர்.
இரண்டனுருபுதொக்கது.

     அருளாம் என்றே கரங்குவித்துப் போற்றி - அந்தப்
பொன் - நெல் - அரிசி முதலியவற்றை அவ்வப்பொருள்களாகக்
காணாது எம்பெருமானுடைய அருளையே கண்டார். ஆதலின்
கரங்குவித்துத் தொழுது துதித்தார். இவை அருளால் வந்தன என்று
அருளால் உணர்ந்து, அருள் என்று போற்றினார். திருவருளாற்
போந்த பொருள்களைத் திருவருட் சொரூபமாகவே கண்டு
வணங்குதல் பெரியோர் இயல்பு. திருவரத்துறையில் முத்துச்சிவிகை
இறைவனருளாற் போந்ததென்று கனவில் உணர்த்த உணர்ந்த
திருஞானசம்பந்தநாயனார் அதனை நனவிற் கண்டதும், "அரத்துறை
அடிகள்தம் மருளே" என்று திருப்பதிகம்பாடி வணங்கியதும் இங்கு
நினைவுகூர்க. நல்லாள் தன்பால் புகலிவேந்தர் கண்ணுதல் கருணை
வெள்ள
மாயிர முகத்தாற் கண்டார்" என்ற ஆளுடைய பிள்ளையார்
புராணம் (1109) காண்க.

     தம்பெரும் கணவனார் - உலகர்களுள் உடம்போடொழியும்
ஏனைக்கணவர்கள் போலல்லாது, திருவருள் விளைவிலே
கூட்டுவித்து உயிர்க்குறுதி தரும் கணவர் நாயனார், என்று குறிக்கப்
பெருங்கணவனார் என்றும், கொழுநற் றொழுதெழும் பெருங்கற்பு
வாய்த்தவரென்று குறிக்கத் தம் என்றும் கூறினார். 16