847.
|
காலனைக்
காய்ந்த செய்ய காலனார் கலய னாராம்
ஆலுமன் புடைய சிந்தை யடியவ ரறியு மாற்றாற்
"சாலநீ பசித்தா யுன்றன் றடநெடு மனைவி னண்ணிப்
பாலினின் னடிசி லுண்டு பருவர லொழிக"
வென்றார்.
17 |
|
(இ-ள்.)
வெளிப்படை. காலனை உதைத்துருட்டிய சிவந்த
காலினையுடைய சிவபெருமான் கலயனாராகிய, திருஅடியில்
நிறைந்த அன்புபூண்ட சிந்தையுடையவவர் அறியும்படி "நீ
மிகப்பசித்தாய்; உனது விசாலமாகிய பெரிய வீட்டிற் சேர்ந்து
பாலுடன் கலந்த இனிய உணவை உண்டு பசித்துன்ப நீங்குவாயாக"
என்றருளிச்செய்தார்.
(வி-ரை.)
காலனைக் காய்ந்த செய்ய காலனார் - 831
பார்க்க. காலன் - காலனார் சொற்பின்
வருநிலை. காலன் -
இயமன் - கூற்றுவன். சிவபெருமானது ஆணையின்படி காலத்தை
யளந்து அதன் கிரமப்படி உயிர்களைக் கொண்டு சேர்ப்பவன்.
காலனார் - காலினை உடையவர். செய்ய
காலனார்.
உதைத்தமையாற் சிவந்தது என்பதும் குறிப்பு. சிவப்பு இராசதத்தின்
நிறமாதலின், "காலனாருயிர் மாளக்கறுத்தன" என்றபடி அவரது
சினத்தைத் திருவடியின்மேல் ஏற்றிக் கூறினார் என்றலுமாம்.
"நின்போ லமரர்கள் நீண்முடிச் சாய்த்து நினைந்துகுத்த,
பைம்போதுழக்கிப் பவளந் தழைப்பன" என்ற
திருவிருத்தத்தின்
கருத்தும்காண்க.
அடி
ஆலும் அன்புடைய சிந்தையவர் - எனக் கொண்டு
கூட்டுக. திருவடியினில் நிறைந்த அன்பு கொண்ட சிந்தையாதலின்
அதனுள் தமது பசியும் மனைவி மக்கள் முதலியோர் பசி முதலிய
எவையும் முளையா; அதனால் அவர் அறியும்படி இறைவன்
அறிவித்தார் என்பார் அறியும் ஆற்றால் என்றார்.
திருவடித்
தியானத்தில் உறைத்து நிற்பார்க்கு உலகமும் அதனுள்
அனுபவங்களும் தோன்றா. இதனை "மண்டு காத லருச்சனையில்
வைத்தார் மற்றொன் றறிந்திலரால்" என்ற சண்டீசநாயனார்
புராணத்திலும் பிறாண்டும் காண்க. இதனை உணர்த்தவே "எல்லாம்
அயர்த்தெழு மன்பு பொங்கச், சடையவர் மலர்த்தாள் போற்றி
யிருந்தனர்" (843) என்றது காண்க.
சாலநீபசித்தாய்
- நாயனார் தமது பசியையும் தாம் அறியாது
சிவத்தியான நிட்டையில் வீற்றிருந்தாராதலின், அவரது பசியை
அவர்க்கு அறிவுறுத்தவே "சாலநீ பசித்தாய்" என்றிறைவன்
அருளியபடி. "உன் பசியினைபும் உன் மனைவி மக்கள் முதலியோர்
பசியினையும் நீ அறியாய்; நாம் அறிவோம். நாம் அறிவிக்க நீ
அறிவாய்" என்றது குறிப்பு. மனவசீகர் நிபுணனால் வசீகரிக்கப்பட்ட
ஒருவன் அந்நிபுணன் சொல்லியவாறெல்லாம் அனுபவங் கூடியும்,
அவன் சொல்லாதவழி அனுபவங் கைகூடாமலும் உள்ள நிலையை
இங்கு வைத்துக் காண்க. "அறிவிக்க வன்றி யறியா உளங்கள்"
என்பது ஞானநூல். ஏனைய உயிர்கள் ஆணவ மயக்கிலாழ்ந்து
கிடத்தலின் இறைவனை அறியா. இங்கு நாயனார் சிவனடி பரவிய
சிந்தையில் ஆழ்ந்து கிடத்தலின் உலகை அறியாதிருந்தனர்;
ஆதலின் அடியவர் அறியும் ஆற்றால் என்றார்.
பாலின்
இன் அடிசில் - பாலுடன் கலந்த இனிய அமுது.
இன் உவம உருபாகக் கொண்டு, தாயினது பாலினும் அதிக சுவையும்
குணமும் கொண்ட அடிசில் என்றுரைத்தலுமாம். "தாய்க்குப் பின்
தாரம்", "மனைவி கணவனை ஊட்டுவத்துக் காண்பதில் தாய் போல
இருத்தல் வேண்டும் என்பன உலகநூல் நீதிகளாதலின் இங்கு
மனைவியார் இனி ஊட்டப்போகும் அடிசில் தாயின் பாலினும்
இனிமையுடையதாம் என்பது குறிப்பு. மற்றொரு வகையாலும்
இவ்வடிசில் இனிதேயாம்; என்னை?; எல்லாவுயிர்களுக்கும்
"பானினைந்தூட்டும் தாயினுஞ் சாலப் பரிந்து" அளிக்கும்
தாய்தந்தையாகிய நம்பரருளிய அடிசிலாதலின் இது "அன்னைமுலைத்
தீம்பாலி னரிய சுவைத்"தேயாம் என்க. நம்பரருளினால் (844)
எம்பிரான் அருளாம் (846), அருள்தர (848) என்று அருட்சத்தியைப்
போற்றியது காண்க. இனி, பால் பான்மை
எனக் கொண்டு, உனது
அன்பின் தன்மைக் கேற்ற பான்மையினால் வந்த இனிய அடிசில்
என்றுரைத்தலு மொன்று.
பருவரல்
ஒழிக - இப்போது உன் பசி முதலியதுன்பங்களை
நீ அறியாய்; நாம் அறிவிக்க அவற்றை அறிவாயாதலின் அத்துன்பம்
தீர்க. ஒழிக என்றதுணிபினால் இப்பிறவியில் மட்டுமன்றி இனி
எஞ்ஞான்றும் அத்துன்பம் உனக்கில்லாமல் தீர்வதாகிய முத்தி
நிலையும் பெறுக என்பதும் உடன்குறிக்கப்பட்டது.
என்றார்
- அசரீரி எனப்படும் தமது எங்கும் நிறைந்த
ஒலியினால் அவர் செவிப் புலப்படுமாறு கூறியருளினார். நேரே
காட்சிதந்து சொல்லியருளினார் என்பாருமுண்டு. அஃதுரையன்
றென்க. 17
|