848.



கலயனா ரதனைக் கேளாக், கைதொழு திறைஞ்சிக்,
                                  கங்கை
யலைபுனற் சென்னி யார்த மருண்மறுத் திருக்க
                                  வஞ்சித்,
தலைமிசைப் பணிமேற் கொண்டு சங்கரன் கோயி
                                  னின்று

மலைநிகர் மாடவீதி மருங்குதம் மனையைச்
                               சார்ந்தார்.
 18

     (இ-ள்.) வெளிப்படை. கலயனார், அவ்வாறு இறைவர் கூறிய
அருளிப்பாட்டினைக் கேட்டுக் கைகளாற்றொழுது வணங்கிக்,
கங்கையாற்றினைச் சூடிய சிரத்தினை யுடைய பெருமானது
திருவருளினை மறுத்து மனையிற் போகாது கோயிலில் தங்கியிருக்க
அஞ்சியவராகி, அப்பணியைச் சிரமேற் கொண்டு, சங்கரனாரது
திருக்கோயிலி னின்றும் போந்து, மலைபோன்ற மாடங்கள் நிறைந்த
திருவீதியில் சேர்ந்து, அங்குத் தமது திருமனையினைச் சார்ந்தனர்.

     (வி-ரை.) அதனை - அவ்வாறு இறைவன் அறிவித்த
அதனை, கேளா - கேட்டு. செவிப்புலப்படக் கேட்டு.

     கைதொழுது இறைஞ்சி - திருவருள் வெளிப்பாட்டினைக்
கண்டபோது இறைஞ்சுதல் முறையாம்; அதுவே
அடியார்களினியல்பாம். மனைவியார் பொன்குவை நெல் அரிசி
முதலானவற்றைக் கண்டபோது அவை எம்பிரான் அருளாமென்றே
உணர்ந்து அவற்றை இருகரங்குவித்துப் போற்றினார் (846) என்றதும்
காண்க.

     கங்கை அலைபுனற் சென்னியார் - 841 முதலியவை
பார்க்க. அருள் மறுத்து இருக்க அஞ்சி - அதிகாலையாதலின்
தூபத்திருப்பணியை நிறைவேற்றாது செல்வதற்கு
மனமில்லையாதலானும், மனையில் மூன்று பகல் உணவில்லமையாலும்
நெற்கொள்ளக் கொணர்ந்த திருமங்கிலியத்தினையும் குங்குலியப்
பொதிகொண்டு சேமித்து விட்டமையாலும், பொன் - நெல் - அரிசி 
முதலிய வளங்களைத்தந்து அம்மையார்க்கு அறிவித்தபடி இறைவன்
இவர்க்கு அறிவியாமையாலும், மனையிற் சென்று பாலடிசில் உண்ண
ஒண்ணாதென அறிதலால் இங்குத்திருக்கோயிலில் இருத்தலையே
விரும்பினார் நாயனார்; ஆனால் அருளைமறுத்து அவ்வாறு
இருத்தற்கு அஞ்சினர் என்க. இருக்க - மனையிற் செல்லாது
திருவீரட்டானத்தில் இருக்க. பணி தலைமிசை மேற்கொண்டு -
என்க. மேற்கொள்ளுதல் - தாங்குதல். தலைமிசை
மேற்கொள்ளுதல்
- தலைமையாகப்பூண்டு அதன்படி நின்று
கடனாற்றுதல். பணி - பணிக்கப்பட்டதனை.

     சங்கரன் கோயில் - திருவீரட்டானம். சங்கரன் -
சுகத்தைச்செய்பவன் - சிவபெருமான். இங்கு நாயனாரது
துன்பமெல்லாம் போக்கி யின்பஞ்செய்கின்றாராதலின் இப்பெயராற்
கூறினார். இங்கு வீரஞ்செய்தமையாற் காக்கப்பட்ட
மார்க்கண்டருக்கும் உதைபட்ட காலனுக்கும் ஒருங்கே துன்பநீக்கமும்
இன்ப ஆக்கமுஞ் செய்ததனையும் சிந்திக்கும்படிச் சங்கரன்
என்றதும் காணத்தக்கது.

     மலைநிகர் மாடம் - மலைபோன்ற பெரியமாடங்கள்
என்றபடி. வீதிமருங்கு - வீதியில். இதனால் நாயனாரது திருமனை
மாடவீதியில் இருந்ததென் றறியப்படும். கீழை மாடவீதியினை
அடுத்த உள்வீதிப்பக்கம் அந்தத் திருமனை இருந்ததாகக் கர்ண
பரம்பரையாக ஓர் இடம் இன்றும் சுட்டி வழங்கப்படுகின்றது.

     "உன்தன் தடநெடு மனையில் நண்ணீ" என்று இறைவர்
அருளிய சிறப்புப் பெற்றதாதலின் ஆசிரியர் தாமும் மாடவீதி
மருங்கு தம்மனை
என்று சிறப்பித்துக் கூறினார்.

     சார்ந்தார் - நற்சார்பு என்ற சிவஞானநூற் கருத்தினை
நினைவூட்ட இச்சொல்லாற் கூறினார். 18