850.



மின்னிடை மடவார் கூற மிக்கசீர்க் கலய னார்தா
மன்னிய பெருஞ்செல் வத்து வளமலி சிறப்பை
                                 நோக்கி
"யென்னையு மாளுந் தன்மைக் கெந்தையெம் பெருமா
                                 னீசன்
றன்னரு ளிருந்த வண்ண" மென்றுகை தலைமேற்
                               கொண்டார்.
20

     (இ-ள்.) வெளிப்படை. மின்போன்ற இடையையுடைய
மடவாராகிய அம்மையார் இவ்வாறு சொல்லச் சிறப்புமிக்க கலயனார்
நிலைபெற்ற பெருஞ்செல்வங்களின் வளம்மிக்க சிறப்பை நோக்கி,
"என்னையும் ஆட்கொண்டருளுகின்ற தன்மைக்கு எந்தையும் எமது
பெருமானும் ஈசனுமாகிய சிவபெருமானது திருவருள் இருந்த
வண்ணம்தான் என்னே?" என்று கைகளைத் தலைமேற் கொண்டு
துதித்தார்.

     (வி-ரை.) மின்இடை - இடைசிறுத்துத் துவளுதல்
பெண்களின் சிறந்த உடலிலக்கணங்களுள் ஒன்று. மடவர் -
மடமையையுடையார். மடம் - "கொளுத்தக் கொண்டு கொண்டது
விடாமை" யாகிய நாற்குணத்துள் ஒன்றாய குணம்பற்றி மகளிர்க்குப்
பெயராயமைந்தது. கணவனார் வினவியபோது தாம் அறிந்ததனைச்
சொல்லும் கடமைபற்றி உரைத்தனர் என்ற குறிப்புப்பெற இங்கு
மடமை என்ற தன்மைபற்றிக் கூறினார். "கைவருகற் புடைநெறியாற்
கணவனுரை காவாமை, மெய்வழியன் றென விளம்பல் விடமாட்டார்"
என்ற காரைக்காலம்மையார் புராண (27)க் கருத்துங் காண்க.
இடை - என்றது உத்தமமாகிய உடலிலக்கணத்தையும், மடமை
என்றது உயர்ந்த குணவிலக்கணத்தையும் குறித்தன. மடம் -
மடமான் என்புழிப்போல இளமை என்றலுமாம்.

     கூற மிக்க சீர் - பாலின் இன் அடிசில் உண்டு பருவரல்
ஒழிக என்று இறைவன் அருளியபோது இவ்வளங்கள் அருளியதனை
அறியாராதலின், அதனை அம்மையார் கூற அறிந்து அதனான்
முன்னினும் மிகுந்த சிறப்பினையுற்ற என்க.

     மன்னிய......சிறப்பை - தாம் கண்டசெல்வங்களின்
நிலைபெற்ற தன்மையும் பெருமையும், வளப்பமும் நிறைந்த சிறப்பை.
மன்னுதல் - தமது முன்னைச்செல்வம்போல மறைந்து
வறுமைவந்தொழியாது நிலைபெறுதல். பெருமை - தந்தருளிய
இறைவரது பெருமைக்கேற்ற பெருமை. வளம் - பொருட்டன்மையின்
வளப்பம். சிறப்பு - திருவருட்பேற்றின் செம்மை. இச்சிறப்புக்கள்
இவைபோன்ற வேறெச் செல்வங்களுக்கும் இல்லாத தன்மை.
நோக்குதல் - கூர்ந்து பார்த்தல்.

     என்னையும்.........வண்ணம் - என்னையும் -
ஆட்கொள்ளத்தக்க தகுதியில்லாத என்னையும் என உம்மை இழிவு
சிறப்பு. "என்னையு மாண்டுகொண் டின்னருள் புரியும்"
(திருப்பள்ளியெழுச்சி 4) என்ற திருவாசகமும், "என்னையு மடிய
னாக்கி யிருவினை நீக்கி யாண்ட" என்ற கந்தபுராணமும் பிறவும்
காண்க.

     எந்தை எம்பெருமான் ஈசன் - "எந்தை ஈசன்
எம்பெருமான் ஏறமர் கடவுளென் றேத்தி" (திருநெல்வாயிலரத்துறை
1) என்ற ஆளுடையபிள்ளையார் தேவாரம் காண்க. இந்நாயனார்
ஆளுடையபிள்ளையாரிடத்து மிக்க அன்பு பூண்டிருந்து அவரது
திருப்பதிகங்களைப் பயின்றிருந்த பழக்கத்தால் அது கொண்டே
துதித்தனர் போலும். அக்காலத்திற் றிருப்பதிகங்கள் மிகப்
பயிலப்பட்டன என்பது "பண்ணின் கிளவி மணிவாயும் பதிகச்
செழுந்தேன் பொழியுமால்" என்ற முருகநாயனார் புராண(3)த்தாலும்,
"தெள்ளு மோசைத் திருப்பதி கங்கள்பைங் கிள்ளை பாடுவ
கேட்பன பூவைகள்" என்ற திருநகரச்சிறப்பி(8)னாலும், பிறவாற்றாலும்
அறியப்படும். தகுதியில்லாத தமக்கும் இப்பெரிய திருவருள்தந்தது
"நாய்சிவிகையேற்று வித்தது" போலும் என்ற நினைவு வருதலும்,
அது வந்த போது சிவிகை பெற்ற திருப்பாட்டு நினைவுகூர்தலும்
இயல்பாம். "சிந்தைசெய்பவர்க் கல்லாற் சென்றுகை கூடுவ தன்றால்"
என்றபடி இங்கு நாயனார் "எல்லாம் அயர்த்தெழும் அன்பு பொங்கச்
சடையவர் மலர்த்தாள் போற்றியிருந்தனர் ஆதலின் இத்திருவருள்
கைகூடப் பெற்றனர் என்பதும் கருதுக. எந்தை - தந்தை
தம்மக்களைக்காத்தல் கடனாம் என்பார் முதலில் எந்தை என்றார்.
தந்தை என்ற உரிமை பாராட்ட நான் தகுதியற்றேனாயினும் எமது
தலைவனாதலின் ஆட்கொண்டனர் என்று நினைந்து பின்னர்
எம்பிரான் என்றார். "துணைமாலை சூட்டநான் தூயே னல்லேன்"
என்று அப்பர் சுவாமிகள் அருளியபடி அவ்வாறும் அவர்க்கு
ஆட்பட்டும் தகுதியில்லாமையின் அவர் எல்லாவுயிர்க்கும்
இறைவனாய் "எல்லா வுயிர்க்கும் போகமாம் பூங்கழல்"களை
யுடையானாதலின் அம்முறையில் எம்மை ஆட்கொண்டனர் என்பார்
பின்னர் ஈசன் என்றார். "என்னப்ப னெம்பிரா னெல்லார்க்குந்
தானீசன்" (திருச்சாழல் 2) என்ற திருவாசகமும் நோக்குக. அருள்
இருந்த வண்ணம்
- முத்துச்சிவிகை பெற்றபோது "என்னையும்
பொருளாக வின்னருள் புரிந்தருளும், பொன்னடித்தலத் தாமரை"
(திருஞான - புரா - 226)யின் "அருள் வந்த வாறுமற் றிவ்வணமோ"
(மேற்படி 214) என்று ஆளுடைய பிள்ளையாரும்,
திருவாலவாயுடையார் திருமுன்பு நேர்ந்த போது அவர் தமக்குத்
திருமுகம் கொடுத்தனுப்பிய அருளிப்பாட்டை எண்ணி அடியேனைப்
பொருளாக அளித்ததிரு முகக்கருணை, முடிவதென் றறிந்திலே
னெனமொழிக டடுமாற" வீழ்ந்துவணங்கிக் கழறிற்றறிவார்நாயனாரும்
பாராட்டியதும், பிறவும் இங்கு நினைவு கூர்க. தன்மைத் தெந்தை
- என்பதும் பாடம். 20