851.
|
பதுமநற்
றிருவின் மிக்கார் பரிகலந் திருத்திக்
கொண்டு
கதுமெனக் கணவ னாரைக் கண்ணுதற் கன்பரோடும்
விதிமுறை தீப மேந்தி மேவுமின் னடிசி லூட்ட
வதுநுகர்ந் தின்ப மார்ந்தா ரருமறைக் கலய
னார்தாம். 21 |
(இ-ள்.)
வெளிப்படை. தாமரையில் வீற்றிருக்கும் நல்ல
திருவிலும் மிகுந்த அம்மையார் பரிகலம் திருத்தி யமைத்துக்கொண்டு
விரைவாகத் தமது கணவனாரைச் சிவபெருமானுக்கன்பர்களோடும்
விதிப்படி தீபம் முதலிய ஏந்திப் பூசைசெய்து இனிய அமுதினை
ஊட்ட, அரிய மறைவல்லவராகிய கலயனார் அதனை நுகர்ந்து
இன்பநிறைந்தனர்.
(வி-ரை.)
பதுமம் நல் திரு - செந்தாமரையில் உள்ள
இலக்குமி. உருவாலும் திருவாலும் ஒப்புமை பெறினும், நற்றிரு
என்றது அவரினும் அருளால் மிகுந்த அம்மையாரது மேம்பாடு
கருதுதற்கு எல்லைப்பொருளாய் எண்ணப்படும் பேறு பெற்றமை
பற்றி. மிக்கார் - அருளால் மிகுந்தவர்.
அந்தப் பதுமத்திரு
ஒவ்வோர்காலம் தமது கணவரை யிழக்கவும் அதனால்
தாலியிழக்கவும் பெற்று, அதன் பொருட்டுச் சிவபெருமானை
நோக்கித் தவங்கிடந்து மீளப்பெற்றுத் தாலிதாங்குவர். அவ்வாறன்றி
இவ்வம்மையார் தமது தாலியை இறைவனது தூபத்திருப்பணிக்
கேற்பிக்கப்பெற்று, அதன் விளைவாகிய மாளாச்செல்வங்களையும்
பெற்று, அடியார்களையும் ஆளுடைய அரசுகள் ஆளுடைய
பிள்ளையார் என்ற இருபெருமக்களையும் பூசித்து அமுதூட்டவும்
அரன்பணி புரியவும் பேறுபெற்றவர் என்ற சிறப்பெல்லாங் குறிக்கத்
திருவின் மிக்கார் என்றார். அன்றியும்
பதுமத்திரு வானவர்
தமது செல்வ விளைவுகளைச் சிவனருளேயாகக் காண்டலின்றி
வாழ்ந்து கழிவர். இவ்வம்மையார் போலக் கணவனாரை
அடியார்களுடன் விதிமுறை பூசித்துபசரித்தூட்டப்பெறாது தமது
நாயகரின் மார்பிற் றங்கி அவரால் உபசரிக்கப்பெற்று வாழ்வார்
என்ற குறிப்பும் காணத்தக்கது. இவ்வாறன்றி உருவினால் மட்டும்
ஒப்புக்கூறுமிடத்து அதுபற்றியே கூறுவர் ஆசிரியர். "தேனலர்
கமலப்போதிற் றிருவினு முருவ மிக்கார்" (364) என்றது காண்க.
பரிகலம்
- உண்கலம் - வாழைக்குருத்து. திருத்துதல் -
அரிந்துகொண்டு ஒழுங்கு பட அமைத்தல்
கதுமென
- கணவனார் மூன்றுபகல் உணவின்றிப் பசியால்
வாடியிருந்தமை கருதி விரைவாகச் சமைத்து ஊட்டினார் என்பது.
"திருவமுதமைக்கச்சார்ந்தார்" (846) என்று அடிசில் சமைக்கப்
புகுந்ததனை மட்டிற் கூறிய ஆசிரியர், சமைத்ததனைக் கூறாது,
அமுதமைக்கச் சார்ந்தார் - பரிகலந்திருத்தி - ஊட்ட என்றுவிரைவு
படக் கூறியது நாயனாரது பசி தாங்கலாற்றாது ஊட்டுந் திறத்தில்
அம்மையார்க்கிருந்த ஆர்வமும், அதனின் மிக ஆசிரியர்க்குள்ள
தீவிரமும் குறித்தது.
கணவனாரை - அன்பரோடும் - உடனிகழ்ச்சிப் பொருளில்
வந்த ஓடு என்ற மூன்றனுருபு ஒப்பாக வைத்துப் பூசித்து ஊட்டிய
பரிசு குறித்தது. அம்மையார் கலயனாரைக் கணவனார் என்ற
உடற்பொருத்தம்பற்றிய அளவில் நில்லாது, அதனின் மேலாக
உயிரொடு பொருந்திய சிவனடியாராகவும் எண்ணி ஊட்டினார்
என்ற குறிப்பும் காண்க. "எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள்
சேரற்க, ஏங்கை யுனக்கல்லாத தெப்பணியும் செய்யற்க",
"உன்னடியார் தாள்பணிவோ மாங்கவர்க்கே பாங்காவோம்,
அன்னவரே யெங்கணவ ராவா ரவருகந்து, சொன்ன பரிசே
தொழும்பாய்ப் பணிசெய்வோம்" (திருவெம்பாவை - 19 - 9)
என்பனவாதி திருவாசகங்கள் இந்த மனநிலையை நன்கு
விளக்குவன. இது பற்றியே விதிமுறை தீப மேந்திப் பூசித்து
ஊட்டினார் என்றதும் காண்க. ஓடு என்ற உருவை அன்பரோடு
புணர்த்திக்கூறியது சிறப்புப்பற்றி. ஆயின் அன்பரோடும்
கணவரோடும் யென்னாது கணவனாரை முன் வைத்தோதியது
மூன்றுபகல் பட்டினியிருந்த அவரது பசிதீர்க்கும் ஆர்வமிகுதியும்,
இவ்விளைவுகட்கும் திருவருளுக்கும் அவரது அயரா அன்பே
காரணம் என்று கொண்டமையும் அம்மையாரது மனத்தில் மிக்கு
நின்றமைபற்றியும்
கண்ணுதற்கு
- கணவனார் என்றதற்கும் அன்பர்
என்றதற்கும் இடையில் கண்ணுதல் அமரக் கூறியது அவரது
அன்பே இருதிறத்தாரையும் இடைநின்று பிணைத்து ஒட்டிநிற்பதாம்
என்பது குறித்தது.
கண்ணுதற்கு
அன்பர் - மாகேசுரர்கள். அன்பரோடும் -
தனியுண்ணாது சிவனடியார்களோடு இருந்து உடனுண்ணுதல்
வேண்டுமென்னும் உண்மை உத்தராபதியாராய் வந்த சிவபெருமான்
றிருவாக்கினாற் சிறுத்தொண்ட நாயனார் புராணத்துள்
விரிக்கப்படுதல் இங்கு நினைவுகூர்க.
விதிமுறை
- மாகேசுரபூசைக்குச் சிவாகமங்களில்விதித்த
முறைப்படி. இதனை 443-ல் பார்க்க.
தீபம்
ஏந்தி - தலைமைபற்றித் தீபத்தைக் கூறினாரேனும்
இனம்பற்றி ஏனைத்தூப முதலியனவும் உடன்கொள்ளப்படும்.
அதுநேரம் இரவுக்காலமாதலின் விதிப்படி தீபமேற்றினார்
என்றுரைப்பாருமுளர்.
மேவும்
- திருவருளாற் பொருந்திய வளங்களாலாகிய.
இன்அடிசில்
ஊட்ட - 442 - 443 பார்க்க. ஊட்ட - தாய்
ஊட்டுவதுபோல் அன்புகூர ஊட்டுதல் வேண்டுமென்பது விதி.1
அது
நுகர்ந்து - அது - அவ்வாறூட்டிய இனிய அடிசில்.
நுகர்தல் - உண்ணுதல், மட்டிலடங்காது மனங்களி
கூர்தலுங்
குறித்தது.
இன்பம்
ஆர்ந்தார் - "இன் அடிசில் உண்டு பருவரல்
ஒழிக" (847) என்று இறைவன் அருள்புரிந்தாரெனவே அது
இறைவனருளாகவும் மாகேசுரப் பிரசாதமாகவும் பெற்றதாகலான்
நீங்கா நிறைவாகிய இன்பம் ஆரத்துய்த்தனர். இவ்வின்பம்,
உண்டபின் சின்னேரத்திற் கழிந்து பின்னும் பசியின் துன்பங்
கூட்டுவதாகிய வெறும் உணவின் இன்பமன்று. 21
1இவ்வாறு
பூசித்து ஊட்டப்பெறும் அன்பர் என்ற
மாகேசுரர்களாவார், தேசிகர், நிருவாண தீக்கைபெற்றோர், விசேட
தீக்கைபெற்றோர், சமயதீக்கை பெற்றோர் என நான்குவகைப்படுவர்.
இவர்களை விதிப்படி பூசித்துத் திருவமுது செய்வித்தல்
மாகேசுரபூசை எனப்படும். மகேசுரனை வழிபடுவோர்
மாகேசுரர்களாவார். சிவதீக்கை பெறாதோர் மாகேசுரர்
களாயிருத்தற்குத் தகுதியுடையரல்லர். சிவனையும், குருவையும்,
சமயத்தையும், சிவசாத்திரங்களையும் நிந்தை செய்வோரும்,
சிவதிரவியத்தை அபகரித்தவர்களும் நித்தியகருமங்களை
விட்டவர்களும், மாகேசுரபூசைக்குத் தகுதியுடையரல்லர்.
மாகேசுரர்களைப் பூசித்து அமுதூட்டுவோர் சிவபதங்களில்
அடைகுவர். ஏனையோர்க்கு அமுதூட்டுதல் அன்னதானம் என்ற
பெயர்பெற்றுப் பசு புண்ணியமேயாகி நற்போகங்களுக்கு ஏதுவாகிச்
சுவர்க்கலோக முதலியவற்றைத் தருமேயன்றிச் சிவபுண்ணியமாகாது;
சிவபதம்பெறத் துணையும் செய்யாது. சமயம், விசேடம், நிருவாணம்,
ஆசாரியாபிடேகம் என்னும் நால்வகைத் தீக்கை பெற்றோர்களை
வைத்து மாகேசுரபூசை செய்வோர் நால்வகைச் சிவபதங்களைப்
பெறுவர். திருஞான - புரா - 111 - முதலியவை பார்க்க.
|