852.
|
ஊர்தொறும்
பலிகொண் டுய்க்கு மொருவன தருளி
னாலே
பாரினி லார்ந்த செல்வ முடையராம் பண்பி னீடிச்
சீருடை யடிசி னல்ல செழுங்கறி தயிர்நெய் பாலா
லார்தரு காதல்கூர வடியவர்க் குதவு நாளில், 22 |
852. (இ-ள்.)
வெளிப்படை. ஊர்கள் தோறும் பலிகொள்ளும்
சிவபெருமானது திருவருளினாலே இவ்வுலகில் நிறைந்த
செல்வமுடையவராகிய தன்மையில் மிகுந்து, சிறந்த அமுதினை,
நல்ல செழிய கறி, தயிர், நெய், பால் இவற்றுடன் நிறைய மிக்க
அன்புடன் சிவனடியார்களுக்கு உதவுகின்ற நாளிலே, 22
852. (வி-ரை.)
ஊர்தொறும் - எவ்வூரிலுமுள்ள
எவ்வுயிர்களிடத்தும். ஊர் ஆகுபெயர்.
பலிகொண்டு
உய்க்கும் - பலி - பிச்சை. கொண்டுய்க்கும்
என்பது ஒரு சொன்னீர்மைத்தாய்க் கொள்ளும் என்ற பொருளில்
வந்தது. பலியைத்தான் கொண்டு, பலி இட்டோரைத் தனது பதத்திற்
செலுத்துகின்ற என்றலுமாம். இப்பொருட்கு உய்த்தல் - செலுத்துதல்
- வைத்தல் என்க. "பத்திசெய் யடியரைப் பரம்பரத் துய்ப்பவன்"
என்பது திருவாசகம். உய்த்தலாவது - "நிரந்தரமாக நினையு
மடியார், இரந்துண்டு தன்னடி யெட்டச் செய்"தல் என்று
கொள்ளுதலுமொன்று. இறைவன் பிட்சாடனராக எழுந்தருளிப் பிச்சை
ஏற்கும் வரலாறு கந்தபுராணத்துட் காண்க. இதனைப் பற்பலவாறும்
பாராட்டுவது அன்பர் வழக்கு. "துள்ளுமறி யாமனது பலிகொடுத்
தேன்" என்று தாயுமானார் கூறியபடி இவர்கொள்ளும் பலியாவது
ஆன்மாக்களின் பசுபோதமும் அதற்கு விடயமாகிய
வினைப்பயன்களுமாம். ஊர்தொறும் - என்ற
கருதைப்பற்றி
"இங்குநம் மில்லங்க டோறு மெழுந்தருளிச், செங்கமலப் பொற்பாதந்
தந்தருளும் சேவகனை" (திருவெம்பாவை 17) என்ற திருவாசகத்தினை
உன்னுக. இவைபற்றி 413-ல் உரைத்தவையும் பார்க்க.
ஒருவன்
- ஒப்பற்றவன். "நின்னாவார் பிறரின்றி நீயே
யானாய்" (தனித்திருத்தாண்டகம் 7) என்றபடி சிவபெருமான்
ஒருவனே பதி - தலைவன் என்பதாம். "ஒருவர்" (843) என்ற
விடத்துரைத்தவை பார்க்க.
ஒருவனது
அருளினாலே ..... செல்வமுடையராம் பண்பின்
நீடி - அவர் பிச்சை கொள்வாராயினும் தம்மை யடைந்தார்க்கு
எல்லாச் செல்வமும் அருளவல்லார் என்றதனாற்
பிச்சை கொள்வது
தம்பொருட் டன்று என்பதாம், "படங்கொண்டு பாயும் பூவணையும்
தருவா யெனினும் படுதலைகொண், டிடங்க டோறு மிரப்பா யென்
றேசுவார்க்கென் பேசுவனே" என்ற திருவிளையாடற் புராணத்தினுள்
இது சுவைபட விளக்கப்படுதல் காண்க.
பாரினில்
ஆர்ந்த செல்வம் - உலகின் உண்மை
அனுபவங்களுக்கு எவ்வெச் செல்வங்கள் வேண்டுமோ அவை
முழுதும் நிறைந்த என்றபடி, உடையராம் பண்பில் நீடி
- பாரில்
பலர் ஆர்ந்த செல்வமுடையராயிருந்தும் அவ்வுடைமையின் பண்பு
இல்லாதாராய்க் கழிகின்றார்கள். அவ்வாறல்லாது அருளாற்
பெற்றசெல்வமாதலின் அதனை உடையாராதலோடு உடைய
பண்பினாலும் நீடினார் என்றுகுறிக்க உடையராய் நீடி என்னாது
உடையராம் பண்பின் நீடி என்றார். அப்பண்பாவது
செல்வம்
பெற்றதால் ஆகிய நீடுபயன்பெறுதல். அப்பயனாவன அரன்பூசையும்
அடியார்க்க முதளித்தலுமேயாம். 441-504 முதலியவற்றுள்
உரைத்தவைபார்க்க. இது குறிக்கப் பண்பில் நீடி. .......
உதவும்
நாளில் என்று உடன்சேர்த்துக் கூறினார்.
நல்ல
செழும் கறி தயிர் நெய் பாலாற் சீருடை அடிசில்
உதவும் என்று கூட்டி உரைத்துக்கொள்க. நல்ல - குணத்தால்
நன்மைதரும். இவற்றைப் பதார்த்தகுண சிந்தாமணி முதலிய
மருத்துவநூல்களுட் கண்டுகொள். தூய இடத்திற் றூயனவாகப்
பயிரிடப்பட்ட என்பதும் உடன்கொள்க. செழுமை -
இளையவை -
முதியவை என்றவ்வவற்றுக்கேற்ற நிலை, அழுகல் - வாடல் -
புழுக்கடி முதலிய கேடு இல்லாத நிலை முதலாகிய தன்மைகள்.
ஆல் - என்ற விகுதியை தயிர் நெய் என்பவற்றுடனும்
தனித்தனிகூட்டுக. உணவுப்பொருள்களில் இவையேதலைமை
பெற்றனவும் இன்றியமையாதனவும் சத்துவமுடையனவும் ஆம்.
ஆதலின் கறி தயிர் நெய் பால் அடிசில் என்ற இவற்றைக் கூறினார்.
கூறினாரேனும் உடனுண்ணும் இனம்பற்றிப் பருப்பு முதலியவையும்,
சுவைதரும் தகுதிபற்றி உப்பு முதலியவையும் உடன் கொள்க.
சீருடை அரிசி - என்று பாடங் கொள்ளின் செந்நெல்லரிசி
என்றுரைத்துக் கொள்க. அதுவே அடிசிற்குச் சீருடையதாம்.
அரிவாட்டாய நாயனார் புராணம் பார்க்க.
ஆர்தரு
காதல் கூர - நிறைந்த ஆசை மேலும் மிக.
கூர்தல் - உள்ளது சிறத்தல்.
அடியவர்க்குதவும்
- "உருத்திர பல்கணத்தார்க் கட்டிட்டல்"
என்ற ஆளுடைய பிள்ளையாரது திருமயிலைத் தேவாரங்
காண்க. 22
|