856.



காதலா லரச னுற்ற வருத்தமுங் களிப்பி னோடு
தீதில்வன் சேனை செய்யுந் திருப்பணி நேர்ப டாமை
மேதினி மிசையே யெய்த்து வீழ்ந்திளைப் பதுவு
                                   நோக்கி
மாதவக் கலயர் தாமு மனத்தினில் வருத்த
                                  மெய்தி,
 26



     856. (இ-ள்.) வெளிப்படை. தான் கொண்ட ஆசையினால்
அரசன் அடைந்த வருத்தத்தினையும், யானைகளோடு குற்றமற்ற
சேனைகளும் தாம் செய்யும் திருப்பணி நேர்படாமையினால்
நிலத்தின் மேலே களைத்து வீழ்ந்து இளைப்பதனைபும் மாதவராகிய
கலயனார் நோக்கி மனதில் வருத்தங் கொண்டு, 26

     856. (வி-ரை.) காதல் - "அங்கணன் செம்மைகண்டு
கும்பிடக்கொண்ட ஆர்வம்" (853). காதலால் உற்ற வருத்தம் -
காதல் நிறைவேறாததால் அக்காதல் காரணமாகப் பொருந்திய
வருத்தம்.

     வருத்தமும் - இளைப்பதுவும் நோக்கி - அரசனாகிய
ஏவுதற்கருத்தாவும், யானை சேனைகளாகிய இயற்றுதற் கருத்தாவும்
என்ற இருதிறத்தாரின் வருத்தமும் சொல்லப்பட்டன.

     களிற்றினோடு - சேனை - யானைகளுடன் சேனை
வீரர்களும்.

     தீதில்வன் சேனை - வலியசேனைகளேயாயினும் இங்குத்
தமக்குரிய கொலைப்போர் முதலிய தீங்கு ஒன்றும் செய்தில
என்பார் தீதில் - என்றார்.

     நேர்படாமை - முற்றுப்பெறாமை. நேர்படல் -
பொருந்துதல்.

     "காலநேர் படுதல் பார்த்தய னிற்ப" (219) "காணு நேர்பா
டெண்ணுவார்" என்றவைகாண்க.

     எய்த்து வீழ்த்து இளைப்பதுவும் - கைவராத பணியில்
மேலும் மேலும் முயல்வதனால் எய்ப்பு உளதாம்; எய்ப்பு மிகவே
உடல் விழும்; பன்முறை வீழ்ந்ததனால் இளைப்பு உண்டாகும்;
இளைப்பு அதிகரிக்கவே, வீழ்ந்தவர் மீண்டும் மேல் எழாத நிலை
உண்டாம். இதனையே வரும் பாட்டில் "எய்த்து எழாமை நோக்கி"
என்றார். நோக்கி - கூர்ந்துபார்த்து. வருத்தமும் இணைப்பதுவும்
- இரண்டனுருபுகள் தொக்கன.

     மாதவக் கலயனார் - உற்ற நோய் நோன்றல் தவத்திற்கு
உரு என்ப; ஆதலின் அரசனும் சேனைகளும் உற்றவருத்தம்
பொறாராயினர். அது பற்றி மாதவர் - என்ற அடைமொழி
புணர்த்தியோதினார்.

     தீதிலாச் சேனை - என்பதும் பாடம். 26