857


.
சேனையு மானை பூண்ட திரளுமெய்த் தெழாமை
                                 நோக்கி
"யானுமிவ் விளைப்புற் றெய்க்கு மிதுபெற வேண்டு"
                                மென்று
தேனலர் கொன்றை யார்தந் திருமேனிப் பூங்கச்
                                 சேய்ந்த
மானவன் கயிறு பூண்டு கழுத்தினால் வருந்த
                                லுற்றார்.
27



     857. (இ-ள்.) வெளிப்படை. சேனையும், யானைகளைக்
கொண்ட கூட்டமும் இளைத்து மேல் எழமாட்டாதிருக்கிற நிலையை
நோக்கி, "நானும் இந்த இளைப்பினைப் பொருந்தி மெலியும்
இப்பேறு பெறவேண்டும்-" என்று உட்கொண்டு, தேன் நிறைந்து
அலர்கின்ற கொன்றை யணிந்த இறைவனது திருமேனியிற் பூண்ட
பூங்கச்சிற்பொருந்திய பெரியவலிய கயிற்றைப் பூட்டித் தமது
கழுத்தினால் வருந்தி இழுக்கத் தொடங்கினார். 27

     857. (வி-ரை.) ஆனைபூண்ட திரள் - "வேழமெல்லாம்"
(853) பூட்டியதனால் திரள் - என்றார். திரள் - கூட்டம். சேனை
- சேனைவீரர்கள்.

     எய்த்து எழாமை - எய்த்தலினால் எழமாட்டா திருந்த
நிலைமையினை.

     நோக்கி - எழாமை கண்டார். அதனால் அவற்றின்
மாட்டாமையும், அதன் காரணமாகிய எய்ப்பும் கருதி அறிந்தார்
என்பதாம். இது பற்றியே மேற்பாட்டிலும் நோக்கி - என்றார்.

     "யானும் ... வேண்டும்" என்று - இது நாயனார் கருதியது.
என்று
- என்று கருதி. யானும் பூட்டியிழுத்து நர்நிற்கச் செய்வேன்
என்றாவது, இத்திருப்பணியில் யானும் முயல்வேன் என்றாவது
நாயனார் கருதினாரல்லர். யானைகளும்சேனைகளும் செய்ய
மாட்டாத தொன்றைத் தமது சக்திகொண்டு நாயனார் செய்யத்
துணிந்தாரென்னில் அது மதியுடையவர் செய்கை யன்றாகும். யான்
அங்கணரை நேர் காண்பேன் என்று எண்ணினால் அது
அகங்காரத்தின் பாற்படும். மேலும், முன்னர் 853-ல் உரைத்த
சிவதருமவியலுக்கும் மாறுபடும். "எய்ப்புற் றிளைக்கும் இது
பெறவேண்டும்" என்றதனால் இதுகாரியம் தம்மால் இயலாது
இளைப்போம் என்ற துணிபே நாயனார் கொண்டனர் என்பது
தெளிவாம். ஆயின், நாயனார் இதில் முயன்றது என்னையோ
வெனின்? யானை சேனைகளின் மெலிவைத் தானும் ஒருபங்கு
கூறுகொண்டு தாங்கி அம்மெலிவைக் குறைத்து அம்மட்டில்
அவற்றின் வருத்தத்தை நீக்குவேன் என்ற அளவே இதில்
துணிந்தனர் என்க. அரசன் செய்கை ஆணவத்தால்
மேற்கொள்ளப்படாது செம்மைகண்டு கும்பிடக்கொண்ட ஆர்வத்தால்
தூண்டப்பட்டமையால் அதில் அரசன் கொண்ட அன்பின்
நெறியினைக் காணவிரும்பியே (854) நாயனார் திருப்பனந்தாளிற்
சேர்ந்தனர். இவ்வாறு கொண்ட அன்புடைப்பணியில் இளைத்தாரது
வருத்தத்தைக் குறைத்தல் அன்பர் பணியும் அறமுமா மாதலின்
நாயனார் அதில் முயன்றனர். ஒத்த அன்புடையார் உடன்கலந்து
கூறுகொள்வதனால். இன்பங்களாயின், அவை மிகும்;
துன்பங்களாயின் அவை குறையும்; என்பது உலகியலிற் காணப்படும்.
இதுபற்றியே ஒருவனுக்குத் தாங்கலாற்றாத துன்பம் நேர்ந்தபோது
அன்புடையார் பலரும் சென்று சேர்ந்து உசாவிவருதல்
உலகவழக்காயிற்று. இன்பத்தில் பலருங்கூடுதலும் இக்கருத்தே
பற்றியது. "துயரகற்ற மாட்டாதேன் வருந்துமிது, தனதுறுபே ரிடர்
யானுந் தாங்குவதே கருமமென" (127) என்று மனுநீதிச்சோழர்
துணிந்ததும் இங்கு நினைவுகூர்க. ஆண்டுரைத்தவையும் பார்க்க.

     தேன் அலர் கொன்றை - தேன் - வண்டு எனவும், அலர்
- அலர்த்தப்படும் எனவும்கொண்டு, வண்டுகளால் ஊதி
அலர்த்தப்படும் கொன்றை என்றலுமாம்.

     திருமேனிப் பூங்கச்சு ஏய்ந்த - பூட்டி இழுக்கும் வலிய
கயிறுகள் இறைவரது இலிங்கத் திருமேனியிற்பட்டு ஊறுபடுத்தாமல்
அத்திருமேனியைப் பூங்கச்சுக்களாகப் பட்டு முதலியவற்றாற்
பொதிந்து அவற்றிற் பொருந்திய கயிறு பூட்டினர் என்பதாம்.

     மான வன் கயிறு - மானம் - பெரிது. யானைத்திரளும்
சேனைகளும் பூட்டி இழுத்தலின் அதற்குத் தக்கவாறு கயிறு
பெரிதாயும் வலிதாயும் இருந்ததென்க.

     கழுத்தினாற் பூண்டு - என்க. வருந்தலுற்றார் - நாயனார்
அக்கயிற்றினைத் தமது கழுத்திற்பூட்டி வருந்தி இழுக்கத்
தொடங்கினர் என்பதாம். 27