858 நண்ணிய வொருமை யன்பி னாருறு பாசத் தாலே
திண்ணிய தொண்டர் பூட்டி யிளைத்தபின் றிறம்பி
                                  நிற்க.
வொண்ணுமோ? கலய னார்த மொருப்பாடு கண்ட
                                  போதே
யண்ணலார் நேரே நின்றா; ரமரரும் விசும்பி
                               லார்த்தார்,
 28

     858. (இ-ள்.) நண்ணிய.......பாசத்தாலே - ஒருமை
பொருந்திய அன்பாகிய நாரினால் இயன்ற கயிற்றினாலே;
திண்ணிய...ஒண்ணுமோ - திண்மையுடைய தொண்டர் பூட்டி
இளைப்படைந்த பின்னரும் அக்கருத்துக்கு மாறுபட்டு முன்போலச்
சாய்ந்து நிற்க இறைவர்க்கு முடியுமோ?; கலயனார்தம்....நின்றார் -
கலயனாரது மனத்தில் எழுந்த ஒருமைப்பாட்டினைக் கண்ட
அப்பொழுதே பெருமையுடைய பிரானார் நேரே நின்றனர்;
அமரரும்...ஆர்த்தார் - தேவர்களும் ஆகாயத்தில் மகிழ்ச்சியினால்
ஆரவாரித் தனராகி, 28

     858. (வி-ரை.) ஒருமை நண்ணிய அன்பின் நார் உறு
பாசம்
- என்று கூட்டுக. ஒன்றிய சிந்தையினாற் பொருந்திய
அன்பாகிய நார் இழைகளால் முறுக்கப்பட்ட கயிறு. "ஒன்றியிருந்து
நினைமின்கள்" என்ற திருவிருத்தம் காண்க. ஒன்றுதல்
வேறொன்றிலும் செல்லாது அதனிலே பொருந்துதல். "உறவு
கோல்நட் டுணர்வு கயிற்றினால், முறுக வாங்கிக் கடையமுன்
னிற்குமே" என்பது முதலியனவும் இக்கருத்துப்பற்றியன.

     அன்பின்தார் உறுபாசத்தாற் பூட்டி என்க. நாயனார்
பூங்கச்சிற் கட்டிய கயிற்றினைக் கழுத்திற்பூட்டி
வருந்தலுற்றாராயினும், உண்மையில், அவர் பூட்டி ஈர்த்திளைத்தது
அன்புநார்ப் பாசமேயாகும் என்பது. இறைவன் நேரே நின்றது
புறத்திலே பூண்ட கயிற்றுக் கன்று, அகத்திற் கட்டிய அன்புக்
கயிற்றுக்கேயாம் என்பது கருத்து. புறக் கயிற்றுக்கு நிமிர்வராயின்
முன்னர் யானை சேனைகளின் முயற்சிக்கே பயன் தந்திருத்தல்
வேண்டும். அவ்வாறன்றி யானை சேனைகளின் வருந்திய
முயற்சிகளின் மிக்கு நாயனார்பாற் கண்டது அன்புநார்ப்
பாசமொன்றேயாம் என்று காட்டுவார், ஒருமை அன்பின் நாருறு
பாசத்தாலே பூட்டி யிளைத்தபின் திறம்பி நிற்க ஒண்ணுமோ?
என்று வற்புறுத்தி எதிர்மறை வினாவின் வைத்துக் கூறினார்.
இவ்வாறன்றி, அன்பினார் - அன்பராகிய நாயனார் பொருந்திய
கயிற்றினாலே என்று கொண்டுரைப்பாருமுளர்.

     திண்ணிய - திண்மை - அன்பின் மிக்க திருத்தொண்டின்
வலிமை. "எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார், திண்ணிய
ராகப் பெறின்" என்றதன் கருத்தினை இங்குச் சிந்திக்க. தாமும்
மனைவியார் மக்கள் சுற்றம் என்றிவரும் இருபகல் உணவின்றி
வருந்தியும் அதற்காக நெற்கொள்ளக் கொண்டு சென்றதாலியை
இறைவர்க்குக் குங்குலியங் கொண்ட திண்மை குறித்தது.

     பூட்டி இளைத்த - எய்க்கும் இவ்விளைப்பு யானும்
பெறவேண்டு மென்ற மனவொருமைப்பாட்டினாலே பூட்டியிழுத்து
இளைத்த. ஒருப்பாடு கண்டபோதே என்ற கருத்தும் அது.

     பின் - பின்னும். ஒண்ணுமோ? - எண்ணாது. வினா
எதிர்மறை குறித்தது. கண்ட பின்னும் திறம்பி நிற்க ஒண்ணாதாயின்
நேர்நிற்றல் வேண்டுமே? எப்போது நேர்நின்றார் எனில்?
ஒருப்பாடு கண்டபோதே நேரே நின்றார்
என்க.

     ஒருப்பாடு - ஒருமை நண்ணிய அன்பின் துணிபு. தமது
மற்றைக் கண்ணையும் தோண்ட ஒருப்பட்டுக் கண்ணப்பர் அம்பு
ஊன்றலும் தேவதேவர் தரித்திலராகி அந்தக் கையினைப்
பற்றிக்கொண்டனர் என்ற சரிதம் இங்கு நினைவுகூரத்தக்கது.

     இதற்கு இவ்வாறன்றி, நாயனார் பூட்டி இளைக்கப்
பார்த்திருந்து அதன்பின் சாய்வுமாறி நேர்நிற்றல் தகுமா? ஆதலின்
அவ்வாறு இளைக்கு முன் ஒருப்பாடு கண்டபோதே நேரே நின்றார்,
அண்ணலாராதலின்; என்றுரைப்பதுமொன்று. இப்பொருளில்
இளைத்தபின் திறம்பிநேர்நிற்றல் பெருமைக்குத்தகாதுஎன்றதாம்.

     அண்ணலார் - அன்பினிற் றாழும் பெருமையுடையார்.
அப்பெருமை விளங்கிய இடமாதலின் இங்கு இப்பெயராற் கூறினார்.

     ஆர்த்தார் - ஆர்த்தவர்களாகி. முற்றெச்சம். ஆர்த்தாராகிப்
பாரில் எங்கும் பூமாரி பரப்பினர் என வரும்பாட்டுடன்
கூட்டிமுடிக்க. இதனை வினைமுற்றாகவே கொண்டும், பரப்பினர்
என்றதற்கு எழுவாய் வருவித்தும் உரைப்பாருமுண்டு. 28