859.



பார்மிசை நெருங்க வெங்கும் பரப்பினர் பயில்பூ
                                    மாரி;
தேர்மலி தானை மன்னன் சேனையுங் களிறு
                                மெல்லாங்
கார்பெறு கானம் போலக் களித்தன; கைகள் கூப்பி
வாழ்கழல் வேந்தன் றொண்டர் மலரடி தலைமேல்
                                 வைத்து;
29

     859. (இ-ள்.) வெளிப்படை. பூமியின்மேல் எங்கும்
நெருங்கும்படி அதிகமாகக் கற்பகப் பூமழை பரப்பினர்; தேர்களால்
மிகுந்த மன்னனுடைய சேனைகளும் யானைகளும் ஆகிய இவை
எல்லாம் மேகத்தைப் பெற்ற சோலைபோல மகிழ்ந்தன; வீரக்கழல்
கட்டிய அரசன் கைகளைக்கூப்பித் தொழுது தொண்டருடைய
மலர்போன்ற பாதங்களைத் தலைமேற்கொண்டு வணங்கி, 29

     859. (வி-ரை.) பயில் பூமாரி பார்மிசை எங்கும்
நெருங்கப் பரப்பினர்
என்று கூட்டிக்கொள்க. பயில் - பழகிய.
பரப்பினர் - மிகப் பெய்தலால் எங்கும் இடையில்லாது நிரப்பினர்.

     தேர் மலி தானை - மன்னனுக்குச் சிறப்பு அடைமொழி.
அங்குத் தேர்ப்படை வந்தன என்பதன்று.

     கார்பெறு கானம் போல - மழை காணாது வாடி மழை
பெய்யப் பெற்ற உடனே செழித்த சோலை போல. கார் - கருமை
நிறத்தின் பெயர் அந்நிறத்தையுடைய மேகத்துக்காகிப், பின்னர்
அம்மேகம் பொழியும் மழைக்காயிற்று. இரு மடியாகுபெயர்.
இறைவன் திருமேனியை நேர்காணமாட்டாது இளைத்த யானை
சேனைகள் தாம் விரும்பியிருந்து வாடிய செய்தியாகிய
நேர்காணுதலைக் கிடக்கப்பெற்று மகிழ்ந்ததற்குப், பயன்பற்றி வந்த
உவமம்.

     கைகள் கூப்பி என்றது, முதலில் நின்றபடியே கைகூப்பி
வணங்குதலையும், மலரடி தலைமேல் வைத்து என்றது, பின்னர்
நிலத்தில் உடல் தோய வீழ்ந்து வணங்குதலையும் குறித்தன.

      வார் கழல் வேந்தன் - மலரடி தலைமேல் வைத்து -
வெற்றிக்கடையாளமாகக் காலில் தான் வீரக்கழல் அணிந்து,
முடிமன்னர்பிறர் தன்னடியில் வணங்க நிற்கும் அரசன் தன்
தலையை நாயனாரது திரு அடியில் வைத்து வணங்கினான் என்று
நாயனாரது சிறப்புக் குறித்தபடி. 29