860.



"விண்பயில் புரங்கள் வேவ வைதிகத் தேரின்
                                 மேருத்
திண்சிலை குனிய நின்றார் செந்நிலை காணச்
                                 செய்தீர்;
மண்பகிர்ந் தவனுங் காணா மலரடி யிரண்டும் யாரே
பண்புடை யடியா ரல்லாற் பரிந்துநேர் காண
                               வல்லார்?"
 30

     860. (இ-ள்.) வெளிப்படை. "விண்ணிற் பறக்கின்ற
முப்புரங்களும் வேகும்படி வேதப்புரவி பூண்ட தேரில் மேரு
மலையை வலிய வில்லாக வளைத்து நின்ற சடையப்பருடைய நேர்
நிற்கும் நிலையினை அடியேன் தரிசிக்கும்படி செய்தருளினீர்!
மண்ணைப் பிளந்து சென்ற திருமாலும் தேடிக் காணமுடியாத
(சிவபெருமானது) மலர் போன்ற திருவடிக ளிரண்டினையும் பண்பு
மிக்க அடியவர்களல்லது வேறு யாவரே அன்பினால் நேர் காண
வல்லவர்?" 30

      860. (வி-ரை.) விண் பயில் - ஆகாயத்திற் பறந்து
சென்று பழகிய, பயிலுதல் - இங்கு இலகுவிற் சென்று வருதல்
குறித்தது. பொன், வெள்ளி, செம்பு இவற்றானியன்ற மதிலுடைய
மூன்று ஊர்களைத் தம் இடமாகக் கொண்டு, அசுரர்கள்,
அந்நகரங்களோடு ஆகாயத்திற் பறந்து சென்றும் இறங்கியும்
அங்கங்குப் பல ஊர்களையும் உயிர்களையும் கீழ் அழுத்தி
அழித்தனர் என்பது புராண சரிதம்.

     வைதிகந் தேர் - திரிபுரமெரித்த காலையில் இறைவன்
ஏறிய தேருக்குக் குதிரைகளாக வேதங்கள் அமைந்தன என்பது
சரிதம். "வேந்தன் வளைத்தது மேரு வில்லரவு நாண்வெங்கணை
செங்கண்மால், போந்த மதிலணி முப்புரம் பொடிபட வேதப்
புரவித்தேர்,
சாந்தை முதலயன் சாரதி" (சேந்தனார் -
திருவாவடுதுறை - 6), "மருளா, ரிடங்கொண்முப் புரம்வெந்
தவியவை திகத்தே ரேறிய வேறுசே வகனே" (திருமாளிகைத்
தேவர் - க - கோயில் - 10) என்ற திருவிசைப் பாக்கள் காண்க.

     மேருத் திண் சிலை குனிய - மேருமலையே வில்லாக
வளைய. சிலை - மலை எனவும் வில் எனவும் இரு பொருளும்
பட நின்றது. குனிதல் - வளைதல். "கற்றூண்,
பிறந்திறுவ தல்லால்
பெரும்பாரந் தாங்கிற், றளர்ந்து வளையுமோ தான்" என்ற
நியதியையும் மாறுபடுத்திக் கல்லை வளைத்து என அவரது
இறைமைகுறித்தபடி.

     நின்றார் - தேரில் ஏறினார்; சிலை வளைத்தனர்; ஆயின்
அவைகொண்டு சேவகம் ஒன்றும்செய்யாது சும்மா நின்றே
வென்றவர் என்றது குறிப்பு. 190 உரைபார்க்க.

     செந்நிலை காண - சாய்ந்திருந்த அவரது நிமிர்ந்த
நிலையினை அடியேன்காணும் படி. திண்ணிய மேருமலையினைக்
குனியும்படிசெய்த வல்லாளராகிய இறைவர்தாம் குனிந்திருந்தாரை
நிமிரச்செய்தீர் என்று நாயனாரது பெருமை குறித்தபடியாம்.

     மண் பகிர்ந்தவனும் - திருமாலும். பகிர்தல் - பிளத்தல்.
திருவடிதேடும் பொருட்டு மண்ணைத் தோண்டி உட்சென்றவன்
என்ற பொருள் குறித்தது. உம்மை உயர்வு சிறப்பு. "நான்முகன்
முதலா வானவர் தொழுதெழ, வீரடியாலே மூவுல களந்து, நாற்றிசை
முனிவரு மைம்புலன் மலரப், போற்றிசெய் கதிர்முடித் திருநெடு
மாலன், றடிமுடி யறியு மாதர வதனிற், கடுமு ரணேன மாகி
முன்கலந், தேழ்தல முருவ விடந்து பின்னெய்த், தூழி முதல்வ
சயசய வென்று, வழுத்தியுங் காணா மலரடி" (போற்றித் திருவகவல்)
என்ற திருவாசகமும், "வரையொன்று நிறுவி, யரவென்று பிணித்துக்,
கடறட வாக மிடலொடும் வாங்கித், திண்டோ ளாண்ட தண்டா
வமரர்க், கமிர்துணாவளித்த முதுபெருங்கடவுள், கடையுகஞ் சென்ற
காலத்து நெடுநில, மாழிப் பரப்பிலாழ்வது பொறாஅ. தஞ்சே
லென்று செஞ்சே லாகித்தன், யெற்வ வுதரத்துச் சிறுசெலுப்புரையிற்,
பௌவ மேழே பட்டது, பௌவத்தோ, டுலகுகுழைத்
தொருநாளுண்டது, முலக மூன்று மனந்துழி யாங்கவ, னீரடி
நிரம்பிற்று மிலவே தேரி, லுரைப்போர்க் கல்ல தவன்குறை வின்றே,
யினைய னாகிய தனிமுதல் வானவன், கேழந் றிருவுருவாகி யாழத்,
தடுக்கிய வேழு மெடுத்தன னெடுத்தெடுத், தூழி யூழி கீழுறக்
கிளைத்துங், காண்பதற் கரியநின் கழலும்" (11-ம் திருமுறை -
கோயினான் - 12) என்ற பட்டினத்தடிகள் திருவாக்கு முதலிய
எண்ணிந்த தமிழ்மறைகளில் இவ்வுயர்வு சிறப்பும்மையின் பொருள்
விளக்கப்படுதல் காண்க.

     காணாமலரடி யிரண்டினையும் யாரேகாண வல்லார்?
என்று அவர்க்கருமையும் இவர்க்கெளிமையும் முரணணிச்சுவைபட
இணைத்து வைத்துக் காட்டியவாறாம். எளிமைக்குக் காரணம்
ஒருமையன்பு பூண்ட அடிமைத்திறமே என்பார்,
பண்புடையடியாரல்லால்
என்று, பரிந்து என்றும் கூறினார்.

     அடியாரல்லார் அடியிரண்டும் யாரே நேர்காண
வல்லார்?
என்று கூட்டியுரைக்க. "நம்பி, பூவணத் தவரை யுற்றார்;
அவரலாற் புரங்கள் செற்ற, வேவணச் சிலையினாரை யார்தொடர்ந்
தெட்ட வல்லார்?" (190) என்ற விடத்தும் இவ்வாறே கூறினார்.

     பண்பு - அடிமைத்தன்மை. பரிந்து - எனக்குக் காட்டுவாய்
என்று வருந்தியிரங்கியிரந்து. நேர்காண - நேர் - நேர்நிலையாக.
வெளிப்படையாக என்றலுமாம். யாரே - ஏகார வினா ஒருவருமிலர்
என எதிர்மறை குறித்தது.

     மண்புகுந்தவனும் - என்பதும் பாடம். 30