861.



என்றுமெய்த் தொண்டர் தம்மை யேத்தியங் கெம்பி
                                     ரானுக்
கொன்றிய பணிகண் மற்று முள்ளன பலவுஞ் செய்து
நின்றவெண் கவிகை மன்ன னீங்கவு, நிகரி லன்பர்
மன்றிடை யாடல் செய்யு மலர்க்கழல் வாழ்த்தி
                                   வைகி,
31

     861. (இ-ள்.) வெளிப்படை. என்று இவ்வாறு
மெய்த்தொண்டராகிய நாயனாரைத் துதித்து அத்தலத்தில்
இறைவர்க்குப் பொருந்திய மற்றும் திருப்பணிகள் பலவற்றையுஞ்
செய்து, பின்னர், நிலைத்த வெண்கொற்றக் குடையுடைய அவ்வரசன்
தனது நகரத்துக்குப் போயினான்; அதன் பின்னும், ஒப்பற்ற
அன்பராகிய கலயனாரும் அம்பலத்தினில் ஆடல்புரிகின்ற
மலர்போன்ற பாதங்களை வாழ்த்தி அங்குத் தங்கி, 31

        861. (வி-ரை.) மெய்த்தொண்டர் - திருத்தொண்டின்
உண்மைத் தன்மையில் உறைத்தவர்.

     எம்பிரானுக்கு ..... பலவும் - யானையும் சேனையும் ஈர்த்து
நின்றன என்றதனால் அரசன் திருக்கோயில்கட்டித் திருப்பணிகள்
செய்வித்தான் என்பது கருத்தக்கதாம். யானை சேனைகளுக்கு
இடந்தரவும் மற்றும் இவற்றுக்கேற்ற வசதிகளுக்குமாக ஆலயத்தில்
மண்டபங்கள் திருமதில் முதலியவற்றிற் பல வாயில்கள்
திறக்கப்பட்டிருத்தல் கூடும். விமானங்கள், சுற்று ஆலயங்கள்
முதலியன எஞ்சிநின்றிருத்தலும் கூடும். இவைபோல்வனவற்றைக்
குறிக்க ஒன்றிய பணிகள் என்றும், திருநந்தனவனம், திருக்குளம்
திருமதில் முதலியவற்றைக் குறிக்க மற்றும் உள்ளன பலவும்
என்றும் கூறினார். "கூவலு மமைத்து மாடு கோயில்சூழ் மதிலும்
போக்கி, வாவியுந் தொட்டு மற்றும் வேண்டுவ வகுத்து" என்ற
பூசலார் நாயனார் புராணம் (3) காண்க. இவை பற்றிய விரிவு
சிவாகமங்களுட் கண்டு கொள்க.

     நின்ற - திருப்பணிகள் முற்றும்வரை அங்குத் தங்கிய
என்பதாம். ஏவுதற்கருத்தாக்களாய்ச் சிவாலயத் திருப்பணிகள்
செய்விக்கும் அன்பர்கள் அவற்றைத் தமக்காகப் பிறர்
கண்காணிக்கவிட்டுத் தாம் வேறு காரியங்கள் பார்த்து இராமல்,
அத்திருப்பணிகள் முழுதும் தாமே நேரில் இருந்து காண்காணித்து
முடிக்க வேண்டுமென்பது முறையும் விதியுமாம். இங்குத்
திருப்பணிகள் முழுவதும் அரசன்தானே கூட இருந்து முடித்தனன்
என்பார் நின்ற என்றார். ஆர்வமும் அன்பும் காரணமாக
மெய்வருத்தம் பார்த்தலும் இளைப்பாறுதலுமின்றியும், இருத்தலும்
கிடத்தலுமின்றியும், நின்றபடியே கண்காணித்து என்ற குறிப்பும்
காண்க.

     வெண்கவிகை - அரச அடையாளங்களில் ஒன்று என்ற
மாத்திரையாய் நின்றது. இங்கு அரசன் வெண்கவிகை நிழற்ற
அதன்கீழ் நின்றனன். என்பதன்று. வெண்கொற்றக்குடை
அளிசெய்தலைக் குறிக்கும் உருவகம்.

     நீங்கவும் - அத்தலத்தினின்று தன் தலைநகருக்குச் சென்ற
பின்னரும். அரசன் நீங்கவும் தாம் நீங்காராய் வைகினார் என
உம்மை உயர்வு சிறப்புக் குறித்தது.

     நிகரில் அன்பர் (ஆதலின்) வைகி என்க. வைகி - தங்கி.
"நாதனை நேரே காணும் அந்நெறி தலைநின்றான் என்று அரசனை
விரும்பி" (854)யே நாயனார் திருப்பனந்தாளிற் சேர்ந்தனர். அவன்
நீங்கவும் தாம் நீங்காது பின்னரும் அங்குக் கழல் வாழ்த்தி
யிருந்ததற்கு அவரது அயரா அன்பே காரணமாம் என்பார் நிகரில்
அன்பர்
என்றார்.

     மன்றிடை ஆடல் செய்யும் மலர்க்கழல் வாழ்த்தி -
மன்று - திருவம்பலம். ஐந்தொழில் நடனம் செய்யும் என்பது
இறைவனது அம்பலத்து அருட்கூத்து. அடியார்க் கெளிவந்த
அத்திருவருளையே எண்ணியெண்ணி வாழ்த்திக்கொண்டு பலநாள்
அங்குத் தங்கினார் என்பது கருத்து. யானை சேனைகளாற் கூடாதது
தம்மாற் கூடிற்று என்று எண்ணினாரல்லர், திருப்பணியில் முயன்ற
அவற்றின் இளைப்பைத் தாமும் கூறுகொண்டு குறைக்க எண்ணிய
எண்ணத்தினுக்கிரங்கி இறைவன் நேர் நின்று அருளிய பெருங்
கருணைத் திறத்தையே எண்ணினார். தமது சிறுமையினையும்
இறைவரது அருளின் பெருமையினையுமே எண்ணி எண்ணி
ஆராமை மிகுதியால் அத்திருவருளை வாழ்த்தி வைகினார் என்பது.
கழல்
- திருவடி - சிவசக்தி. 31