862.



சிலபகல் கழிந்த பின்பு திருக்கட வூரி னண்ணி
நிலவுதம் பணியிற் றங்கி நிகழுநா ணிகரில் காழித்
தலைவராம் பிள்ளை யாருந் தாண்டகச் சதுர ராகு
மலர்புக ழரசுங் கூட வங்கெழுந் தருளக் கண்டு.
 32

     862. (இ-ள்.) வெளிப்படை. சில நாள்கள் கழிந்த பின்பு
அங்கு நின்றும் போந்து திருக்கடவூரிற் சேர்ந்து நிலைபெற்ற தமது
திருப்பணியில் ஒழுகி வருகின்ற நாட்களிலே ஒப்பற்ற சீர்காழித்
தலைவராகிய ஆளுடைய பிள்ளையாரும் தாண்டக
வேந்தராகிய மிக்குப் பெருகும் புகழுடைய ஆளுடைய
அரசுகளும் ஒன்றாக
அங்கு எழுந்தருளக் கண்டு, 32

     862. (வி-ரை.) பகல் - இங்கு நாள் என்ற பொருளில்வந்தது.

     நிலவு தம் பணியில் தங்கி - தாம் முட்டின்றி
நியமமாகச்செய்துவந்த குங்குலியத் தூபத்திருப்பணி - நிலவு -
வறுமைவந்த காலத்தும் விடாது நிலவிய. பணியிற்றங்குதலாவது
பணிசெய்து அதில் வாழ்வடைதல்.

     நிகழும் நாள் - வாழ்கின்ற காலத்தில், நிகழ்தல் - நடத்தல்
- செல்லுதல்,

     நிகரில் காழித் தலைவர் - நிகரில் காழி என்றும், நிகரில்
தலைவர் என்றும்கூட்டியுரைக்க நின்றது. காழியின் தன்னிகரில்லாச்
சிறப்பு ஆளுடைய பிள்ளையாராருளிய வழிமொழித் திருவிராகம்,
பல்பெயர்ப்பத்து, திருவெழுகூற்றிருக்கை, திருசக்கர மாற்று, ஈரடி,
திருவியமகம் முதலிய திருப்பதிகங்களானும், "பெருநெறிய
பிரமாபுரம்" (நட்டபாடை - பிரமாபுரம் - 11), "நற்புலவர் தாம்புகழ்
பொற்பதி (காந் - பஞ்ச - பூந்தராய் 10), "போதனைப்போன்
மறையோர் பயிலும்புகலி" (வியா - குறி - புகலி. 11), "கலையின்
மேவும் மனத்தோ ரிரப்போர்க்குக் கரப்பிலார், பொலியு மந்தண்
பொழில்சூழ்ந் தழகாரும்புகலி" (செவ்வழி - புகலி - 8), "பொய்யா
நாவி னந்தணர் வாழும் புறவம்" (குறிஞ்சி - புறவம் - 1),
"கரிதன்னைப் பண்டுரி செய்தோன் பாவனை செய்யும் பதி"
(குறிஞ்சி - புறவம் - 7),
"காதலாற், சைவர் பாசு பதர்கள் வணங்கும்
சண்பை நகர்" (தக்கேசி - சண்பை - 4), "உரவார் கவிதைப் புலவர்க்
கொருநாளுங், கரவா வண்கைக் கற்றவர் சேருங் கலிக்காழி"
(குறிஞ்சி - காழி - 1), "கற்றல்கேட்ட லுடையார்கள் வாழ் கலிக்காழி"
(காந்தாரம் - காழி - 3), "விலங்கலமர்புயன்மறந்து
மீன்சனிபுக்கூன்சலிக்குங் காலந் தானுங், கலங்கலிலா
மனப்பெருவண்கையுடைய மெய்யர் வாழ் கழுமலமே"

(மேகரா - குறி - கழுமலம் - 3), "தருந்தடக்கை முத்தழலோர்
மனைகடொறு மிறைவனது தன்மை பாடிக், கருந்தடங்கண்
ணார்கழல்பந் தம்மானைப் பாட்டயருங் கழுமலமே" (மேற்படி 2),
"பரக்கும்வண் புகழார் பழியவை பார்த்துப் பலபலவறங்களே
பயிற்றிக், கரக்குமா றறியா வண்மையால் வாழுங் கழுமல நகர்"
(புறநீர்மை - கழுமலம் - 8), "ஞானங் கருதினா ருலகிற் கருத்துடை
யார்சேர் கழுமலநகர்" (மேற்படி 5), "கலையாறொடு சுருதித்தொகை
கற்றோர் மிகுகூட்டம், விலையாயின சொற்றேர் தரு வேணுபுரம்"
(நட்டபாடை) என்பனவாதி ஆளுடைய பிள்ளையார் அருளிய
தேவாரங்களாலும், அவர் புராணத்துட்கூறிய தலச் சிறப்புக்களாலும்
பிறவாற்றானுமறிக. நிகரில் தலைவர் என்ற அவரது ஒப்பற்ற
தலைவராந் தன்மை, அவர் புராணத்துள் 69, 70, 71
திருப்பாட்டுக்கள் முதலியவற்றாலும், அவர் சரித நிகழ்ச்சிகள்
பலவற்றாலும், ஆளுடைய அரசுகள் ஆளுடைய நம்பிகள் முதலிய
பரமாசாரியர்களும், சங்கராசாரியார் முதலிய சமயத் தாபகர்களும்
வழிபட்டுத் துதித்தவாற்றாலும், இறைவன் செய்யும்
அருட்டொழிலாகிய முத்திப்பேற்றைத் தன்னடைந் தோர்க்கு
அருளும் தன்மையாலும், பிறவாற்றா லும் அறிக.

     பிள்ளையார் - ஆளுடைய பிள்ளையார். உலகுக்கெல்லாம்
தந்தை தாயாராகிய தோணிபுரேசர் பெரிய நாயகியம்மை
யாரிவர்களுக்குப் பிள்ளையாராய் அருண்ஞானப்பாலூட்டப்பெற்று
வளர்ந்தமையால் இப்பெயர் பெற்றனர். "யாவர்க்குந் தந்தைதா
யெனுமவரிப் படியளித்தார், ஆவதனா லாளுடைய பிள்ளையாராய்"
- (திருஞான - புரா - 69) என்றது பார்க்க.

     தாண்டகச் சதுரர் - திருத்தாண்டகத்தில் தனி வல்லமை யுடையார். தாண்டகம் - ஒற்று நீக்கிப் பெரும்பான்மை 26
எழுத்துக்களின் மிக்க தாண்டக அடியால் வருமாறு யாக்கப்பட்ட
ஒருவகைச் சந்தமுடைய தமிழ்ப்பண் அமைதிபெற்ற பாவிகற்பம்.
இது அளவழித்தாண்டகம் அளவியற்றாண்டகம் என்ற
இருபகுப்பினையுடையது. தேவாரம் அருளிய மூவர் முதலிகளில்
அரசுகள் ஒருவரே திருத்தாண்டகம் என்னும் இந்தப் பண்ணுடைய
தேவாரப் பாக்கள் அருளியவர். இப்பாக்கள் பயில்வோரது
ஊனையும் உயிரையும் உருக்கி இறைவனுக்கு ஆளாந் தன்மையிற்
செலுத்தும் தன்மையிற் சிறந்து விளங்குவன. இதனால் இவர்க்குத்
தாண்டகவேந்தர் என்ற சிறப்புப் பெயர் வழங்கும். சதுரர் -
சதுரப்பாடு - வன்மை - உடையவர். அரசு - என்றது
தாண்டகத்தில் வல்லர் என்ற குறிப்பும் பற்றியது.

     அலர்புகழ் அரசு - எங்கும் பரவிய புகழினையுடைய
திருநாவுக்கரசர். இவரது புகழ் பரவி மக்களை ஆட்கொண்ட திறம்
"காண்டகைமை யின்றியுமுன் கலந்த பெருங் கேண்மையினார்",
"பொங்குகடற் கன்மிதப்பிற் போந்தேறு மவர் பெருமை, யங்கணர்தம்
புவனத்தி லறியாதா ரியாருளரே" என்ற அப்பூதிநாயனார்
புராணத்தாலும், பிறவாற்றாலுமறிக.

     கூட அங்கு எழுந்தருள - ஒன்றாகச் சேர்ந்து அங்குத்
திருக்கடவூருக்கு வந்தருள. இவ்விரு பெருமக்களும் இங்கு
எழுந்தருளிக் கூற்றுதைத்த பொன்னடிகளை வணங்கிக் கலயனாரது
திருமடத்தில் அமர்ந்து அவராற்பூசிக்கப்பெற்ற சரிதம் அவ்வவர்
புராணங்களுட் கூறப்பட்டன. திருநா - புரா -247ம் திருப்பாட்டும்,
திருஞான - புராணம் 533 - 536 திருப்பாட்டுக்களும் பார்க்க.
பரமாசாரியர்களான இவ்விரு பெருமக்களும் இரண்டாவது முறை
சந்தித்த செயல் திருப்புகலூரில் நிகழ்ந்தது. அங்கு நின்றும்
அவ்விருவரும் ஒன்று கூடிய தலயாத்திரை. செய்து
திருவம்பர்த்தலத்தை வணங்கிக்கொண்டு வரும் வழியில் இங்கு
எழுந்தருளித் தரிசித்தனர். இங்கு நின்றும் திருவாக்கூர், திருமீயச்சூர்
திருப்பாம்புரம் முதலிய தலங்களை வணங்கித் திருவீழிமிழலை
சேர்ந்தனர் என்பது சரிதம்.

     கூட எழுந்தருள - ஒன்றுகூடி வர. பெரியோர்களது
வருகையை இவ்வாறுபசரித்துக் கூறுதல் சைவமரபு. இப்பெரியோர்கள்
கூடிச்செய்த யாத்திரை வழிச்செலவில் இவர்கள் ஒன்றாகச் செல்லாது
அரசுகள்முன்னரும், அவரைப் பின்பற்றிப் பிள்ளையாரும்
செல்லுதலும் தலங்களிற் சேர்தலும் முறை. ஆயினும் இருவரும்
தலங்களைக் கூடித் தரிசித்துச் சென்றதனால் கூட என்றார். 32