864.
|
கருப்புவில்
லோனைக் கூற்றைக் காய்ந்தவர் கடவூர்
மன்னி
விருப்புறு மன்பு மேன்மேல் மிக்கெழும் வேட்கை
கூர
ஒருப்படு முள்ளத் தன்மை யுண்மையாற் றமக்கு
நேர்ந்த
திருப்பணி பலவுஞ் செய்து சிவபத நிழலிற்
சேர்ந்தார். 34 |
(இ-ள்.)
வெளிப்படை. கரும்பை வில்லாகவுடைய
மன்மதனையும் இயமனையும் தண்டித்த சிவபெருமான்
எழுந்தருளியிருக்கும் திருக்கடவூரிலே (கலயனார்) நிலையாக
வாழ்ந்து விருப்பம் பொருந்திய அன்பு மேன்மேலும் மிகுந்து
எழுகின்ற ஆசை அதிகப்படவே, ஒருப்படுகின்ற மனநிலை
உண்டாயினமையினால் தமக்கு நேர்பட்ட திருப்பணிவிடைகள்
பலவற்றையும் செய்து சிவனது திருவடி நீழலிற் சேர்ந்தனர்.
(வி-ரை.)
கருப்பு வில்லோன் - மன்மதன்.
கரும்பை
வில்லாகக் கொண்டவன் என்பது புராண வரலாறு. கரும்பு என்பது
கருப்பு என வன்றொடராய் நின்றது. சிவபெருமானது
ஆணையின்றி
வலிந்து உட்சென்று அவர் மேல் வலிந்த சேவகம் செய்தமையாலே
இவன் உடல் தீய்ந்து போகுமாறு காயப்பட்டான். பின்னர் உயிர்
பெற்றும் உருவிழந்து விகாரப்பட்டான் என்ற குறிப்புப்பெற
மென்றொடர் வன்றொடராய் விகாரமாயிற்று.
வில்லோனைக்
காய்ந்தவர் - தீக்கண்ணினாற் பார்த்து
வேவச் செய்தவர். காய்ந்தவர் - என்பது
இங்கு அனலால்
வேவித்தவர் என்ற பொருளில் வந்தது.
கூற்றைக்
காய்ந்தவர் - காலனைச் சினந்து உதைத்துத்
தண்டித்தவர்.
கருப்பு
வில்லோனைக் கூற்றைக் காய்ந்தவர் என்ற
குறிப்பினால் இவரை வழிபட்டதனால் கலயனாரும், தம்மையும்
மனைவி மக்கள் சுற்றம் என்ற தொடர்புகளையும் பற்றுகின்ற பந்த
பாசமாகிய காமங்களை ஒழித்த நிலையிற் கருப்பு வில்லோனைக்
காய்ந்த நிலை பெற்றனர்; மரணத்தின் நீங்கிப் பிறவாநெறி
பெற்றமையாற் கூற்றைக் காய்ந்த நிலையும் பெற்றனர் என்ற
குறிப்பும்பெற இந்த இரண்டு வீரங்களையும் பற்றி இங்குக் கூறினார்.
விருப்புறும்
அன்பு - இது நமது கடமை
என்பதனோடமையாது விருப்பம் பொருந்திய அன்பு.
மேன்மேன்
மிக்கெழும் வேட்கைகூர - வேட்கை -
ஆசை. மேன்மேல் - மிக்கு எழும் - கூர என
மூன்று
முறைபெறக் கூறியது ஆசை எழுச்சியின் மிக்க வேகங்குறித்தற்கு.
ஒருப்படும்
உள்ளத்தன்மை - விருப்பமும் அன்பும்
ஆசையும் கூறிப் பிறிதொன்றிலும் செல்லாது சிவன் றிருவடி
ஒன்றிலே சென்ற மனநிலை. உண்மையால் -
இருந்தபடியினாலே.
தமக்கு
நேர்ந்த திருப்பணி பலவும் - அவ்வாறு
மிககெழுந்த ஆசைக்குத் தக்கபடி கிடைத்தனவாகிய
அரன்பணிகளும் அடியார் பணிகளும். பலவும் -
பலதிறப்பட்டவைகளையும். குங்குலியத் தூபமேந்துதலாகிய
அரன்பணியினையும், இனிய அமுதூட்டுதலாகிய அடியார்
பணியினையும் நித்த நியதியாகச் செய்து வந்த கலயனார், அன்பும்
விருப்பமும் ஆசையும் மிகவே அத்தகைய பிறபணி பலவும்
சிறப்பாகச் செய்தனர் என்பதாம். அவை, திருவிழாச் செய்து
சேவித்தலும், பிறரைச் செய்வித்தலும் முதலாகிய அரன்பணிகளாம்.
அடியார்க்கு அமுதளித்தலோடு, அந்த அணி, மணி, பொன்
முதலாக அவர் வேண்டுவனவற்றை அளித்தலும், அவர் வினவழி
நிற்றலும், பிறவும் அடியார் பணிகளாம்.
சிவபதநிழலிற்
சேர்ந்தார் - சிவபதமாவது சிவனதருளின்
நிறைவு - அஃதாவது அவனதருட்சத்திவியாபகம்.
பிறவிவெப்பத்தினின்றும் நீங்கிக் குறிர்விப்பதனால் இதனை
அடிநிழல் என்பது மரபு. 308-ல் தண்மை -
என்றதற்கும், 489-ல்
கழல் நீழல் என்றதற்கும் உரைத்தவை பார்க்க.
பதநிழலிற்
சேர்தலாவது - அருள் நிறைவுக்குள் அடங்கி
நிற்றல். "பிணிமேய்ந்திருந்த, விருகாற் குரம்பை யிதுநா னுடைய
திதுபிரிந்தாற், றருவா யெனக்குன்றிருவடிக் கீழோர் தலைமறைவே"
என்ற திருவிருத்தக்கருத்தும் உன்னுக. 34
|