865.
|
தேனக்க
கோதை மாதர் திருநெடுந் தாலி மாறிக்
கூனற்றண் பிறையி னார்க்குக் குங்குலி யங்கொண்
டுய்த்த
பான்மைத்திண் கலய னாரைப் பணிந்தவ ரருளி
னாலே
மானக்கஞ் சாறர் மிக்க வண்புகழ் வழுத்த
லுற்றேன். 35
|
(இ-ள்.)
வெளிப்படை. தேனலர்ந்த மலர்மாலை பணிந்த
மனைவியாரது திருநெடுந்தாலியைக் கொடுத்து, வளைந்த
குளிர்ச்சியுடைய பிறைச்சந்திரனைத் தலையிற்சூடிய இறைவருக்கு
ஏற்ற குங்குலியத் தூபத்திருப்பணி முட்டுப்படாது செலுத்திய
பான்மையும் திண்மையும் உடைய கலயனாரைப் பணிந்து, அவரது
அருளின் துணையினாலே, மானக்கஞ்சாற நாயனாரது மிக்க
வண்மையுடைய திருத்தொண்டினை துணையினாலே, மானக்கஞ்சாற
நாயனாரது மிக்க வண்மையுடைய திருத்தொண்டினை இனித்
துதிக்கத் தொடங்குகின்றேன்.
(வி-ரை.)
தேன்நக்க - மலர்கள் அலரும் பருவத்தின் தேன்
சொரியும். அப்போது அவை நகுவன போன்றிருக்கும் என்பது
உபசாரவழக்கு. "முருகுயிர்க்க நகைக்கும் பதத்தி னுடன்பறித்த,
அலகின் மலர்கள்" (முருகர் புரா - 7) என்றதும், "நன்றுநகு
நாண்மலரால்" (பழந்தக்கராகம் - திருஞான - தேவா - கோளிலி
- 3) என்றதும் பிறவும் காண்க.
கோதை
மாதர் - மலர்மாலையணிந்த அம்மையார் -
கலயனாரின் மனைவியார்.
திருநெடுந்தாலி
- தாலியை நாணினின்றும் எடுத்துக்
கொடுத்தனரேனும் அஃது இடையறாது நீளும் மங்கலத்துக்குக்
காரணமாயிற் றென்பார் தேனக்ககோதை -
என்றும், திரு -
என்றும், நெடு - என்றும் கூறினார். நெடுமை
- நாணினின்று
பிரிந்த காலத்தும் பின்னரும் நீண்டு நிகழ்ந்த மங்கலத்துக்கும்,
அருட்செல்வம் பொருட் செல்வங்களாகிய பெருஞ் செல்வப்
பேற்றுக்கும், உடல் பேணத்தந்ததுவே உயிரைப் பேணுதற்கு உதவிய
சிறப்புக்கும் காரணமாயினமை குறித்தது. மாறி -
பிரதியாகக்
கொடுத்து. பண்ட மாற்று - என்ற வழக்கும்
காண்க.
கூனல்தண்
பிறையினார் - கூன் - முதுகுவளைந்த
நிலை -
உள்வளைவு. "கூனற்றிங்கட் குறுங்கண்ணி" (செவ்வழி - நாகை - 1)
என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரங்காண்க. "வள்வாய
மதிமிளிரும்" (கானாட்டு முள்ளூர் 1) என்ற நம்பிகள்
தேவாரமுமிக்கருத்துப் பற்றியது. தண்மை - நிலாவின்குணவியல்பு.
பிறையினார் - பிறையைச் சூடியவர் - சிவபெருமான்.
உய்த்தல்
- செலுத்துதல். தாம் செய்துவந்த
தூபத்திருப்பணியும் அடியார்பணியும் முட்டுப்படாதுசெலுத்திய
என்க. உய்த்தலுக்குச் செயப்படுபொருள்வருவிக்க.
பான்மை
- இங்கு அன்பின்தன்மை குறித்தது. திண்மை -
மனஉறுதிப்பாடு. கேடுகளிலும் மனம்மாறாது ஒருப்பட்ட உள்ளத்தின்
வலிமை. "ஆளுடையாரடியவர்தந் திண்மை யொழுக்கநடை
செலுத்தி" (496) என்றது பார்க்க.
பணிந்து
அவர் அருளினாலே - பணிந்ததனாற் பெற்ற
அவரது திருவருளினால் மானக்கஞ்சாரர் வண்புகழ் வழுத்தப்
புகுதற்கு அருட்டுணை வேண்டியிருத்தலின் கலயனாரது திண்ணிய
அருள் அதற்குத் துணைசெய்யும் என்பதாம்.
மானக்கஞ்சாறர்
- கஞ்சாறு என்ற தலத்தில் அவதரித்து
வாழ்ந்த பெரியார் ஆதலினால் இப்பெயர் பெற்றார்.
இளையான்குடிமாறர் என்ற பெயர் காண்க. மானம் - பெருமை.
மிக்கவண்புகழ்
- வண்மை - கொடை - வள்ளற்றன்மை.
மிக்க கொடையினாற்போந்த புகழ். இங்கு வண்மை -
அடியார்கள்
விரும்பியது கொடுத்தலின்மே னின்றது. இஃது இவர் சரித
உள்ளுறையாம். இவ்வாறு குறிப்பினால் சரித உள்ளுறை கூறித்
தொடங்கிக் காட்டிய ஆசிரியர் இதனையே "ஒரு மகள் கூந்தல்
தன்னை வதுவைநா ளொருவர்க் கீந்த, பெருமையார்" (902) என்று
இவ்வண்மையாவது இது என்று இப்புராண முடிவில்
முடித்துக்காட்டியதிறமும் காண்க.
புகழ்
வழுத்தல் உற்றேன் - சரிதமுற்றும் சொல்லவல்லேனல்லேன்; அவரது வள்ளன்மையாற்
பேரந்த
திருத்தொண்டினைத் துதிக்கின்ற மட்டில் அமைவேன் என்றதாம்.
புகழ் - அதனையுடைய தொண்டற்காயிற்று. ஆகுபெயர்.
இப்பாட்டு கவிக்கூற்று.
"தாலி மாறிக் குங்குலி யங்கொண்டு"
"உய்த்த" என்றவற்றால் இதுவரை கூறிவந்த இச்சரித முழுதும்
வடித்து முடித்துக்காட்டி, இனி வரும் சரிதத்துக்கு "வண்புகழ்"
என்று தோற்றுவாய் செய்தனர். இது ஆசிரியர் மரபு. 35
|