866. |
மேலாறு
செஞ்சடைமேல் வைத்தவர்தாம் விரும்பியது
நூலாறு நன்குணர்வோர் தாம்பாடு நோன்மையது
கோலாறு தேன்பொழியக் கொழுங்கனியின்
சாறொழுகுங்
காலாறு வயற்கரும்பின் கமழ்சாறூர் கஞ்சாறூர். 1
|
866.
(இ-ள்.) கோல்ஆறு தேன்பொழிய - (தேன்
கூடுகள்
கட்டப்பட்ட) கொம்புகளின் வழியே கோற்றேன் பொழிய
(அத்தேன்கள் பலவும் கூடுதலால்); கொழும் கனியின் சாறு
ஒழுகுங்கால் - கொழுத்து வினைந்த பழங்களின் சாறு ஒழுகும்
வாய்க்கால் போலச் சேர்ந்த ஒழுக்கு; வயற்கரும்பின்சாறு ஆறு கமழ்
ஊர் - வயலில் விளைந்த கரும்பின் சாறுபெருகிய ஆற்றினைக் கூடி
அதனை மணஞ்செய்யும் ஊராகிய; கஞ்சாறூர் - கஞ்சாறூரென்பது;
மேல் ... விரும்பியது - ஆகாய கங்கையைச் சிவந்த சடையின் மேல்
வைத்த சிவபெருமான் விரும்பி எழுந்தருளியிருப்பதும்; நூல் ...
நோன்மையது - (தமிழ்) நூல்களை நெறியானே நன்குணர்ந்த
நாவலர்களாலும் பாடிப் புகழப்படும் விழுப்பமுடையதும் ஆம்.
(வி-ரை.)
மேல்ஆறு என்றது பிறநதிகள் போலக் கீழ்
முகமாக வராமல் மேன்முகமாக விண்ணினின்றும் வருதல் குறித்தது.
மேல் - மேன்மை எனக்கொண்டு மேன்மையுடைய ஆறு
என்றலுமாம். இதன் மேன்மையாவன ஆறுகளில் முதலில்
வைத்தெண்ணப்படுதல், தூயதாதல், கேடில்லாமை,
தன்னுட்படிந்தாரைத் தூயராக்குதல், கயிலையில் எழுபெருந்
தீர்த்தங்களில் ஒன்றாதல், சிவபெருமான் றிருமுடியில்
வைக்கப்பெறுதல் முதலியனவாம்.1
நூல்
ஆறு - நிலம் - நாடு - நகரம் - குடி -
முதலியவற்றின் சிறப்பியல்புகளைக்கூறும் இலக்கண இலக்கிய
நூல்களை முறையாலே. இரண்டனுருபும் மூன்றனுருபும்
விரித்துரைக்க. ஆறு - நெறி - முறைமை.
நன்கு
உணர்வார் தாம்பாடும் நோன்மை - முறையாக
வுணர்ந்த பெரும் புலமையோர்களும் பாடிப்புகழும் பெருமை.
நூலாறு நன்குணராதார் நோன்மையில்லாத வழியும் பாடுவராதலால்
அவர்கள் பாடும் சிறப்புக்கள் பெருளாகக் கொள்ளப் படா என்பதும்
குறிப்பாலுணர்த்தப்பட்டது. "இறைவன் பொருள் சேர் புகழ்" என்ற
திருக்குறளுக்கு, "இறைமைக் குணங்களிலராயினாரை
உடையரெனக்கருதி அறியாதார் கூறும் கூற்றுப் பொருள்சேரா
வாகலின் - இறைவன் புகழே பொருள்சேர் புகழ் எனப்பட்டது"
என்று ஆசிரியர் பரிமேலழகர் உரைத்ததனை இங்கு நினைவு
கூர்க. இந்நோன்மைகளை ஆசிரியர் மேல்வரும் 867 - 871 வரை
ஐந்து திருப்பாட்டுக்களில் தமது குறியின்படி விளக்குதலும்,
இவையே நன்குணர்வோராற் பாடத்தக்கன - பிற பாடத்தகாதன
என்பதைக் குறிப்பாலுணர்த்துவதும் காண்க.
நூல்
ஆறு நன்குணர்வோர் - சுந்தரமூர்த்திகள் முதலிய
பெரியோர்கள். இவ்வூரின் நோன்மை - "கங்சனூர்
கஞ்சாறு
பஞ்சாக்கையும் கயிலாய நாதனையே காணலாமே" என்று
க்ஷேத்திரக் கோவைத் திருத்தாண்டகத்தில் வைத்து அப்பர்
சுவாமிகள் பாடியருளிய தேவார வைப்புத்தலமாதலாலும்
அறியப்படும். நூலாறு நன்குணர்வோரிற் றலைசிறந்தோராகிய
ஆசிரியர் சேக்கிழார் பெருமானாற் பாடப்படும் நோன்மையும்
சிறக்க ஈண்டு நாம் கருதத்தக்கதாம்.
1இக்கங்கை விஷ்ணு
பாதத்திலிருந்து வருகின்றதென்றும்
அதனைச் சிவபெருமான் சிரத்தில் ஏற்றனர் என்றும் சிலர்
கூறித்திரிவர். அது பகுத்தறிவில்லார் கூற்றாகும். இவையிரண்டும்
வெவ்வேறு பொருளன. "பாதங்கணீரேற்றார்" என்ற பந்தண
நல்லூர்த் திருத்தாண்டகத்தை இப்பொருள்படச் சிலர் தவறாக
எண்ணுகின்றனர். இத்திருப்பாட்டுக்குத், தம் பாதங்களில்
அன்பர்களது கண்ணீரருவியை ஏற்று அருள்பவர் (பாதம் -
கண்ணீர் - ஏற்றார்) என்பது பொருள். "அன்பர் வார்ந்தகண் ணருவி
மஞ்சனசாலை (சாட்டியக்குடி - 2) என்ற கருவூர்த்தேவர்
திருவிசைப்பாக் காண்க. பாதங்களிலே கண்ணை ஈர்ந்து சாத்திய
விட்டுணுவாகிய இடப எற்றினையுடையவர் (பாதம் கண் ஈர் ஏற்றார்)
என்றலுமாம்.
கோல்ஆறு
..... கமழ்சாறு ஊர் - சிறு கொம்புகளில்
ஈட்டிய கோற்றேன்கள் நிறைந்து கூடுகிழிய, அத்தேன்
அக்கொம்புகளின் வழியே மெல்லவழிந்து பொழிந்தன.
அத்தேனொடு அக்கொம்புகளிற் பறிப்பாரின்றிப் பழுத்துக்
கொழுத்து வெடித்த கனிகளின் சாறு ஒழுகிக் கூடின. தேன்,
கனமுடையதாய் இளகி வழிவதாதலின் கீழே விழாமல் கொம்புகளின்
வழியே வழியும் தன்மையால் தேன் கோலாறு பொழிய என்றார்.
கொழுங்கனியின் சாறு தேனிலும் சிறிது அதிகமாகிய
இளக்கமுடையதாய்ச் சொட்டவும் விரைந்து ஒழுகவும் கூடியதாதலின்
சாறு ஒழுகும் என்றார். "வரம்பில்வளர் தேமாவின்
கனிகிழிந்த
மதுநறுசெய், நிரந்தரநீ ளிலைக்கடையால் ஒழுகுதலால்" என்ற
(திருஞான - புரா 7)தும், "முக்கனியின் நாறொழுகிச் சேறுலரா ...
முது குன்றமே" என்ற (ஆளுடைய பிள்ளையார் தேவா)தும் காண்க.
மெல்லப் பொழியும் தேனுடன் அதனினும் விரைந்து ஒழுகும்
கனியின் சாறு கூடிடவே இரண்டும் சேர்ந்து கால்வாய்போல ஒடின.
கரும்பின்
சாறு ஆறு - கருப்பஞ்சாறு இவ்விரண்டினும்
மிக்க நீர்போல ஓடும் தன்மையுடையதாதலின் அதனை ஆறு
என்றார். "கட்டிக்கால் வெட்டித்தீங்கரும்பு தந்த பைம்புனல்
காலேவாரா மேலேபாய் கழுமலவளநகரே" (திருஞான தேவா -
திருத்தாளச்சதி - 10) பார்க்க.
கரும்பின் சாறு
ஆறாகப் பெருக, அந்த ஆற்றினுள்
மேற்கூறிய தேனும் கனிச் சாறும் கூடிய கால்வாய் வந்து சேர்ந்து
அதனைத் தேன் மணமும் கனிகளின் மணமும் கமழச்செய்தது
என்பதாம். சிீறு கால்வாய்கள் ஆறுகளிற் கூடுவதும் அவற்றால்
ஆறு வளம் பெறுவதும் ஆகிய இயற்கையிற் காணப்படும்
உண்மையினையும் இங்கு வைத்துக் காண்க. இதனால் இந்நாடு
ஆற்றின் வளமுடைய மருதநிலத்தின்பாற் பட்டதென்பதும், மருதக்
கருப்பொருள்களாகிய சோலைகளும் கனிகளும் கரும்புகொழுத்துச்
செழித்து விளையும் வளமுடையதென்பதும் பிறவும் அறிவிக்கு
முகத்தால் ஆறு, நாடு, நிலம், நகர், பொருள், குடி முதலிய பல
சிறப்புக்களையும் இவ்வொரு பாட்டின் ஒரு பகுதியிற் பெறும்படி
அமைத்த இலக்கியச் சுவையும் கவிநயமும் குறிக்கத்தக்கன. நூலாறு
நன்குணர்வோர் தாம்பாடும் நோன்மைக்கு இவையே
எடுத்துக்காட்டாய் விளங்கும் தன்மையும் காண்க.
கமழ்சாறூர்
கஞ்சாறூர் - நாயன்மார்களது திருத்தலப்
பெயர்களைச் சந்தம்பெற அமைத்து அணிபடுத்திச்சொல்வது
ஆசிரியரது மரபுகளில் ஒன்று. "தெய்வநெறிச் சிவம்பெருக்கும்
திருவாமூர் திருவாமூர்" (திருநா - புரா 12), "எய்தும் பெருமை
யெவ்வுலகு மேறூ ரேமப் பேறூரால்" (நமிநந்தி - புரா - 1),
"மறைத்திரு வாக்கூ ராக்கூர்" (சிறப்புலி - புரா - 1), உள்ளுறையூரா
முறையூர் (புகழ்ச்சோழர்-புரா-1) "செல்ல நீடூர் திரு நீடூர்" (முனை -
புரா - 1) முதலியவை காண்க. இப்பாட்டிலும் வரும் பாட்டுக்களிலும்
ஆசிரியர் இச்சரித நிகழ்ச்சியின் குறிப்புப்பட நாடு நகரங் குடிவளம்
முதலியவற்றைக்கூறும் சுவை கருதுக.
மேலாறு
செங்சடைமேல் வைத்தவர் தாம் விரும்பியது
என்பது "வேண்டுதல் வேண்டாமை" யில்லாராய், ஒரு பொருளையும்
விரும்பாத இறைவர், பிறர் எவரும் விரும்பாத தலையிற் கழித்த
மயிரை "இவள் தன் மயிர் நமக்குப் பஞ்சவடிக்கு ஆம்" என
விரும்பிய சரிதம் குறிப்பது. "தலையின் இழிந்த மயிரணையர்" எனத்
திருவள்ளுவனார் இதனை ஒழுக்க இழிவுக்கு உதாரணமாகக்
கூறியவாறு தலையினின்றும் கழித்த மயிர் பண்புடைய மக்கள்
விரும்பார். மனிதர் கழித்த மயிரையும் விலைப்படுத்தவும் முடியாகத்
தலைக்கு மகளிர் கொண்டு முடிக்கவும் உள்ள வழக்கம் நாகரிகம்
என்னும் அநாகரிகக் கோரங்களின் ஒன்றாதலின் அது வீதியும்
ஆன்றோரொழுக்கமும் ஆகாது. தாம் விரும்பியது என்றதனால்
அவர் தாமேயன்றிப் பிறர் விரும்பாதது என்ற
தொனியும் காண்க.
இவ்வாறு விரும்பிய
இச்சரித நிகழ்ச்சியே மக்கள் துதித்து
வாழ்வடையும் பெருமையுடையதாயிற்று என்பதும் உன்னுக.
கோலாறு
(தேன்வழிந்து) பொழிவது - இச்சரிதத்தில்
"முலை நனைமுகஞ்செய் முதற்பருவ நண்ணினளப் பெண்ணமுதம்
(879) என்ற நாயனாரது மகளாரையும், கொழுங்கனியின்
சாறுஒழுகி அத்தேனொடு கலக்கும் கால் என்றது
அங்கு
அவ்வம்மையாரை மணக்க வரும் ஏயர்கோனாரையும், வயற்
கரும்பின் சாறுஆறு என்றது அவ்விருவரின் திருமண
நிகழ்காலையில் இறைவன் நேரே வெளிப்பட்டு வந்து, "எழும்பரிவு
- புவனங்களில் ஏறச்செய்"யும் அன்பின் பெருக்கினையுடைய
நாயனாரையும் குறிப்பாலுணர்த்துவது காண்க. இவ்வம்மையாரது
இன்ப அன்பின் பெருமை எயர்கோனார் புராணத்துட் கண்டு
கொள்க.
கமழ்சாறூர்
- சாறு விழாவுக்கு பெயராதலின்
அக்குறிப்பினால் மணவிழா வினையும் (884 - 885), அதில்
இறைவன் தோன்றிச் செய்யும் பேரருளினையும் உணர்த்துவதும்
கருதுக. "சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி" என்பது
திருமுருகாற்றுப்டை.
இக்கருத்தினைத்
தொடர்ந்தே மேல்வரும் பாட்டில்
"தண்ணீர்மென் கழுநீர்" என்றது நாயனாருக்கும் (867),
ஏயர்கோனார்க்கும் (900 - 901) இறைவர் செய்த திருவருளினையும்,
கழுநீர்க்குத் தடஞ்சாலி தலைவணங்குதல் இறைவரைப் பணிந்து
போற்றிய நாயன்மா ரிருவரையும், குறிப்பாலுணர்த்துதலும் காண்க.
கழுநீர் அருட்டிரு நோக்கத்தினை உணர்த்துவது, "பைங்குவளைக்
கார்மலரால் ... எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த"
என்ற திருவெம்பாவையாலுணர்க. மேலும், புயல்காட்டும் கூந்தல்
(868) என்றது அம்மையாரின் மஞ்சுதழைத் தெனவளர்ந்த
மலர்க்கூந்தலையும் (894), நெற்கதிர் கமுகின் மிடறுரிஞ்சிக்
குலையினை வளைத்து அரிவதொக்கது (869) என்று கூறும் பொருள்
அம்மையாரின் கூந்தலை அடற்சுரிகையினால் அடியில் அரிந்து
கொடுத்த (895) இச்சரிதத்தின் அருஞ்செயலையும், நகர அணிகள்
(870) மணத்திருவிழாவின் அணிகளையும் தொடர்ந்து
குறிப்பாலுணர்த்துவதும் காண்க.
இவ்வாறே அவ்வச்சரிதங்களின்
உணர்ச்சி வயமாகிய கண்
கொண்டு, நாடு - நகர் முதலிய இயற்கைப் பொருள்களையும்
பிறவற்றையும் அங்கங்கும் கண்டு காடடிப் போதல் ஆசிரியரது
சிறப்பியல்புகளிலொன்றாம். திருஞானசம்பந்தநாயனார் புராணம் (7),
திருநாளைப்போவார் புராணம் (2), நமிநந்தியார் புராணம் (3),
திருநாவுக்கரசர் புராணம் (6), திருநீலநக்கர் புராணம் (3) முதலிய
பல விடங்களையும் சிந்திக்க.
கஞ்சாறூர்
- கஞ்சாறு என்ற பெயர் பெற்ற ஊர்.
தலவிசேடம் பார்க்க. 1
|