867. கண்ணீலக் கடைசியர்கள் கடுங்களையிற்
                        பிழைத்தொதுங்கி
உண்ணீர்மைப் புணர்ச்சிக்க ணுறைத்துமலர்க்
                        கண்சிவக்குந்
தண்ணீர்மென் கழுநீர்க்குத் தடஞ்சாலி
                        தலைவணங்கும்
மண்ணீர்மை நலஞ்சிறந்த வளவயல்க
                        ளுளவயல்கள்.   
   2

     (இ-ள்.) கண் ... ஒதுங்கி - நீலமலர் போன்ற
கண்களையுடைய பள்ளப்பெண்களாற் களையப்படுகின்ற களைகளில்
தப்பி ஒரு புறம் ஒதுங்கி; உள் நீர்மை ....... உறைத்து - நீர் உள்ளே
புணர்ந்ததனாற் செழித்து நின்று; மலர்க்கண் ... கழுநீர்க்கு -
பூவின்கட் சிவப்பு ஏறிக்காட்டுகின்ற தண்ணீர்ப் பூவாகிய மெல்லிய
செங்கழுநீர்ப் பூவினுக்கு; தடஞ்சாலி தலைவணங்கும் - பெரிய
நெற்கதிர்கள் சாய்ந்து வணங்குகின்ற; மண் நீர்மை ... அயல்கள் -
மண்ணும் நீரும் என்ற இருவகை வளமும் சிறந்து காட்டும்
வளப்பமிகுந்த வயல்கள் அப்பக்கங்களில் உள்ளன.

     (வி-ரை.) அயல்கள் - கஞ்சாறூரின் புறத்தே - பக்கங்களில்
வயல்கள் நகரங்களை அடுத்து அவற்றின் புறத்தில் உள்ளன. இது
மருதப்பணைகளின் இயல்பு. வயல்களில் நெற்பயிர்கள் இருந்தன.
களை களையும் பதத்தில் அப்பயிரிற் கடைசியர்கள் களை
பறித்தனர். கழுநீர், நீலம், தாமரை, முதலியனவும் அங்கு
முளைத்திருந்தமையால் அவற்றையும் கடைசியர் பறித்தெறிந்தனர்.
அவற்றுள் ஒரு சில செங்கழுநீர்க் கொடிகள் சாய்ந்து ஒதுங்கி
அவர்களது களைபறிப்புக்குத் தப்பின. அவை பின்னர் நீர் ஏற
நிமிர்ந்து தமது சிவந்த பூக்கள் பூத்தன. இக்காலத்துக்குள் நெல்லும்
உயர்ந்து கதிர் விட்டு முதிர்ந்து காய்த்துச் சாய்ந்தன. அத்தோற்றம்
அச்செங்கழுநீர்க்கு, நெல், தலை வணங்குதல் போன்றிருந்தது
என்பது கருத்து.

     இத்திருப்பாட்டில் தன்மைநவிற்சி, தற்குறிப்பேற்றம் முதலிய
பொருளணிகள் பலவும், சொற்பின் வருநிலை இரட்டுறமொழிதல்
முதலிய அமைதி பலவும் குறிப்பாகிய உள்ளுறையணிகள் பலவும்
ஒருங்கு விரவிய பேரழகு கண்டுகளிக்க.

     நீலக்கண் கடைசியர் என மாற்றுக. கடும் - உழவு மரபு
வழக்கு. நீலக்கண் - என்றது அஃது அவர் கண்களுக்குப்
பகையாய் மிளிர்வனவாதலின் களையப்பட்டது என்ற குறிப்பும்பெற
நின்றது. இனம்பற்றி வாய்க்கும் முகத்துக்கும் உவமிக்கப்படும்
ஆம்பல் தாமரை முதலியனவும் உடன்களையப்பட்டன என்பதும்
கொள்க.

     பிழைத்து ஒதுங்கி - கைத்தவறுதலினால் தப்பி ஒருபுறம்
சாய்ந்து ஒதுங்கி. பிழைத்து - பிழைத்தலின் - தவறாகக் களையாது
விடுதலின் என்க. இரட்டுறமொழிதலால் உயிர் தப்பிப் பிழைத்து
என்றுரைக்கவும் நின்றது.

     ஒதுங்கிப் பிழைத்து - எனமாற்றிப் பெரும்பகை
வந்தபோது ஒருபுறம்ஒதுங்கி உயிர்தப்பிப் பிழைத்தல் ஓர்
உலகியல்பாதல் போலச் சில கழுநீர்க் கொடிகள் உயிர்தப்பிப்
பிழைத்தல் ஓர் உலகியல்பாதல் போலச் சில கழுநீர்க்கொடிகள்
ஒதுங்கிப் பிழைத்தன என்று தற்குறிப்பேற்றம் பெறவும் உரைத்துக்
கொள்க.

     உள்நீர்மைப் புணர்ச்சிக்கண் உறைத்து - ஒதுங்கித்
தளர்ந்த கொடி அந்நிலையில் வேரூன்றித் தழைத்து உள்ளே
நீர்த்தன்மை கூடியதனால் உறுதி பெற்று நின்று. ஒதுங்கி நிலை
பிறழ்ந்த கொடி மரங்களாயின் பிழைத் தொதுங்கியவை நீர்
மிகுதியும் புணர்ந்தபோது அழுகிச்சாகும். நீரில்லாத வழியும் சாகும்.
இக்கழுநீர்க்கொடி நீரினுள் விளைவதாதலின் உள்நீர்ப்
புணர்ச்சியினால் வேரூன்றித் தளர்வு நீங்கி உறைத்ததென்பது.
புணர்ச்சிக்கண் - கண்
- ஏழனுருபு.

     மலர்க்கண் சிவக்கும் - மலரினிடத்துச் சிவப்புநிறம்
ஏறுகின்ற. கொடி இலை முதலியவற்றால் நிறம் வெளிப்படையாக
அறியவாராது மலரினிறத்தால் இனம் அறிய நிற்பது செங்கழுநீர்.
தண்நீர் மென் கழுநீர் - குளிர்ச்சியாலாகியதண்மையும் -
மென்மையுமுடைய செங்கழுநீர்ப்பூ. தண்நீர் - நீர் - நீர்மை -
தன்மை.

     தடஞ்சாலி - அதுவரை தாளுரம்பெற்று நிமிர்ந்து நின்ற
வலிய நெல்லின் பயிர். தலை வணங்கும் - கதிருள்ள நுனி
வளைந்து காட்டும். வணங்குதல் - வளைதல் குறித்தது. நெற்கதிர்
விளைந்து சாய்வதனைத் தற்குறிப்பேற்றம் பெறத் தலைவணங்கும்
என்றார். தலைவணங்குதல் - ஒரு சொல்லாக - வணக்கம்
குறித்தது என்க. தலை - நுனி - நுனியிலிருக்கும் கதிர் என்ற
பொருளும், தலையால் வணங்குதல் என்ற பொருளும் பட நிற்பது
காண்க. களைகட்ட பின் இரண்டுமாத அளவில் நெற்கதிர் விளைந்து
சாயத்தொடங்கும். இதற்குள் கழுநீரும் வேரூன்றிப் பூத்தது என்பது.
இதனையே கழுநீர் கண்சிவந்தது எனவும், அதுகண்டு நெல்
தலைவணங்கிற்று எனவும் தற்குறிப்பேற்றமும் நாடகச்சுவையும் படக்
கூறினார்.

     கழுநீர் உள்நீர்மைப் புணர்ச்சிக்கண் உறைத்த
தலைவியாகவும், உறைத்து என்றதனைப் புணர்ச்சியை உள்
நீர்மையாகக் கொண்டு அத்தலைவி (புணர்ச்சியின்பத் தன்மையை
அகத்துட்கொண்ட) ஊடுதல் குறித்ததாகவும், கண்சிவக்கும்
என்றதனை அவ்வூடலினாற் கோபக்குறியாகக் கண்சிவத்தல்
குறித்ததாகவும், தடம் சாலி தலைவணங்கும் என்றதனைச் சாலி
என்ற தலைவன் தான் வலியோனாயினும் தலைவியின் ஊடல்
தீர்க்கத் தலைவியை வணங்கும் செய்கை குறித்ததாகவும்,
உருவகமும் தற்குறிப்பேற்றமும் கொண்ட கலவையணியாகவும்
கொண்டு அகப்பொருட்டுறைக் கருத்துப்பட விரித்துரைத்துக்
கொள்க. கண் சிவத்தல் - வணங்குதல் எனும் இவை முறையே
இவற்றின் மெய்ப்பாடுகளாம். பயன் - உவகை. புணர்ச்சியிற்
கண்சிவத்தல் உளதாம் என்றதோர் இயல்பும் காண்க. "உன்நலங்
கருதி எங்களைக் களைந்தனர்; அதில் உன் உதவியின்றியே
ஒதுங்கிப்பிழைத்தேன்; இன்று என்னுடன் உனக்கு என்ன உறவு"
எனக் கழுநீர் உரைப்பனபோன்றன என்பது கண் சிவத்தலின்
கருத்தாகிய தற்குறிப்பேற்றம்; பிழையுடன்படுவது போலச் சாலி
தலைவணங்கிற்று என்பது அவ்வணக்கத்தின் கருத்தாகிய
தற்குறிப்பேற்றம் என்றலுமொன்று. இவை உலகநூற் பொருள்
தழுவிய கருத்துக்கள்.

     இனி, அறிவனூற் பொருளாகிய மேம்பட்ட பிறிதொரு
பொருளும் இங்குப் புலப்படுதல் குறிக்கத்தக்கது. கழுநீர் என்பது
உயிர்களை ஆட்கொண்டு உய்விக்கும் ஆசாரியர் அணியும்
திருவடையாள மாலையினையும் அருள் பொதிந்து விளங்கும்
அவரது திருநோக்கத்தையும் உணர்த்துவது எனவும், கழுநீர்க்குச்
சாலி தலை வணங்குதல்,
"பத்தியின்பால் முதிர்தலை வணங்கி
மற்ற, வித்தகர் தன்மை போல விளைந்தன சாலி" (72) என்றபடி,
இறைவனது அருள் நோக்கம் பெற்றவுடனே, முன்னர் ஆணவத்தால்
தலைநிமிர்ந்து நின்ற உயிர் அத்தன்மை மடங்கித் தலைவணங்கின
தன்மை யுணர்த்துவது எனவும் வருவதோர் மெய்ஞ்ஞானப்
பொருட்குறிப்பும் கண்டுகொள்க.

     இனி, இச்சரிதத்தினை ஒட்டிச் சாலி இங்கு உழவராகிய
நாயனாரையும், கழுநீர் அவர்பால் அருட்கண் சேர்த்தி
ஆட்கொண்டு அவரது அன்பின்றிறத்தினை உலகமறியச்
செய்யவரும் இறைவரையும் குறிப்பால் உணர்த்தியன எனவும், உள்
நீர்மை......சிவக்கும்
என்றது, "சேலுங் கயலுந் திளைக்கும் கண்ணா
ரிளங்கொங்கையிற் செங்குங்குமம், போலும் பொடியணி
மார்பிலங்கும் என்று "நாயகிநாயகத் தன்மையிற் புணர்ந்து
பேரின்பமளிக்கும் அருட்பார்வை குறித்தது எனவும், கழுநீர்க்குத்
தலைவணங்கும்
என்றது அவ்வருட்பார்வையில் வசீகரிக்கப்பட்ட
நாயனார் அவர் திருப்பாதங்களில் வணங்கி அவர்
வேண்டியதெல்லாங் கொடுக்க நிற்பதனைக் குறித்தது எனவும்
இச்சரிதப் பொருள் காட்டும் உட்குறிப்புடன் விளங்குவதும்
காணத்தக்கது.

     மண் நீர்மை - மண் - மண்ணுகின்ற - கழுவுகின்ற -
மாசு போக்குகின்ற; நீர்மை - நீரின் தன்மை எனக்கொண்டு
இவ்வயல்களிற் காணப்படும் இத்தோற்றங்களின் உட்குறிப்பினை
உணர்ந்தால் அவ்வுணர்ச்சிதானே அவ்வாறுணர்வோரின்
ஆணவக்கறையை மண்ணும் - கழுவும் தன்மை என உரைக்கவும்
நின்றது. "கடல்பெரிது மண்ணீருமாகாது" என்ற நீதி நூலும் காண்க.

     வளவயல்கள் - மண்ணும் - நீரும் என்ற இருவளனும்
பொருந்தப் பெற்றமையால் வளத்திற் சிறந்த வயல்கள் என்க.
அற்றாகலினன்றே நென்மணிகளின் பாரந் தாங்கலாற்றாது சாலி
தலைவணங்கியது என்றார் என்ப. இது பற்றியே மண் நீர்மை
நலம்
- என்றார்.

     வயல்கள் அயல்களின் உள - என்க. வயல்கள்
மருதநிலத்தின் ஊர்களை அடுத்து வயலிற் காணப்படுமியல்பும்
குறிக்க. 2