869. |
சேறணிதண்
பழனவயற் செழுநெல்லின்
கொழுங்கதிர்போய்
வேறருகு மிடைவேலிப் பைங்கமுகின் மிடறுரிஞ்சி
மாறெழுதிண் குலைவளைப்ப வண்டலைதண்
டலையுழவர்
தாறரியு நெடுங்கொடுவா ளனையவுள
தனியிடங்கள்.
4 |
(இ-ள்.)
வெளிப்படை. சேற்றினையுடைய அழகிய குளிர்ந்த
மருதத்தைச் சார்ந்த வயலில்விளைந்த செழிப்பையுடைய நெல்லினது
கொழுத்த கதிர் மேலே போய், அவ்வயலின் அயலில் வேறாக
அடுத்துள்ள நெருங்கிய வேலிப் பக்கம் பசிய கமுக மரங்களின்
கழுத்துவரை வளர்ந்து, மாறாக எழுந்த அவற்றின் திண்ணிய
குலையை வளைப்பவை, வண்டுகள் வாழும் சோலையில் வாழ்கின்ற
உழவர்கள் குலைகளை அரிகின்ற நீண்ட வளைந்த அரிவாள்களை
ஒத்தனவாயுள்ளன ஒரோவோரிடங்களில்.
(வி-ரை.)
சேறுஅணி - வேற்றுமையில் நகரவொற்றிரட்டாது
வந்தது. காடக மிறந்தோர் என்புழிப்போல.
சேறு
- அணி - தண் - பழனம் என்ற நான்கு
அடைமொழிகளையும் வயல் என்ற பெயருடன் தனித்தனிக்
கூட்டுக. சேற்றின் அணியையுடைய என்று
சேர்த்துரைப்பினுமமையும். வயலுக்குச் சேறுடைமையும், அதனால்
அணியுடைமையும் சிறப்பு. எரு - தழை - முதலிய கழிபொருள்கள்
பலவும் சேர்ந்து அழுகிய மண் குழம்பேயாயினும் பயிர்க்குப் பயன்
தருதலும்; அப்பயிர் தாமே உயிர்க்கு ஆதரவாதலும் நோக்கி அணி
எனப்பட்டது. அன்னல் - கருஞ்சேறும், அளறு - உவர் நில
முதலிய வெண்ணிலச் சேறும் குறித்தல்போலச் சேறு இங்கு
வயற்சேறு குறித்தது.
வயற்செழு
நெல்லின் - மேற்சொன்ன சிறப்புடைய
தொருவயலின் வேலி ஓரத்திற் பல செழித்த நெற்பயிரில்.
கொழுங்கதிர் - அந்தச் செழித்த நெற்பயிர்களிற் சில கொழுத்த
கதிர்கள். போய் - மேலோங்கி வளர்ந்து.
போய் - உரிஞ்சி
எனக்கூட்டுக.
வேறு
... மிடறு - வேறு - அந்நெற் பயிரினுக்கு வேறாய்.
அருகு பைங்கமுகு - வேலிக்கமுகு என்று தனித்தனி
கூட்டுக.
நெல்வயலின் அயலில் உள்ள கமுகுப் பயிரில் வேலியின் பக்கம்
உள்ள சில பசிய கமுகு என்க. மிடைவேலி -
மிடைதல்
இடைவெளியில்லாது நெருங்குதல். கமுகு நாளும் மிகவும்
காத்தற்குரிய பயிராகலான் அதற்கு இட்டவேலி. "நறையாற்றுங்
கமுகுநவ மணிக்கழுத்தி னுடன் கூந்தற், பொறையாற்றா மகளிரெனப்
புறம்பலைதண் டலைவேலித், துறையாற்ற மணிசொரிய" (திருநா
- புரா - 7) என்றது காண்க. பைங்கமுகின் மிடறு -
பசிய கமுகின்
கழுத்து; கழுத்து என்பது இலைகளை அடுத்துள்ள அடிப்புறத்
தண்டு. இளங்கமுகு ஈனும் பருவத்தில் தண்டு நீண்டு மரமுழுதும்
பசுமை மாறாது காட்டுதலுமுண்டு. கதிர்போய்க் கமுகின் மிடறு
உரிஞ்சி - என்றது கதிர்மேலெழுந்து வளர்ந்து கமுகின் தண்டினை
உராய்ந்து. உரிஞ்சி - உரிஞ்சுதலினால்
எனக் காரணப் பொருளில்
வந்த வினையெச்சம்.
கொடுவான்
- உள்வளைந்த அரிவாள். கமுகின் குலையைச்
சார்ந்து வளைத்த நெற்கதிர், அரியும் கொடுவாள் போன்றது
என்பதாம்.
அனைய
- அனையவாகி. போன்றனவாகிய தனியிடங்களில்
உள என்று கூட்டுக. இக்காட்சி சில இடங்களில் மட்டும் உண்டு
என்பார் தனி இடங்கள் என்றார்.
தடஞ்சாலி, தண்ணீர்மென்
கழுநீர்க்குத் தலைவணங்கும்
தன்மையுடையவாயினும் (867), அவை தடம்பணைகளில் தம்பெருமை
மிக்குக் காட்டுவனவாம் (868); அவற்றுட் சில கதிர் கமுகின் மிடறு
உரிஞ்சி அவற்றின் குலைகளையும் வளைத்து அரியும் நெடுங்
கொடுவாள் போன்றும் உள்ளன என்று இம்மூன்று பாட்டுக்களினும்
தொடர்ந்து செல்வதொரு பொருள்பட வைத்து இவற்றால் நீர்வளம்
நிலவளம் முதலியனவும், நிலம், தொழில், உணவு முதலியனவும்
கூறிய அமைதி காண்க.
வேலியின் ஓரத்தில்
சில நெற்பயிர் செழித்தோங்கிக் கதிர்
நீளுதற்கும் அருகு பைங்கமுகு குலையீனுதற்கும் காரணம் வேலி
வரம்புக்கருகில் நீரும்சேறும் பலவகை எருவும் ஒதுங்கிக் கூடும்
வளம் என்க. கோதாவரி முதலிய பெருநதிகளின் நீர்வளமுள்ள
நாடுகளில் நெற்பயிர் 8, 9 அடி நீளம்வரை ஓங்கி வளர்தல் இன்றும்
காணலாம். நீர் நிலையினுள் வளரும் சிலவகை நெற்பயிர்கள் 20, 30
அடி உயரம் நீண்டு வளர்தலுமுண்டென்பர். "களிறுமாய்க்குங்
கதிர்க்கழனி" - (பத்துப்பாட்டு).
ஒரு மகள் கூந்தலை
அரிந்த இச்சரித குறிப்புப்பெற
நாட்டுவளங் கூறிய சிறப்பும் காண்க. ஆறு (886), வயல் (867),
வயற்குளம் (தடம்பணை) (868), அதிற் றனி யிடங்கள் (869),
இவற்றை முறையே கடந்து சென்றால், மறுகு (870), என் றிவ்வரிசை
பெறக் கூறிய வருணனைச் சிறப்பும் காண்க. 4
|