870. |
பாங்கின்மணிப்
பலவெயிலுஞ் சுலவெயிலு முளமாடம்;
ஞாங்கரணி துகிற்கொடியு நகிற்கொடியு முளவரங்கம்;
ஓங்குநிலைத் தோரணமும் பூரணகும் பமுமுளவாற்
பூங்கணைவீ தியிலணைவோர் புலமறுகுஞ் சிலமறுகு. 5
|
(இ-ள்.)
பாங்கின் ... மாடம் - பக்கங்களில்
மாடங்கள் பல
மணி நிறங்களும் சூழ்ந்த மதில்களும் உள்ளன; ஞாங்கர் ...
அரங்கம் - (அவற்றின்) பக்கங்களில் மேடைகள் அழகிய
துகிலாலாகிய கொடிகளும் நகிலினை உடைய கொடி போன்ற
பெண்) களும் உள்ளன; பூங்கணை......சில மறுகு - வீதிவழியே
செல்வோர்களது புலங்களைப் பூங்கணைகள் மயங்கச் செய்யும் சில
மறுகுகள்; ஓங்கும்.......உளவால் - மிக்குயர்ந்த தோரணங்களும்
நிறைகுடங்களும் உள்ளன.
(வி-ரை.)
பாங்கின் - மேற்பாட்டிற்
சொன்ன நெற்பழனம்
கமுகுச்சோலை என்றிவற்றினை அடுத்து அவற்றின் பக்கத்தில்.
மாடம்
பல மணி வெயிலும் சுலவு எயிலும் உள என்க.
வெயில் - ஒளி - நிறம். பலமணி
வெயில் என்றது மணிகளின்
பற்பல நிறங்களை. மணிகளின் பல ஒளிகளும் சுற்றிய எயில் என்று
உரைப்பாருமுண்டு. சுலவு எயிலும் - எயில் -
மதில். சுலவுதல் -
சூழ்தல். மாடம், பலமணி வெயிலும் எயிலும் உள்ளன; அரங்கம்,
துகிற் கொடியும் நகிற்கொடியும் உள்ளன, மறுகு, தோரணமும்
கும்பமும் உள்ளன என முடிக்க. மாடம் முதலிய மூன்றெழு
வாய்களும் சாதியொருமையாகலின் உள என்னும் பன்மைக்குறிப்பு
வினைகளோடு முடிந்தன. உம்மைகள் எண்ணும்மைகள்.
ஞாங்கர்
- பக்கம். துகிற்கொடி - துணிகளாலாகிய
கொடிகள். கொடிகள் கட்டுவது மாடங்களுக்கும் வீதிகளுக்கும்
அழகும் மங்கலமும் தருவன என்பர். இவற்றுள் வெண்கொடி
சிறந்ததென்பது மரபு. "மாடமாளிகைக் கொடி. யருக்கன் மண்டலத்
தணாவும்" (திருஞான - திருவாரூர் - நட்டராகம் - திருவிராகம்),
"நிறைவெண் கொடிமாடம்" (திருஞா - கோயில் குறிஞ்சி), "வெண்
கொடியாடும் சீர் விளங்கு" (97) என்றவிடத்துரைத்தனவும், "மேலம்
பரதல நிறையுங் கொடிகளில்" (திருநா. புரா. 164); "சோதிவெண்
கொடிகளாடுஞ் சுடர் நெடுமறுகு" (474) என்பன பலவும் காண்க.
அரங்கம்
- பெண்களின் ஆடல் பாடல்கள் நிகழும் பொது
இடங்கள். "காந்தார மிசையமைத்துக் காரிகையார் பண்பாடுங்
கவினார் வீதித், தேந்தாமென்றரங்கேறிச் சேயிழையார் நடமாடுந்
திருவை யாறே" (ஆளுடைய பிள்ளையார் மேகராகக்குறிஞ்சி) என்ற
தேவாரமும் பிறவும் காண்க.
நகிற்கொடி
- நகில் - முலை. கொடி - கொடிபோன்ற
பெண்கள்.
தோரணம்
- பூரண கும்பம் - இவை மங்கலங் காட்டும்
பொருள்கள். ஓங்குநிலை - மேலே தூக்கி உயரக்
கட்டியது
குறித்தது.
பூங்கணை
- பூக்களாலாகிய அம்புகள் - மன்மத
பாணங்கள். புலம் மறுகும் - புலங்களில் மறுகுதலை
- மயக்கத்தை
- விளைத்தற்கேதுவாகிய. புலம் - ஐம்புலம்.
சிலமறுகு
- மறுகு - வீதி. புலம் மயங்குதற்கேதுவாவன
சில வீதிகளில் உள்ள விலைமாதரின் ஆடல்பாடல் முதலிய
காட்சிகளாலாவன. இவ்வாறுள்ள நிகழ்ச்சி சிலவேயாம். அவை
கடையொழுக்கமுமாம் என்று குறிப்பார் சிலமறுகு என்று
கடையிற்
கூறினார்.
பூங்கணை.........மறுகு
- பூங்கணையின் வழியிலே
சார்கின்றோரது புலன்களிலே மறுகுதற்கேதுவாகிய சிலமறுகென்க.
எனவே "முத்தாந்த வீதி முளரி தொழுமன்பர்" அம்மறுகிலுள்ள
புலங்களில் மயங்கார் என்பது வெதிரேக அணியாற் பெறும்
பொருள்.
பாங்குமணி
- ஓங்குமணி - என்பனவும் பாடங்கள். 5
|