872. |
அப்பதியிற்
குலப்பதியா யரசர்சே னாபதியாஞ்
செப்பவருங் குடிவிளங்கத் திருவவதா ரஞ்செய்தார்
மெய்ப்பொருளை யறிந்துணர்ந்தார் விழுமியவே
ளாண்குடிமை
வைப்பனைய மேன்மையினார் மானக்கஞ் சாறனார். 7
|
(இ-ள்.)
மெய்ப்பொருளை............மானக்கஞ்சாறனார் -
உண்மைப் பொருளை அறிந்து அதனை எப்போதும் சிந்தித்து
உணர்வினிற் கொண்டவரும், தூய வேளாள மரபின்
சேமவைப்புப்போன்ற மேன்மையுடையவருமாகிய மானக்கஞ்
சாறனார்; அப்பதியில்........அவதாரஞ் செய்தார் - அந்தத் தலத்தில்
வழிவழி வாழ்கின்ற மேம்பாடுடையவராய் அரசரது சேனாபதியாகிய
சுட்டிக் கூறத்தக்க குடிவிளங்கும்படி திருவவதாரஞ் செய்தனர்.
(வி-ரை.)
இப்பாட்டினால் நாயனாரது மரபும், மரபின்
உட்குடியும், உள்ள நிறைவும், வழிவழி வாழ்க்கையும் முதலிய
சிறப்புக்கள் பலவும் ஒருங்கு பேசப்பட்டன.
மெய்ப்பொருள்
- மெய்ப்பொருணாயனார் புராணமும், 481
- ல் உரைத்தவையும் பார்க்க.
அறிந்து
உணர்ந்தார் - அறிதல் - உணர்தல் - இவை
வெவ்வேறு உணர்ச்சி நிலை குறித்தன. அறிந்து என்றதனாற்
கேட்டலும் சிந்தத்தலும், உணர்ந்து என்றதனாற்
தெளிதலும் நிட்டை
கூடலும் உணர்த்தப்பட்டன. மெய்ப்பொருளானது ஞானேந்திரிய
அறிவு அந்தக்கரண அறிவு என்னும் பாசவறிவினாலும், உயிரறிவு
எனப்படும் பசு அறிவினாலும் அறியப்படாதாயும், சிவஞானமாகிய
மெய்யுணர்ச்சியால் மட்டும் அறியப்படுவதாயும் உள்ள
பொருளென்பது இங்குக் குறிக்கப்பட்டது.
அப்பதியில்
குலப்பதி - அவ்வூரில் வழிவழி நிலைத்த
குடிகளுள் முதன்மையுடையவர். இக்காரணம்பற்றியே முதன்மையார்,
முதலியார் என்ற குடிப்பெயர்கள் போந்தன என்ப. இவர்களுக்கு
ஊராண்மை நாட்டாண்மை முதலிய ஊர் முதன்மைப் பட்டப்
பெயர்களும் வழங்கும். இவர்களின் குடிச்சிறப்புக்களை ஆசிரியர்
பல இடத்தும் விதந்து பேசுதலும், உமாபதி சிவாசாரியார்
திருத்தொண்டர் புராண வரலாற்றினுட் பாராட்டியிருத்தலும் காண்க.
அரசர்
சேனாபதியும் செப்பவருங் குடி - அரசரிடத்துச்
சேனாபதியாகும் தொழிலும் வேளாளர்க்கு உரியது. இது இவர்களுட்
சில குடிகளில் வழிவழியாய் வருவதொன்றாதலின் இவ்வாறு
கூறினார். இந்நாயனாரது மகளாரை மணம் புரியவந்த
எயர்கோனாரும் இதுபோலவே சேனாபதிக்குடியினில் வந்தவர்
என்பது "ஓங்குகுல மரபினராய்" (881), "எந்தமது மரபினுக்குத்
தகும்பரிசா லேயுமென" (882) என்றவற்றாலும், ஏயர்கோனார்
புராணத்தினுள் "ஏயர்கோக்குடிதான்", "மன்னிநீடிய வளவர்
சேனாபதிக்குடியாம்" (5) என்று கூறுவதனாலும் விளங்கும்.
திலகவதியம்மையாருக்கு மணம்பேசிய கலிப்பகையாரும் அரசர்
சேனாபதியாராகப் போர்புரிந்து உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட
சரிதத்தையும் இங்கு நினைவு கூர்க. இதனை "வேந்து விடுதொழிலிற்
படையுங் கண்ணியும், வாய்ந்தன ரென்ப வர்பெறும் பொருளே"
(பொருள் - மரபு - 81) என்ற தொல்காப்பியத்துள்ளும் காண்க.
குடிவிளங்க
- இவர் அவதரித்த குடி இவரால்
விளக்கமடைய, குலவிளக்கு, குலதனம் முதலிய வழக்குக்கள்
காண்க. ஒரு குலத்தில் வந்த வொருபெரியாரைச் சுட்டி அக்குலம்
பெருமையடைதல் வழக்கிற் காண்க. ஆசிரியர் சேக்கிழாரைக்
குடிப்பெயராலே வழங்குவது இதனை விளக்கும்; "இருவர்ச் சுட்டிய
பல்வேறு தொல்குடி" என்ற திரு முருகாற்றுப்படையும் சிந்திக்க.
"கானவர்குலம் விளங்கத் தத்தைபாற் கருப்ப நீட" (662) என்றது
காண்க.
விழுமிய
வேளாண் குடிமை வைப்பு - வேளாண்
குடியின் விழுப்பமாவது வாய்மை திறம்பாமையும், நினைப்பினாலும்
தீமையில்லாமையும், தொழிலாற்றூய்மையும், கரவா வள்ளண்மையும்
ஆம். "தீயவென்பன கனவிலு நினைவிலாச் சிந்தைத் தூய மாந்தர்"
(திருக்குறிப்பு - புரா 47), "தம்முரையும் வணிகனுக்கொருகாற்,
சொற்ற மெய்ம்மையும் தூக்கியச் சொல்லையே காக்கப், பெற்ற
மேன்மை" (மேற்படி 3), "நம்பு வாய்மையினீடு" (இளையான் குடி -
புரா - 1), "அனைத்துவித நலத்தின்கண் வழுவாத நடைமரபிற்
குடி" - (திருநா - மரபு - 15) என்பன முதலாக ஆசிரியர்
ஆங்காங்கும் காட்டிப் போந்தவை காண்க. "வேளாளரென்றவர்கள்
வள்ளன்மையால் மிக்கிருக்குந், தாளாளர்", "இன்மையாற்
சென்றிரந்தார்க் கில்லையெனா தீந்துவக்குந் தன்மையார்", என்ற
ஆளுடைய பிள்ளையார் (திருவாக்கூர்) தேவாரமுங் காண்க.
விழுமம் - நன்மை (விழுமியார் - நல்லோர்). குடிமை
வைப்பு
அனைய - குடிக்குச் சேம நிதிபோல. முயற்சியின்றி யாவரும்
பயன்பெறக் கூடியதும் எடுக்கக் குறையாததும் சேம நிதியாம். இது
இவரது கரவாத வள்ளன்மை குறித்தது.
மேன்மையினார்
மானக்கஞ்சாறனார் - மானம் -
மேன்மை - பெருமை, நாயனாரது இயற்பெயர் விளங்கவில்லை.
மேன்மையினாராதலின் இப்பேர் பெற்றார் என்று பேர்ப்பொருள்
விளக்கம் செய்தவாறு. 7
|