873. பணிவுடைய வடிவுடையார்; பணியினொடும்
                              பனிமதியின்
அணிவுடைய சடைமுடியார்க் காளாகும் பதம்பெற்ற
தணிவில்பெரும் பேறுடையார்; தம்பெருமான்
                               கழல்சார்ந்த
துணிவுடைய தொண்டர்க்கே யேவல்செயுந்
                          தொழில்பூண்டார்.
8

     (இ-ள்.) பணிவுடைய வடிவுடையார் - (அவர்) பணிவை
வெளிப்படுக்கும் வடிவினையுடையவர்; பணியினொடும் .....
பேறுடையார் - பாம்பினோடு குளிர்ந்த சந்திரனை அணிந்த
சடைமுடியுடைய சிவபெருமானுக்கு ஆளாகின்ற தகுதி பெற்ற
குறைவில்லாத பெரும் பேற்றினையுடையவர்; தம்பெருமான்......
பூண்டார் - தமது பெருமான் றிருவடிகளைச் சார்வாகவுடைய
துணிவுகொண்ட தொண்டர்களுக்கே ஏவல் செய்யும் தொழிலை
மேற்கொண்டவர்;

        (வி-ரை.) பணிவுடைய வடிவு - திருவடிவின் றோற்றமே
அவரது உள்ளத்தின் பணிவை ஏற்றவாறு வெளிப்படுக்கும் என்பது.
இங்குப் பணிவு என்பது பெரியார் முன் தம்மை மிகச் சிறியாராய்க்
கொண்டு ஒழுகும் ஒழுக்கம். "தாழ்வெனுந்தன்மையொடுஞ்
சைவமாஞ் சமயஞ் சாரு, மூழ்பெற லரிது" (சிவஞா - சித் - 2 - 91),
"மேதகையா ரவர்முன்பு மிகச்சிறிய ராயடைந்தார்" (சிறுத் - புரா
- 15) என்பன காண்க. "குலம்பொல்லேன் குணம்பொல்லேன்"
என்பன முதலாக அப்பர் சுவாமிகள் திருவாக்கிற் கண்ட
இலக்கிய அமைதியின்படி தமது வாழ்வுகளையும்
குறைபாடுகளையுமே எண்ணி ஏங்கிப் பெரியாரது முன்பில் நிற்பதே
சைவத்தின் அடிப்படையாதலின் இவ்வாறு கூறினார். "சீரடியார் கூடி,
யெண்ணிலா ரிருந்த போதி லிவர்க்கியா னடியே னாகப், பண்ணுநா
ளெந்நா ளென்று பரமர்தான் பரவி"யும், அவர்கள் "எல்லார்க்குந்
தனித்தனிவே றடியேனென்றார்வத்தாற்"
பாடிப் பணிந்தும்
நம்பியாரூரர் இவ்வொழுக்கத்தை விளக்கியருளியதும் இங்கு நினைவு
கூர்க.

     அணிவு - அணியாக அணிந்து கொள்ளுதல்.

     ஆளாகும் பதம் - ஆளாகின்ற உள்ளத் தன்மையின் தகுதி.
பதம் - பக்குவம் - பரிபாகம். பதம் - சொல் என்று கொண்டு
வாக்கின் செய்கையைக் குறிப்பதாக உரைப்பாரு முண்டு.

     தணிவில் பெரும்பேறு - தணிவில்லாமையாவது
எக்காலமும் குறைவு படாமை. பெறும்பேறு - பேறினி யிதன்மே
லுண்டோ? என்றபடி இதனிற் பெரியபேறு வேறு இல்லை என்பது.

     தொழில் - இப்பேற்றினால் மேற்கொள்ளப்பட்ட
செய்தொழில், அப்பேற்றினைப் பெறுதற்குச் சாதனமாய்ச் செய்யுந்
தொழில் என்றலுமாம். இப்பொருளில் பேறாகிய காரியத்தை
முன்வைத்து அதன் காரணமாகிய தொழிலை அடுத்து வைத்துக்
காட்டினார். அப்பேற்றினுக்குப் பயனாவது அன்பர் ஏவல்செய்யும்
தொழில் என்றுரைத்தலுமொன்று. "கும்பிட்ட பயன் காண்பார்போல்"
(திருஞான - புரா - 1022) என்றதும், "நேய மலிந்தவர்
வேடமும்.......அரனெனத் தொழுமே" என்ற சிவஞான போதக்
(12 சூத்.) கருத்தும் காண்க.

     கழல்சார்ந்த துணிவு - திருத்தொண்டினுறைப்பாலாகிய
துணிபு. "சார்புணர்ந்து" (குறள்) என்றபடி சாரத்தக்க சுழலைச்
சார்ந்ததனால் உண்டாகிய துணிவு. "ஒருவர் தமர்நாம் அஞ்சுவதி
யாதொன்று மில்லை யஞ்ச வருவதுமில்லை", "என் உளமே புகுந்த
வதனால், ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி
பாம்பிரண்டு முடனே, ஆசறு நல்ல நல்ல வவைநல்ல நல்ல அடியா
ரவர்க்கு மிகவே", "இடரினுந் தளரினு மெனதுறு நோய் தொடரினு
முனகழ றொழுதெழவேன்", "கற்றுணைப் பூட்டியோர் கடலிற்
பாய்ச்சினு நற்றுணை யாவது நமச்சி வாயவே", "சேவடிக்
கீழ்ச்சென்றங், கிறுமாந்திருப்பன் கொலோ", "திருவுமெய்ப்
பொருளுஞ் செல்வமு மெனக்குன் சீருடைக் கழல்களென் றெண்ணி,
யொருவரை மதியா துறாமைகள் செய்து மூடியு முறைப்பானாய்த்
திரிவேன்", என்பனவாதி திருவாக்குக்களாலறியப்படும் துணிவு.

     தொண்டர்க்கே - ஏகாரம் தேற்றத்தோடு பிரிநிலையுமாம்.

     ஏவல் செயும் தொழில் - அதுவே தாம் நியதியாகச்
செய்யும் செய்தொழிலாக. உடம்பளவில் பயன்விளைத் தொழியும்
ஏனைத்தொழில் போலாது, உயிரளவினும் தொடர்ந்து பற்றுதலால்
இதுவே தொழிலாம் என்ற கருத்துடன் நியதியாய்ச் செய்யும்
தொழிலாக. 8