875.  விரிகடல்சூழ் மண்ணுலகில் விளங்கியவித்
                         தன்மையராம்
பெரியவர்க்கு முன்சிலநாட் பிள்ளைப்பே
                          றின்மையினால்
அரியறியா மலர்க்கழல்க ளறியாமை யறியாதார்
வருமகவு பெறற்பொருட்டு மனத்தருளால்
                            வழுத்தினார்.
10

     (இ-ள்.) வெளிப்படை. விரிந்த கடலாற் சூழப்பட்ட
இம்மண்ணுலகத்தில் விளங்கிய இத்தன்மையுடையாராகிய அந்தப்
பெரியவருக்கு முன் சிலகாலம் பிள்ளைப்பேறு
இல்லாதிருந்ததனாலே, திருமாலும் அறியாத மலர்ப்பாதங்களை
அறியாமையை அறியாதாராகிய அவர் வரும் பிள்ளை
பெறுதற்பொருட்டுத் திருவருட் பிரேரணையால் மனத்தாற்
றுதித்தனர்.

     (வி-ரை.) உலகில் விளங்கிய இத்தன்மை யாவது
அப்பதியிற் குலப்பதியாய் அரசர் சேனாபதிக்குடியில்
பெருஞ்செல்வத்தின் விளங்கிய இவர் தொண்டர்க்கே ஏவல்
செய்யும் தொழில்பூண்டு அவர்க்கு யாவையும் கொடுத்துள்ள
தன்மை இவர் செய்த இத்தொழிலும் கொடையும் உலகில் எங்கும்
விளங்கின என்பதாம். இவை இவ்வாறு மண்ணுலகின்
விளங்கினவாயின் பின்னர் இறைவன் "இந்தச் செழும்புவனங்களில்
ஏறச் செய்தோம்" (897) என்றதென்னை? யெனின், இத்தொழிற்கும்
கொடைக்கும் முட்டுப்பாடு வருமிடத்தும் சோர்வுபடாமைக்குக்
காரணமாய் உண்ணின்ற அவரது பரிவினை உலகரறியாராதலின்
அதனை அறிவிக்கும் வழியாலே இறைவர் செய்த செயல் அது
என்றறிக.

     உலகை விளக்கிய என்பது பாடமாயின் விளக்கிய
என்பதனைச் செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சமாகக்
கொண்டு விளக்கும் பொருட்டு என்க. உவகை விளக்கும் பொருட்டு
என்றபடி. விளக்குவார் இறைவராதலின் இவ்வினையெச்சம்
தன்மையர் ஆம் என்ற பிறவினைமுதல் வினைகொண்டது. உலகம்
விளக்கம் பெறுதல் அன்பின்றிறம் தெரிந்து உய்தி பெறலாம்.

     பெரியவர் - செயற்கரும் செய்கை செய்யும் தன்மையாற்
பெரியவர் என்றார். "செயற்கரிய செய்வார் பெரியர்" (குறள்).
இப்புராணத்தை முடித்துக் காட்டுமிடத்து "ஒருமகள் கூந்த றன்னை
வதுவைநா ளொருவர்க் கீந்த, பெருமையார்" (902) என்று ஆசிரியர்
இக்கருத்தினையே எடுத்துக்காட்டுதல் காண்க.

     முன் சில நாள் - அவரது வாழ்க்கைத் தொடக்கத்தில்
சிலகாலம். முன் - முதலில்.

     பிள்ளைப்பேறு - மகப்பேறு. மக்கட்பேறு என்று
திருவள்ளுவர் வகுத்ததும் காண்க. பேறு - பெறு என்ற பகுதி
முதனீண் டுவந்த தொழிற்பெயர். பெறுந்தன்மைமட்டிற் குறித்து
நின்றது.

     வரும்மகவு.........வழுத்தினார் - வரும் மகவு - மனை
வாழ்க்கையில் இன்பம் வருதற் கேதுவாகிய மகவு. "மற்றதன்
நன்கலன் நன்மக்கட் பேறு" (குறள்), "மனையகத்தி லின்பமுறு
மகப்பெறுவான் விரும்புவார்" (திருஞான - புரா - 19),
"மகவிலாமையின் மகிழ்மனை வாழ்க்கையின் மருண்டு" முதலியவை
காண்க. வரும் - பிழைக்கு நெறி தமக்குதவி இச்சரித நிகழ்ச்சிக்குக்
காரணமாய் வரும் என்ற குறிப்பும் காண்க. இச்சரிதத்துக்கு மட்டுமே
யன்றி ஏயர்கோனார் சரித நிகழ்ச்சிக்கும் பேராதரவாய் வரும் என்ற
குறிப்புமாம். தென்புலத்தார் கடனிறுத்தற்கேதுவாக வரும்
என்றுரைப்பாரு முண்டு.

     பேறு - "ஆளாகும் தணிவில் பெரும் பேறுடைய" (873)
நாயனார், அதனின் வேறாய் அதனினும் மேலாய்ப் பிள்ளைப்
பேற்றைக் கருதி விரும்பினாரல்லர் என்க. ஆயின் மகவு பெறற்
பொருட்டு வழுத்தினார் என்ற தென்னை? எனின், அவ்விருப்பம்
தம்மிச்சையாலன்றித் திருவருட் பிரேரணையினாற் கூடிற்று என்பார்
அருளால் என்றும், சரித நிகழ்ச்சியின் பொருட்டு வருவதென்பார்
வரும் என்றும் கூறினார்.

     அரி அறியா......அறியாதார் - கழல்களை அரி அறியார்;
இந் நாயனார் அவற்றை அறியாமையை அறியார் என்ற நயம்
காண்க. அறியாமை அறியாதார் - இரண்டெதிர் மறைகள்
உறுதிபெற்ற ஓர் உடன்பாடு குறித்தன. இங்ஙனம் வலியுறுத்துதலின்
சிறப்பினை "அல்லதில்லை என்று எதிர்மறை முகத்தாற் கூறியது
ஏனைக் கடவுளரின் உளதாகாமை யாப்புறுத்தற் பொருட்டு"
(சிவஞானபோதம் - 1. 2.) எனவும், "இன்றியமையாமை யுணர்த்துவார்
தோன்றானே லாரறிவார் என எதிர்மறை முகத்தாற் கூறினார்"
(மேற்படி 2) எனவும் உரைத்தவற்றுட் காண்க. எப்போதும் மறவாது
அறிந்து அவ்வுணர்ச்சியில் உறைந்து நின்றவர் என்றபடி.

     கழல்களையே அறிந்து நின்றவராதலின் மகவுபெற
வழுத்தியதும்
அருளாலே கூடிற்று என்பதாம். யானென தென்பவை
யற்றவிடமாகிய திருவடிகளை யானெனதென்பன வுடைமையால் அரி
அறியாராயினர் என்க.

     அருளால் மனத்து வழுத்தினார் என்க. மனத்தில்
நினைத்துத் துதித்தனர். வழுத்தினார் என்றதற்கு அக்கழல்களை
எனச் செயப்படுபொருள் வருவிக்க. 10