876.
|
குழைக்கலையும்
வடிகாதிற் கூத்தனா ரருளாலே
மழைக்குதவும் பெருங்கற்பின் மனைக்கிழத்தி
யார்தம்பா
லிழைக்கும்வினைப் பயன்சூழ்ந்த விப்பிறவிக்
கொடுஞ்சூழல்
பிழைக்குநெறி தமக்குதவப் பெண்கொடியைப்
பெற்றெடுத்தார். 11 |
(இ-ள்.)
வெளிப்படை. குழையைத் தாங்கி அசைகின்ற
வடிந்த காதினையுடைய கூத்தப் பெருமானது திருவருளினாலே,
மழைக்கு உதவி செய்யும் பெருங்கற்பினையுடைய
மனைக்கிழத்தியாரிடமாகச், செய்வினைப்பயன்களாற் சூழப்பட்ட
இப்பிறவியாகிய கொடுஞ் சூழலினின்றும் பிழைக்கும் வழியைத்
தமக்கு உதவக் கொடிபோன்ற பெண்மகவினைப் பெற்றெடுத்தார்
(நாயனார்.)
(வி-ரை.)
குழை - மகரம் போன்ற வடிவுடையதாய்ச்
சங்கினால் இயன்றது. இதனை இறைவர் வலது காதில் அணிவர்
என்பது மரபு. "சங்கக் குழையார் செவியா" (தேவாரம்). காதுவடிந்து
தொங்குவதனாலும், அதனில் குழையிருப்பதனாலும், இறைவர்
கூத்தாடும்போது காது அசைந்தாடுகின்றது என்பார்
குழைக்கலையும் வடிகாதிற் கூத்தனார் என்றார். குழைக்கு
-
குழையினால். உருபு மயக்கம்.
மழைக்குதவும்
- மழையை உதவும்; பெய்விக்கும்.
நான்கனுருபு இரண்டாம் வேற்றுமைச் செயப்படு பொருளில் வந்தது.
உருபு மயக்கம். "பெய்யெனப் பெய்யும் மழை" (குறள்). உலகுக்கு
உதவியாகும் சிறப்பை மழைக்குத் தருகின்ற என்றுரைத்தலுமாம்.
நாயகனையே தெய்வமாகக் கொண்டு வழிபடும் கற்புடையார் என்று
குறிக்க மழைக்குதவும் பெருங் கற்பு என்றார்.
மனைக்கிழத்தியார்
தம்பால் பெண் கொடியைப்
பெற்றெடுத்தார் என்று கூட்டுக. நாயனார் என்னும் எழுவாய்
வருவிக்க. மனைக்கிழத்தியார்- மனைவியார்.
மனை -
மனையறத்துக்கு; கிழத்தியார் - உரிமையுடையவர்.
இழைக்கும்
வினை......பிழைக்கும் நெறி - இழைக்கும்
வினை - ஆன்மாக்களால் ஈட்டப்படும் கன்மங்கள். 803 - ல்
உரைத்தவை பார்க்க. வினைப்பயன் சூழ்ந்த இப்பிறவி
இருவினைப் பயன்களாகிய இன்ப துன்பங்களாற் சூழப்பட்ட
இப்பிறவியாகிய கொடிய சுழற்சி. 1அவ்வவர்
செய்யும்
வினைகளுக்கு ஏற்றவாறு மேற்பிறவி வருமென்பது நூற்றுணிபாம்.
1"இவ்வினை
யீட்டப்படுங்கால், மந்திர முதலிய
அத்துவாக்களிடமாக மனம் வாக்குக் காயம் என்னு
மூன்றா
னீட்டப்பட்டுத், தூல கன்மமாய் ஆகாமியமெனப் பெயர் பெற்றுப்,
பின்னர்ப் பக்குவப்படுங்காறுஞ் சூக்குமகன்மமாய்ப் புத்திதத்துவம்
பற்றுக்கோடாக மாயையிற்கிடந்து, சாதி ஆயுப் போகமென்னு
மூன்றற்கு மேதுவாய், முறையே சனகந் தாரகம் போக்கிய மென்னு
மூவகைத்தாய், அபூருவம் சஞ்சிதம் புண்ணிய பாவமென்னும்
பரியாயப்பெயர் பெற்றுப், பின்னர்ப் பயன் படுங்கால்
ஆதிதைவிகம் ஆக்தியான்மிகம் ஆதிபௌதிகம் என்னு
முத்திறத்தாற் பலதிறப்பட்டுப், பிரார்த்தமெனப் பெயர்பெறும்.
ஆதிபௌதிகமாவது சடம் வாயிலாக வருவது. ஆக்தியான்மிகமாவது
சடத்தோடு கூடிய சேதனம் வாயிலாக வருவது. ஆதிதைவிகமாவது
ஒரு வாயிலானன்றித் தெய்வந்தானே காரணமாக வருவது"
என்றிவ்வாறு சிவஞான போதச் சிற்றுரை 2 - சூத்) யில்
உரைக்கப்பட்டவை காண்க.
திருமலைச் சிறப்பிற்
கூறிய நிகழ்ச்சிகளும் பிறவும் காண்க.
"முன்புசெய்தவத்தினீட்டம்" (751), "உன் னுடன்பிறந்தான், முன்னமே
முனியாகி யெனையடையத் தவமுயன்றான்" (திருநா - புரா - 48),
"சிலந்தி வேந்துமகிழ், அக்கமலவதி வயிற்றி னணிமகவாய்
வந்தடைய" (8), "ஆதி மூர்த்தி யருளான்முன்னறிந்து பிறந்து
மண்ணாள்வார்" (12) கோச் - புரா) முதலாயினவும், பிறவும் பார்க்க.
வினைப்பயனாற் சூழப்பட்ட இப்பிறவி, மயக்கம் செய்து, மேன்
மேலும் "வினைபெருக்கி" எண்ணில்லாத பிறவிகளுக்கு ஏதுவாகி,
வெளியேறும் வழியறியாது மயங்கிப் பிறவிக்காட்டினுளழுந்துதலின்
பிறவிக் கொடுஞ் சூழல் என்றார். சூழல்
- வெயில்புகாத அடர்ந்த
காடு. "ஏழிசைச் சூழல்புக்கோர்" திருக்கோவை. சூழலினின்றும்
என ஐந்தனுருபு விரிக்க.
பிழைக்கு
நெறி - பிறவிச்சூழலுள் அகப்படாது தப்பிப்
பிழைக்கும் வழி. இது சிவநெறியோ மென்பது. பிழைப்பிக்கும் எனப்
பிறவினையாக வரற்பாலது பிழைக்கும் என நின்றது.
தமக்கு
உதவ - நாயனார் பிள்ளைப்பேற்றையே விரும்பிக்
கழல் வழுத்தினாரேனும், அவர் சடைமுடியார்க் காளாகும் பதம்
பெற்ற பேறும், தொண்டர்க்கே ஏவல் செய்யும்
தொழிலும்
உடையாராதலின் அத்தவங் காரணமாக, அப்பிள்ளைப் பேறு தானே
அவரை வினைப்பயன் சூழ்ந்த கொடுஞ் சூழலாகிய
"இப்பிறவியாட்கொண் டினிப் பிறவா மேகாத்து, மெய்ப்பொருட்கட்
டோற்றமாய் மெய்யே நிலைபேறா"கக் கொண்ட சிவநெறியினைக்
கூட்டுவிப்பதாய் வந்தது என்க. இதனையே பிழைக்கு நெறி
என்றார்.
பிழைக்கு
நெறி தமக்கு உதவ - இம்மகவின் கூந்தலை
மணநாளில் அரிந்து ஒருவர்க்கீவதற்குக் காரணமாய் நின்றதனாலும்.
ஏயர்கோனாரது புண்ணிய சரித விளைவிற்குக் காரணமாய்
நின்றதனாலும் பெண்கொடி பிழைக்கு நெறி உதவ என்றார்.
கூந்தலரிந்து நீட்டியமையால் இவர் பெற்ற பேறு 898ல் கூறுகின்றார்.
ஒரு பெண்ணை ஒரு நற்குடியில் ஈந்து அக்குடி தழைக்கச்
செய்தலால் பெண் பெற்றோர் நற்கதியடைவர் என்பது அறநூல்
விதி. "எம்முடைய குலக்கொழுந்தை யாமுய்யத் தருகின்றோம்"
(திருஞான - புரா - 1167) என நம்பியாாண்டார் நம்பி கூறியதனை
இங்கு நினைவு கூர்க.
பிழைக்கு
நெறி தமக்கு உதவப் பெண் கொடியைப்
பெற்று என்ற இதனால் பெண்பிறவி இழிந்ததெனக் கருதும்
பிற்காலப் புலவர் கருத்து மறுக்கப் பட்டதாக இங்கு விசேட
ஆராய்ச்சியுரை காண்பாருமுண்டு. பெண்பிறவி இழிபுடைத்து
என்றதொரு கொள்கை பிற்காலப் புலவர்கள் கொண்டனர் என்பதும்
சரியன்று. உலகம்ஐந்து இந்திரிய வயமயங்கி வீழாமைப் பொருட்டுப்
பெண்ணாசையை முதன்மை பெற வைத்து விலக்கிக் கூறுவது
பண்டைக்கால முதல் நீதி நூல்கள் ஓதிய வகையில் மக்கள்
கொண்ட உலக அறநூல் விதியாம். அது போலவே
பெற்றாரை
நரகத்திலிருந்து தூக்குவது ஆண்மகப்பேறு என்பதும் மிருதிநூல்
வழக்கில் ஒன்று. இவையிரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத
வெவ்வேறு வழக்குக்கள்.
ஆனால் இங்குக்
குறித்த பிழைக்கு நெறி உதவும்
செய்திக்கும் இவற்றுக்கும் எவ்விதப் பொருத்தமுமில்லை. உண்மை
ஞான நூல்களாகிய முத்தி நூல்களுள் ஆண்பெண் இருபாலாரும்
ஒன்று போலவே வினைவயத்தராகிய உயிர்ப்பகுப்பில் வைத்துக்
கருதப்படுவர். இங்குப் பிழைக்கு நெறி என்றது
பிறவிச் சூழலுக்குக்
காரணமாம் வினைகளை அறுத்தற்கு ஏதுவாகிய சிவநெறிச் சாதனங்
குறித்ததேயன்றி, உலகச் சார்புகளாகிய ஆண் பெண்
தொடர்ச்சியையேனும், சுவர்க்க நரகங்களையேனும் பற்றியதன்று.
உலகம் பற்றிய தொடர்ச்சிக் கொள்கைகளை உலகிறந்த
சிவநெறிச்சார்பு பற்றிய இப்புராண வரலாறுகளுட் புகுத்தி
யிடர்ப்படுதல் முறையன்றாம்.
பெற்றெடுத்தார்
என்றதற்கு நாயனார் என எழுவாய்
வருவிக்க. 11
|