877.
|
பிறந்தபெரு
மகிழ்ச்சியினாற் பெருமூதூர் களிசிறப்பச்
சிறந்தநிறை மங்கலதூ ரியமுழங்கத் தேவர்பிரான்
அறந்தலைநின் றவர்க்கெல்லா மளவில்வளத்
தருள்பெருக்கிப்
புறந்தருவார் போற்றிசைப்பப் பொற்கொடியை
வளர்க்கின்றார். 12 |
(இ-ள்.)
வெளிப்படை. (பெண் கொடி) பிறந்த பெரு
மகிழ்வினாலே பெரிய அந்தப் பழவூர் களிப்பில் மிகவும் சிறக்கச்,
சிறப்பையும் இசைகளின் நிறைவையுமுடைய மங்கல வாத்தியங்கள்
முழங்கச், சிவதருமங்களில் தலைநின்ற அடியார்களுக்கெல்லாம்
அளவில்லாத வளமாகிய கொடைகளைப் பெருகச் செய்து,
(குழவியைப்) பாதுகாவல் செய்யும் தாதியர்கள் வாழ்த்திசைப்பப்
பொற்கொடி போன்ற அக்குழவியை வளர்ப்பாராயினர் (நாயனார்).
(வி-ரை.)
பிறந்த என்றதற்குப் பெண் கொடி என்ற
எழுவாயும், புறத்தருவார் - என்றதற்குக் குழவியை
என்ற
செயப்படுபொருளும், வளர்க்கின்றார் என்றதற்கு
நாயனார் என்ற
எழுவாயும் வருவித்துரைத்துக் கொள்க.
ஊர்
- ஊரிலுள்ளார். ஆகுபெயர். தேவர் பிரான்
அறம் -
சிவதருமம். சரியை முதலாகிய திருத்தொண்டு. தலைநின்ற
-
அவ்வறவொழுக்கத்திற் சிறக்க ஒழுகிநின்ற தொண்டர்க்கே யேவல்
செய்யும் தொழில் பூண்டு (873), அவர்களே தம்மையுடையவராவர்
என்று யாவையும் கொடுத்து (874) வந்த நியதியுடன்
வாழ்ந்தவராதலின் நாயனார் அரன்கழலே வழுத்திப் பெற்ற
இக்குழந்தை பிறந்த மகிழ்விற்செய்யும் அளவில்லாத பெரிய
கொடைகளையும் தொண்டர்க்கே பெருக்கச்
செய்தனர் என்க.
இவையே சிவபுண்ணியமாகிய முத்திநெறியிற் செலுத்தவல்லன்
என்பதும், ஏனையோர்க்குச் செய்யும் கொடைகள்
பசுபுண்ணியங்களாயொழிந்து சுவர்க்க முதலிய போகங்களைத் தந்து
மீளப்பிறவியிற் செலுத்துவன என்பதும் உண்மைநூற் றுணிபாகலின்,
மெய்ப்பொருளை அறிந்துணர்ந்து ஒழுகிய நாயனார் இவ்வாறு
செய்தனர் என்க. உலகை ஆட்கொண்டு வழிகாட்டவந்த
உத்தமர்களாகிய எந்தம் பெருமக்களில் ஒருவராகிய நாயனார்
ஒழுகிக்காட்டிய இந்நெறியினை மக்கள் கடைப்பிடித்து ஒழுகின்
நலம் பெறுவர்.
அளவில்வளத்து
அருள்பெருக்கி - அருள்பெருக்கி -
அன்போடு செய்யும்கொடைகளைப் பெருகச் செய்து. வளத்துஅருள்
- வளங்களைத்தரும் கொடை குறித்து நின்றது. அருள்
- அருளாற்
செய்யும் கொடைப்பொருளுக் காயிற்று. பெருக்கி -
சிவநெறித்
தலைநின்றவர்களுக்குப் பெருக்கினார் என்றதனால், ஏனை
உலகர்க்கு அவ்வவர்க்கு ஏற்றவாறு அளவுபடக் கொடுத்து
மகிழ்வித்தார் என்றும் உணரவைத்தது காண்க. இதனைப்
பெருமூதூர் களிசிறக்க என முன்னர்க் குறிப்பாலுணர்த்தியதும்
காண்க. வெளிப்படச் சிறக்க வேண்டுவன சிவநெறிக் கொடை
என்பதும், ஏனையவெல்லாம் அதன் முன் மறைந்து நிற்கத்தக்கன
என்பதும் உணரவைத்ததும் காண்க. தேவர்பிரான் அறம்
தலைநின்றவர் என்றதற்குச் சிவபிரானருளிய வேத சிவாகமங்களில்
விதித்த அறத்தின் வழி நிற்கும் உலகநிலையினர்க்கு
என்றுரைப்பாருமுண்டு.
புறந்தருவார்
- தாதியர். "போற்றிய தாதியார்" (879) என்றது
காண்க. ஐவகைத்தாயர் என்பாருமுண்டு. புறந்தருதல் -
காப்பாற்றுதல். புறந்தருவார் போற்றிசைப்ப என்றதற்குத்
தம்மைச்
சூழ்ந்திருக்கும் சுற்றத்தார் தம்மைப் புகழ்ந்து கொண்டாட என்றுரை
கூருவாருளர்.
பொற்கொடி
- பொன்னாலாகிய கொடிபோன்ற பெண்மகவு.
உவமை ஆகுபெயர். 12
|